“நோ சான்ஸ்”.. ஆளுநர் கையெழுத்து போட்டே ஆகனும்! ஆன்லைன் ரம்மி தடை கன்ஃபார்ம் - சட்டம் என்ன சொல்கிறது?
தற்போது மசோதாவை திருப்பி அனுப்பிய ஆளுநர், தமிழ்நாடு அரசுக்கு ஆன்லைன் சூதாட்ட தடை சட்டத்தை கொண்டு வர முகாந்திரம் இல்லை என்று கூறி இருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது
சென்னை: தமிழ்நாட்டில் ஆன்லைன் சூதாட்டத்திற்கு தடை விதிக்க தமிழ்நாடு அரசு நிறைவேற்றிய அவசர சட்டத்துக்கு ஒப்புதல் அளிக்காத தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி, அதை திருப்பி அனுப்பிய நிலையில் 2 வது முறையாக அந்த மசோதாவை நிறைவேற்றி அனுப்பினால் அதற்கு நிச்சயம் ஆளுநர் ஒப்புதல் தெரிவிக்க வேண்டும் என சட்டம் கூறுவதாக தெரிவிக்கின்றனர்.
ஆன்லைன் ரம்மி விளையாடி பல லட்சக்கணக்கில் பணத்தை இழந்த பலர் அடுத்தடுத்து கொரோனா ஊரடங்கு காலத்தில் தற்கொலை செய்துகொண்டனர். தமிழ்நாடு அரசு இதற்கு தடை விதிக்க வேண்டும் என பலர் அழுத்தம் கொடுத்தனர்.
இதனை அடுத்து கடந்த 2020 ஆம் ஆண்டு நவம்பர் 21 ஆம் தேதி அப்போது ஆட்சியில் இருந்த அதிமுக அரசு ஆன்லைன் ரம்மிக்கு தடை விதித்து சட்டம் நிறைவேற்றியது. இதனை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் அன்லைன் சூதாட்ட நிறுவனங்கள் வழக்கு தொடர்ந்தன.

சந்துரு தலைமையில் குழு
வழக்கை விசாரித்த உயர்நீதிமன்றம் ஆன்லைன் சூதாட்டத்துக்கு விதிக்கப்பட்ட தடையை ரத்து செய்தது. தமிழ்நாடு அரசு இது தொடர்பாக அவசர சட்டத்தை நிறைவேற்றலாம் எனவும் நீதிமன்றம் பரிந்துரைத்தது. இதையடுத்து ஆட்சிக்கு வந்த திமுக அரசு ஆன்லைன் ரம்மிக்கு அவசர தடை விதிப்பது தொடர்பாக ஓய்வுபெற்ற நீதிபதி சந்துரு தலைமையில் குழு அமைத்தது.

காலாவதியான அவசர சட்டம்
இதையடுத்து தமிழ்நாடு சட்டசபையில் அவசர சட்டத்தை கடந்த 2022 அக்டோபர் மாதம் தமிழ்நாடு அரசு இயற்றி ஆளுநருக்கு அனுப்பி வைத்தது. ஆனால், ஆளுநர் ரவி அவசர சட்டத்துக்கு ஒப்புதல் அளிக்க காலதாமதம் செய்தார். இந்த நிலையில் கடந்த நவம்பர் 27 ஆம் தேதியுடன் அவசர சட்டம் காலாவதியானது.

திருப்பி அனுப்பிய ஆளுநர்
ஆன்லைன் சூதாட்டத்தால் இதுவரை உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 47 ஆக அதிகரித்து உள்ளது. இந்த நிலையில் ஆன்லைன் சூதாட்டத்துக்கு தடை விதிக்கும் அவசர சட்ட மசோதா ஆளுநருக்கு அனுப்பி வைக்கப்பட்டு 142 நாட்கள் கடந்துவிட்டது. இந்த நிலையில் அவசர சட்டத்தில் திருத்தங்கள் செய்யுமாறு தமிழ்நாடு அரசுக்கு மசோதாவை ஆளுநர் ஆர்.என்.ரவி திருப்பி அனுப்பி உள்ளார்.

ஆளுநர் எழுப்பிய கேள்வி
கடந்த சில மாதங்களுக்கு முன்பும் இந்த மசோதா தொடர்பாக ஆளுநர் ரவி அரசிடம் சில கேள்விகளை எழுப்பி இருந்தார். அதில் மாநில அரசுக்கு ஆன்லைன் ரம்மிக்கு தடை விதிக்கும் அதிகாரம் உள்ளதா? தடையை மீறுபவர்களுக்கு விதிக்கப்படும் தண்டனையை மாநில அரசால் நிர்ணயிக்க முடியுமா என ஆளுநர் கேட்டதாக கூறப்பட்டது. இந்த கேள்விகளுக்கு தமிழ்நாடு அரசு பதில் கடிதம் ஒன்றையும் அனுப்பியது.

சாத்தியமா?
தற்போது மசோதாவை திருப்பி அனுப்பிய ஆளுநர், தமிழ்நாடு அரசுக்கு ஆன்லைன் சூதாட்ட தடை சட்டத்தை கொண்டு வர முகாந்திரம் இல்லை என்று கூறி இருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. சட்டப்படி இந்த மசோதா எப்படி சாத்தியமாகும்? என்றும் அவர் கேள்வி எழுப்பி இருப்பதாக கூறப்படுகிறது.

200 வது சட்டப்பிரிவு
இந்த நிலையில் இந்த 162 சட்டப்பிரிவை பயன்படுத்தி தமிழ்நாடு அரசே அவசர சட்டமாக நிறைவேற்றி செயல்பாட்டுக்கு கொண்டு வரலாம் என்று சட்ட வல்லுநர்கள் கூறுகின்றனர். அதேபோல், அரசியலமைப்பு சட்டம் 200 வது பிரிவின்படி இந்த சட்டத்துக்கு ஒப்புதல் பெறலாம் என்று சட்ட வல்லுநர்கள் தெரிவிக்கின்றனர்.

ஆளுநர் கையெழுத்து போட்டே ஆகனும்
ஆளுநர் திருப்பி அனுப்பிய சட்டத்தை திருத்தம் செய்தோ அல்லது திருத்தம் செய்யாமலோ சட்டப்பேரவையில் அரசு இயற்றி அனுப்பும் போது அதற்கு இந்த 200 வது சட்டப்பிரிவின் கீழ் ஆளுநர் உடனடியாக ஒப்புதல் அளிக்க வேண்டியது கடமை என்று கூறுகிறார்கள். எனவே எப்படியும் ஆன்லைன் சூதாட்ட தடை தமிழ்நாட்டில் நிச்சயம் வரும் என்று கூறப்படுகிறது.












Click it and Unblock the Notifications