"யாருக்கு என்பதை விட வாக்களிப்பதே முக்கியம்.." சென்னையில் வாக்களித்த தெலுங்கானா ஆளுநர் தமிழிசை
சென்னை: தெலங்கானா மற்றும் புதுச்சேரி மாநில ஆளுநரான தமிழிசை சவுந்தரராஜன் விருகம்பாக்கத்தில் உள்ள வாக்குச்சாவடியில் தனது வாக்கை பதிவு செய்தார்.
சென்னை உட்பட 21 மாநகராட்சிகள், 138 நகராட்சிகள், 490 பேரூராட்சிகள் என, தமிழகத்தில் உள்ள 649 நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கு, வார்டு வரையறை செய்யப்பட்டபடி, ஒரே கட்டமாக இன்று நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் நடைபெறுகிறது
மொத்தம் 12,000க்கும் மேற்பட்ட உள்ளாட்சி பிரதிநிதிகளைத் தேர்ந்தெடுக்க இன்று வாக்குப்பதிவு நடைபெற்று வரும் நிலையில், வரும் பிப்ரவரி 22இல் முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன.

தமிழிசை சவுந்தரராஜன்
அதைத் தொடர்ந்து வரும் மார்ச் 4இல் மேயர், நகர்மன்ற தலைவர்களைத் தேர்வு செய்ய மறைமுகத் தேர்தல் நடைபெறுகிறது. இன்று காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கிய நிலையில், மக்கள் ஆர்வத்துடன் வாக்களித்து வருகின்றனர். இந்நிலையில், தெலங்கானா மற்றும் புதுச்சேரி மாநில ஆளுநரான தமிழிசை சவுந்தரராஜன் விருகம்பாக்கத்தில் உள்ள வாக்குச்சாவடியில் காலையிலேயே தனது வாக்கை பதிவு செய்தார்.

வாக்களிப்பது முக்கியம்
அதன் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், "தெலங்கானா ஆளுநராகவும் புதுச்சேரி துணைநிலை ஆளுநராகவும் இருந்த போதிலும் தமிழ்நாட்டில் எனது வாக்கைச் செலுத்தியதில் எனக்குப் பெருமை தான். உள்ளாட்சித் தேர்தல் முக்கியமானது என்பதை மக்கள் புரிந்து கொள்ள வேண்டும். யாருக்கு வாக்களிக்கிறார்கள் என்பது முக்கியமல்ல. கட்டாயம் வாக்களிக்க வேண்டும் என்பதே முக்கியம்.

ஜனநாயக கடைமை
பொதுமக்கள் அனைவரும் தங்கள் ஜனநாயக கடைமையை ஆற்ற வேண்டும். மக்கள் அனைவரும் வாக்களியுங்கள். உள்ளாட்சித் தேர்தல் என்பது நம்முடன் நெருங்கி பணியாற்றும் உள்ளாட்சி அமைப்புகளைச் சேர்ந்த நிர்வாகிகளைத் தேர்ந்தெடுக்கும் தேர்தல் என்பதால் பொதுமக்கள் அனைவரும் வாக்களிக்க வேண்டும். தெலங்கானாவில் இன்று பழங்குடியினர் பங்கேற்கும் மாபெரும் யாத்திரை நடைபெறுகிறது. இதனால் தான் முதல் நபராக வாக்களித்துவிட்டுக் கிளம்புகிறேன். அதில் எனக்குப் பெருமை தான்.

கொரோனா வழிகாட்டுதல்கள்
அனைவரும் கொரோனா வழிகாட்டுதல்களைப் பின்பற்றி வாக்களிக்க வேண்டும். வாக்களிக்க வரிசையில் நிற்கும்போதும் கொரோனா வழிகாட்டுதல்களை அனைவரும் பின்பற்ற வேண்டும்" என்று அவர் தெரிவித்தார். தமிழ்நாட்டில் சில இடங்களில் சிறு சலசலப்பு ஏற்பட்டுள்ள போதிலும், பெரும்பாலான இடங்களில் மிகவும் அமைதியான முறையிலேயே நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நடைபெற்று வருகிறது.












Click it and Unblock the Notifications