"அறிவை விதைத்தவர்.." பங்காரு அடிகளார் மறைவு.. பிரதமர் மோடி, அமைச்சர் அமித் ஷா இரங்கல்
சென்னை: மேல்மருவத்தூர் பங்காரு அடிகளார் இன்று மாரடைப்பால் காலமான நிலையில், அவரது மறைவுக்கு பிரதமர் மோடி, ஆளுநர் ரவி, மத்திய அமைச்சர் அமித் ஷா உள்ளிட்டோர் இரங்கல் தெரிவித்துள்ளனர்.
செங்கல்பட்டு மேல் மருவத்தூரில் ஆதிபராசக்தி சித்தர் பீடத்தை நிறுவிய, அதற்குத் தலைவராகவும் இருந்தவர் பங்காரு அடிகளார். உலகெங்கும் அவர் பக்தர்களைக் கொண்டிருந்த நிலையில், அவரது அருள் வாக்கு ஏழை மக்கள் பலருக்கும் நம்பிக்கையாக இருக்கிறது.

அவரது பக்தர்கள் அன்பாக "அம்மா" என்றே அவரை அழைப்பார்கள். ஆன்மீகம் மட்டுமின்றி பல மருத்துவக் கல்லூரி, பொறியியல் கல்லூரிகள் எனப் பல கவ்வி நிறுவனங்களும் ஆதிபராசக்தி சித்தர் பீடம் சார்பில் நடத்தப்பட்டு வருகிறது.
பங்காரு அடிகளார்: மேலும், ஆதிபராசக்தி சித்தர் பீடத்தில் கருவறையில் பெண்களைப் பூஜை செய்யலாம், மாதவிடாய் நாட்கள் உட்பட அனைத்து நாட்களிலும் பெண்கள் வழிபடலாம் எனப் பல ஆன்மீகத்தில் புரட்சிகளைச் செய்தவர். இதற்கிடையே உடல்நலக்குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த பங்காரு அடிகளார், திடீரென இன்று மாரடைப்பால் காலமானார். அவரது மறைவு பக்தர்களை கடும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
அவரது உடல் இப்போது அஞ்சலிக்கு வைக்கப்பட்டுள்ள நிலையில், பல்வேறு ஊர்களில் இருந்தும் பக்தர்கள் மேல்மருவத்தூரை நோக்கி வந்து கொண்டிருக்கிறார்கள். மேலும், பங்காரு அடிகளாரின் உடலைப் பார்க்கும் பக்தர்கள் கதறி அழுகிறார்கள். பங்காரு அடிகளாருக்கு நாளை இறுதிச் சடங்கு நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மேல் மருவத்தூர் பங்காரு அடிகளார் மறைவுக்கு பல்வேறு அரசியல்வாதிகள், தலைவர்கள் உட்பட பல்வேறு தரப்பினரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
பிரதமர் மோடி: இது குறித்து பிரதமர் மோடி வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், "ஸ்ரீ பங்காரு அடிகளார் ஐயா அவர்களின் மறைவு ஆழ்ந்த வருத்தத்தை அளிக்கிறது. ஆன்மிகமும் கருணையும் நிறைந்த அவரது வாழ்க்கை என்றென்றும் பலருக்கு வழிகாட்டும் வெளிச்சமாக இருக்கும். மனித குலத்திற்கான தனது அயராத சேவை மற்றும் கல்விக்கான முக்கியத்துவத்தின் மூலம், அவர் பலரின் வாழ்க்கையில் நம்பிக்கை மற்றும் அறிவை விதைத்தார். அவரது பணி பல தலைமுறைகளுக்கு ஊக்கமளித்து வழிகாட்டும். அவரது குடும்பத்தினருக்கும் அபிமானிகளுக்கும் இரங்கல்கள். ஓம் சாந்தி" என்று பதிவிட்டுள்ளார்.
அதன்படி தமிழ்நாடு ஆளுநர் ரவி வெளியிட்டுள்ள இரங்கல் குறிப்பில், "'அம்மா' பங்காரு அடிகளாரின் மறைவால் வருத்தமடைந்தேன். பண்பட்ட ஆன்மா & சிறந்த ஆன்மிக குரு அவர். கல்வி, சுகாதாரம், சமூக சீர்திருத்தங்களுக்கான அவரது பங்களிப்புகள் என்றும் நம்மை ஊக்குவிக்கும். அவரது குடும்பத்தினருக்கும் பக்தர்களுக்கும் ஆழ்ந்த அனுதாபங்கள். ஓம் சாந்தி!" என்று தெரிவித்துள்ளார்.
அமித் ஷா: இது தொடர்பாக மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, "மேல்மருவத்தூர் சித்தர் பீடத்தின் தலைவர் பத்மஸ்ரீ பங்காரு அடிகளார் மறைவு ஆழ்ந்த வருத்தத்தை அளிக்கிறது. அடிகளார் ஆன்மீக நுண்ணறிவுகளுக்காக நன்கு அறியப்பட்டவர், அவரது ஆன்மீகம், சடங்கு நடைமுறைகளுக்கு அப்பாற்பட்ட ஒன்று. இந்த துயரமான நேரத்தில் அவரது குடும்பத்தினருக்கும் பக்தர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்" என்று தமிழில் தனது இறங்கலைப் பதிவிட்டுள்ளார்.
ஜே பி நட்டா: அதேபோல ஜே பி நட்டாவும் தனது எக்ஸ் பக்கத்தில் இரங்கலைப் பதிவிட்டுள்ளார். இது தொடர்பாக நட்டா தனது எக்ஸ் பக்கத்தில், "மேல்மருவத்தூர் சித்தர் பீடத்தை நிறுவிய பத்மஸ்ரீ பங்காரு அடிகளார் காலமானார் என்பதை அறிந்து வேதனை அடைந்தேன். அவரது எளிமை மற்றும் அவரது சேவை என்றென்றும் நினைவுகூரப்படும். இதன் காரணமாகவே அவரது பக்தர்கள் அவரை அம்மா என்று அன்புடன் அழைத்தனர்.
இந்த துயரமான நேரத்தில் அவரது குடும்ப உறுப்பினர்களுக்கும் ஆதரவாளர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன். இந்த வேதனையைத் தாங்கும் சக்தியை எல்லாம் வல்ல இறைவன் அவர்களுக்குத் தரப் பிரார்த்தனை செய்கிறேன். ஓம் சாந்தி" எனப் பதிவிட்டுள்ளார்.












Click it and Unblock the Notifications