முதல்வரின் நேரத்தை வீணடிக்கிறார் ஆளுநர் ரவி.. யாரையும் கேட்காம எப்படி? வரிந்து கட்டி வந்த வில்சன்!
சென்னை: அமைச்சரவையில் இருந்து நீக்குவதாக ஒரு கடிதம், பின்னர் இரவில் அதை வேண்டாம் என ஒரு கடிதம் என முதலமைச்சரின் நேரத்தை வீணடிக்கிறார் ஆளுநர் ஆர்.என்.ரவி என கடுமையாக விமர்சித்துள்ளார் திமுக எம்.பியும் மூத்த வழக்கறிஞருமான பி.வில்சன்.
அமைச்சர் செந்தில் பாலாஜி மீது ஊழல் தொடர்பான வழக்குகள் நிலுவையில் உள்ள நிலையில் அமலாக்கத்துறை விசாரணை பாதிக்கப்படும் என்பதால் அமைச்சரவையில் இருந்து செந்தில் பாலாஜியை நீக்குவதாக ஆளுநர் ரவி உத்தரவிட்டிருந்த நிலையில், அடுத்த சில மணி நேரங்களிலேயே இந்த உத்தரவு நிறுத்தி வைக்கப்பட்டது.

அமைச்சரவையில் இருந்து நீக்கும் முடிவு குறித்து அட்டர்னி ஜெனரலிடம் சட்ட ஆலோசனை கேட்க ஆளுநர் ரவி முடிவெடுத்துள்ளதால், அதுவரை தனது முந்தைய உத்தரவை நிறுத்தி வைப்பதாக முதல்வருக்கு ஆளுநர் நேற்று இரவு கடிதம் எழுதினார். ஆளுநர் மாளிகை அறிவிப்பு வெளியான சில மணி நேரங்களிலேயே இந்த ட்விஸ்ட் நடந்தது.
இது குறித்து ஆளுநர் ரவியை கடுமையாக விமர்சித்துள்ள திமுக ராஜ்யசபா எம்.பி வில்சன், "தமிழ்நாடு அரசுடன் மோதல் போக்குடனேயே ஆளுநர் செயல்பட்டு வருகிறார். தேவையில்லாத விஷயங்களில் ஆளுநர் தொடர்ந்து தலையிட்டு வருகிறார். உள்துறை அமைச்சகம், உள்துறை அமைச்சர், சட்ட வல்லுநர்கள் என யாரிடமும் ஆலோசிக்காமல், தனக்கு தோன்றியபடி செந்தில் பாலாஜியை அமைச்சரவையில் இருந்து நீக்குவதாக கடிதம் எழுதியுள்ளார் ஆளுநர் ரவி.
காலையில் ஒரு கடிதம் எழுதுவீர்கள், இரவில் அதை வேண்டாம் என கூறுவீர்கள்.. முதலமைச்சரின் நேரத்தை வீணடிக்கிறார் ஆளுநர் ஆர்.என்.ரவி. வழக்குகளை எதிர்கொள்பவர்கள் அமைச்சரவையில் நீடிக்கக் கூடாது என்றால், மத்திய அமைச்சரவையில் உள்ள 33 அமைச்சர்களை நீக்கச் சொல்லி பிரதமர் மோடிக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி கடிதம் எழுதுவாரா?
செந்தில் பாலாஜியை அமைச்சரவையில் இருந்து நீக்குவதாக ஆளுநர் எழுதிய கடிதம் தமிழ்நாடு அரசை எந்த வகையிலும் கட்டுப்படுத்தாது. பதவி நீக்க உத்தரவை ஒட்டுமொத்தமாக முதலமைச்சர் நிராகரிப்பதே சரியாக இருக்கும். பல்வேறு மசோதாக்களை நிலுவையில் வைத்துள்ள ஆளுநர், செந்தில் பாலாஜி பதவி நீக்கத்தில் மட்டுமே கவனம் செலுத்தி வருகிறார்.
தற்போது மத்திய உள்துறை அமைச்சகத்தின் அறிவுறுத்தல்படி செந்தில் பாலாஜியை அமைச்சர் பதவியில் இருந்து நீக்கிய உத்தரவை ஆளுநர் நிறுத்தி வைத்துள்ளதாக கூறப்படுகிறது. மாநில அரசுடன் தொடர்ந்து மோதல் போக்கை கடைபிடித்து வரும் ஆளுநரை, மத்திய அரசு திரும்பப் பெற வேண்டும்" என வலியுறுத்தியுள்ளார்.












Click it and Unblock the Notifications