“இது என்ன ஊர்? சிங்கப்பூர்..!”.. “மனம் மயக்கும் மலேசியா”.. வெளிநாடு பறந்த அரசுப் பள்ளி மாணவிகள்..
சென்னை: அரசுப் பள்ளி மாணவர்கள் எல்லாம் மாமல்லபுரத்துக்கும் உதகைக்கும் கல்விச் சுற்றுலா போனது எல்லாம் அந்தக் காலம். மலேசியா, சிங்கப்பூர் என்று கல்விச் சுற்றுலா போவதுதான் இந்தக்கால ட்ரெண்டிங்.
பள்ளிக்கல்வித்துறை மூலம் நடத்தப்பட்ட 'கலைத் திருவிழா' போட்டியில் மாநில அளவில் வெற்றி பெற்ற பிள்ளைகளைப் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ், மலேசியா மற்றும் சிங்கப்பூருக்குக் கல்விச் சுற்றுலா அழைத்துச் சென்றுள்ளார்.

இதுவரை தமிழக பள்ளிக்கல்வித்துறையில் நடைபெறாத மாபெரும் மாற்றம் இது. இந்தச் சுற்றுலாவுக்குத் தேர்வான பிள்ளைகள் என்ன சொல்கிறார்கள்?
"நான் பிறந்து வளர்ந்தது எல்லாம் பெரிய ஊர் இல்லை. சாதாரண குக்கிராமம். கோணாம்பட்டி என்பதுதான் நான் பிறந்த கிராமம். நான் ஸ்டேண்ட் அப் காமெடி நிகழ்ச்சி போட்டியில் கலந்துகொண்டு பல நகைச்சுவைகளைச் சொன்னேன்.

வாத்தியார்கள் எல்லாம் நான் நல்லா காமெடியா பேசுவதா சொல்லிச் சேர்த்து விட்டார்கள். பங்கேற்றுப் பேசினேன். போட்டி முடிவில் மாநில அளவில் முதல் இடத்தைப் பெற்றேன். அது ரொம்ப சந்தோஷமாக இருந்தது. அதற்காகத்தான் இப்போது நான் மலேசியாவுக்குச் சுற்றுலா செல்கிறேன்" என்கிறார் சின்னப் பையன் சின்னய்யா.
இவரது தந்தை, 'என் மூன்று பிள்ளைகளும் சின்ன வயதிலிருந்து அரசுப் பள்ளியில்தான் படித்து வருகிறார்கள். அது எனக்குப்பெருமை' என்கிறார்.

இப்போது சின்னய்யா பெட்டிப் படுகைகளோடு சென்னை வந்து, மலேசியாவுக்குப் பறந்து சென்றுள்ளார். "நான் நினைத்தே பார்க்கவில்லை. எல்லா செலவையும் அரசே செய்து என்னைக் கூட்டிக்கொண்டு செல்கிறது" என்று உள்ளம் மகிழ்கிறார்.
மலேசியா நாட்டிற்குக் கல்விச் சுற்றுலா சென்றுள்ள இந்த மாணவர்களை அங்குள்ள செம்பு தயாரிக்கும் தொழிற்சாலையைப் பார்வையிட அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி அழைத்துச் சென்று பார்வையிட வைத்துள்ளார்.

தேவதர்ஷினிக்கு அடுக்கு மொழியில் தமிழில் பொளந்து கட்டுவது என்றால் கொள்ளை ஆசை. அதனால் கலைத் திருவிழாவில் கலந்துகொண்டு கலைஞரைப் போல அடுக்கு மொழியில் பேசி அசத்தினார். அவர் இப்போது சிங்கப்பூருக்குச் சென்றுள்ளார். 'இந்த வாய்ப்பை ஏற்படுத்தித் தந்த சி.எம். சாருக்கு நன்றி' என்கிறார்
இவரைப் போன்று பேச்சுப் போட்டியில் பாரதிதாசனின் 'நூலைப் படி' பாடலை மடமடவென்று ஒப்பித்து வெற்றி பெற்றுள்ளார் சண்முக ஷிவானி. 'எனது திறமையை ஊக்குவிக்கும்படி 5 நாள் பயணமாகச் சிங்கப்பூருக்குக் கல்விச்சுற்றுலா அழைத்துப் போகிறார்கள். சாதாரண மாணவர்களை, சாதனை மாணவர்களாக மாற்ற அரசு இப்படி எங்களை ஊக்குவித்து வருகிறது. அதற்கு என் நன்றி" என்கிறார் இவர்.

இவரது தாய் லட்சுமியும் ஒரு அரசுப் பள்ளி ஆசிரியைதான். இவரது கணவர் மாநகராட்சியில் பொறியாளராகப் பணியாற்றுகிறார். இவரது தாய் லட்சுமி, "எங்களுக்கு உள்ள வசதிக்கு நிச்சயம் ஒரு ஆங்கிலவழிப் பள்ளியில் என் மகளை நான் சேர்த்து இருக்க முடியும்.
ஆனால் நான் அரசுப் பள்ளியில் என் மகளைச் சேர்த்து உள்ளேன். ஏனென்றால், அரசுப் பள்ளியில் தரமான ஒரு கல்வி கிடைக்கிறது. ஆகவேதான் இந்த முடிவை எடுத்தோம்" என்கிறார்

அபேத், "என் மகளைக் கட்டாயம் அரசுப் பள்ளியில்தான் சேர்க்க வேண்டும் என்று விரும்பினேன். நீண்ட போராட்டத்திற்குப் பின் என் மனைவியிடம் சம்மதம் பெற்றேன். நாங்கள் இருவருமே அரசுப் பணியில்தான் வேலை செய்கிறோம். ஆகவே, தனியார் பள்ளிக்குப் போக என் மனைவி விரும்பினார்.
நாங்கள் இன்றைக்கு இந்த நிலைக்கு உயர்ந்துள்ளதற்கு அரசுப் பள்ளிதான் காரணம். அதையே என் மகளுக்குத் தர விரும்பினோம்" என்கிறார் மாணவி அகழ்விழியின் தந்தை. இவரது மகள் சங்கத்தமிழ் மலர்களின் பெயர்களை மளமளவென்று ஒப்பித்து போட்டியில் வென்று காட்டியுள்ளார்.

இந்தச் சுற்றுலா பற்றி அமைச்சர் அன்பில் மகேஸ், "முதல்வர் ஸ்டாலின் கனவை ஈடுசெய்கின்ற அளவில் ஒவ்வொரு திட்டத்தையும் பார்த்துப் பார்த்து நிறைவேற்றி வருகிறது. அப்படி உருவானதுதான் இந்தக் கலைத் திருவிழாவில் நடத்தப்பட்ட சிறார் இலக்கிய மன்றப் போட்டி.
இந்தப் போட்டியில் மாநில அளவில் வென்ற பிள்ளைகள் அக்கரைச் சீமை அழகைப் பார்க்கச் சிங்கப்பூர் மற்றும் மலேசியா ஆகிய இரு நாடுகளுக்குச்செல்கிறார்கள். இவர்களின் திறமைக்குக் கிடைத்த பரிசு இது.

ஆசிரியர்கள், பிள்ளைகள் எனச் சேர்த்து மொத்தம் 72 பேர் பயணம் செல்கிறோம். நானும் 2 நாள்கள் மாணவர்களைச் சுற்றிக் காட்டுவதற்காக அவர்களுடன் நேரத்தைச் செலவிட இருக்கிறேன்.
இந்தப் பிள்ளைகள் யாரும் விமானத்தை அருகில் சென்று பார்க்காதவர்கள். அவர்கள் இன்று வெளிநாட்டுப் பயணத்தை மேற்கொள்ள உள்ளனர். இந்த வாய்ப்பை ஏற்படுத்தித் தந்த முதல்வருக்கு எங்கள் நெஞ்சார்ந்த நன்றி" என்கிறார் அமைச்சர்.

திண்டுக்கல் மாவட்டம் வத்தலக்குண்டு பக்கம் உள்ள செங்கடாம்பட்டி அரசுப் பள்ளியில் படிக்கும் மாணவி மாணவி சிவஹரிதா அவரது தந்தையுடன் பெட்டிப் படுக்கையுடன் சென்னை வந்து மலேசியாவுக்குப் பறந்துள்ளார். அவரது முதல் வெளிநாட்டுப் பயணம் மட்டுமல்ல இது. முதல் சென்னை பயணமும் இதுதான் என்கிறார்.
இவரது தந்தை மூன்று பெண் பிள்ளைகளையும் அரசுப் பள்ளியில்தான் படிக்கவைத்து வருகிறார்.
"குக்கிராமத்துப் பெண் நான். இன்றைக்கு அரசு உதவியால் மலேசியா போகிறேன். நினைத்துப் பார்த்தால் சந்தோஷம் தாளவில்லை" என்கிறார்.

இவரைப் போலவே "முதல் தடவையா விமானத்தில் பயணம் செய்யப் போகிறேன்" என்கிறார் ராஜ ஹரிணி. "இன்றைக்கு நானும் ஃப்ளைட்ல பறக்கப் போகிறேன்" என்கிறார் நட்சத்திரா.
இவர்கள்தான் வெளிநாடு பறக்கிறார்கள். நம் மனம் மகிழ்ச்சியில் பறக்கிறது. அதுதான் அரசின் வெற்றி.












Click it and Unblock the Notifications