தமிழக ராணுவ வீரர் ஜெயந்த் பலி.. குடும்பத்தினருக்கு அரசுப் பணி வழங்குக.. வலியுறுத்தும் டிடிவி தினகரன்
ஹெலிகாப்டர் விபத்தில் உயிரிழந்த ராணுவ வீரரான மேஜர் ஜெயந்தின் குடும்பத்தில் ஒருவருக்கு அரசுப் பணி வழங்க டிடிவி தினகரன் வலியுறுத்தியுள்ளார்.
சென்னை: அருணாச்சலப் பிரதேசத்தில் நேற்று நடைபெற்ற ஹெலிகாப்டர் விபத்தில் உயிரிழந்த தமிழ்நாட்டைச் சேர்ந்த ராணுவ வீரரான மேஜர் ஜெயந்த்-ற்கு அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் இரங்கல் தெரிவித்துள்ளார். அதேபோல் ஜெயந்தின் குடும்பத்தைச் சேர்ந்த ஒருவருக்கு அரசு பணி வழங்க வேண்டும் என்றும் டிடிவி தினகரன் வலியுறுத்தியுள்ளார்.
சீன எல்லையை ஒட்டி அமைந்து உள்ள வடகிழக்கு மாநிலமான அருணாச்சல பிரதேசத்தின் மண்டாலா மலைப் பகுதியில் இந்திய ராணுவத்திற்கு சொந்தமான சீட்டா என்ற ஹெலிகாப்டர் நேற்று காலை 9:15 மணியளவில் புறப்பட்டது.
இந்த ஹெலிகாப்டரில் இரண்டு பைலட்டுகள் இருந்தனர். ஹெலிகாப்டர் புறப்பட்ட சிறிது நேரத்தில் கட்டுப்பாட்டு அறையுடனான தொடர்பை இழந்தது. ஹெலிகாப்டர் விழுந்து விபத்துக்குள்ளானது தெரியவந்தது.

ஹெலிகாப்டர் விபத்து
திராங் பகுதியில் இருந்து தவாங் செல்லும் வழியில் உள்ள பொம்திலா என்ற மலைப்பகுதிகள் நிறைந்த இடத்தில் விபத்து ஏற்பட்டது. தொடர்ந்து ஹெலிகாப்டரில் இருந்த விமானிகளை மீட்புப் படையினர் தீவிரமாக தேடி வந்தனர். பல மணி நேர தேடுதல் வேட்டைக்கு பின், ஹெலிகாப்டரில் பயணம் செய்த இரண்டு விமானிகளும் உயிரிழந்தது தெரியவந்தது.

தமிழக விமானி பலி
லெப்டினண்ட் வி.வி.பி ரெட்டி மற்றும் அவரது உதவி விமானி மேஜர் ஜெய்ந்த் என்று அடையாளம் காணப்பட்டு இருந்த நிலையில், ஹெலிகாப்டர் விபத்தில் பலியான மேஜர் ஜெயந்த் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர் என்று தெரியவந்தது. தேனி மாவட்டத்தில் உள்ள ஜெயமங்கலம் பகுதியைச் சேர்ந்த ஜெயந்த் ஹெலிகாப்டர் விபத்தில் பலியானது அப்பகுதியை சோகத்தில் மூழ்க வைத்துள்ளது.

டிடிவி தினகரன் இரங்கல்
தமிழ்நாட்டைச் சேர்ந்த விமானியான மேஜர் ஜெயந்த் உயிரிழந்ததற்கு அரசியல் கட்சியினர் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் தனது ட்விட்டர் பக்கத்தில், அருணாசலப்பிரதேச மாநிலத்தில் இந்திய ராணுவத்துக்கு சொந்தமான ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளானதில் அதில் பயணித்த தேனியை சேர்ந்த ஜெயந்த் என்ற விமானி உயிரிழந்திருப்பதை அறிந்து அதிர்ச்சியடைந்தேன்.

அரசுப் பணி வழங்குக
ஜெயந்த்தை இழந்து வாடும் குடும்பத்தினருக்கும், சக ராணுவ வீரர்களுக்கும், நண்பர்களுக்கும் என் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்வதோடு ஜெயந்தின் குடும்பத்தைச் சேர்ந்த ஒருவருக்கு அரசு பணி வழங்க வேண்டும் என்றும் வலியுறுத்துகின்றேன் என்று பதிவிட்டுள்ளார். உயிரிழந்த விமான ஜெயந்தின் உடல் இன்று மாலை சொந்த ஊருக்கு கொண்டு வரப்பட உள்ளது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications