தேநீர் விருந்து.. தொலைபேசி மூலம் முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு ஆளுநர் அழைப்பு.. திமுக முடிவு என்ன?
குடியரசு தின தேநீர் விருந்தில் பங்கேற்க முதல்வருக்கு தொலைபேசி மூலம் ஆளுநர் ஆர்.என்.ரவி அழைப்பு
சென்னை: குடியரசு தின தேநீர் விருந்தில் பங்கேற்க வருமாறு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு தொலைபேசி மூலமாக ஆளுநர் ஆர்.என்.ரவி அழைப்பு விடுத்துள்ளார். ஏற்கனவே ஆளுநரின் தேநீர் விருந்தை திமுக கூட்டணியில் உள்ள கட்சிகள் புறக்கணித்துள்ள நிலையில், ஆளுநரின் அழைப்பை திமுக ஏற்குமா என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.
அண்மைக் காலமாக ஆளுநர் ஆர்.என்.ரவி - தமிழ்நாடு அரசு இடையிலான மோதல் அதிகரித்து வந்தது. குறிப்பாக தமிழ்நாடு பெயர் விவகாரம், சட்டசபையில் தமிழ்நாடு அரசு அளித்த உரையில் மாற்றம் செய்து படித்தது உள்ளிட்டவை பரபரப்பை ஏற்படுத்தியது.
இதற்கு கண்டனம் தெரிவித்ததோடு, ஆளுநர் ஆர்.என்.ரவி மீது அமைச்சர் ரகுபதி தலைமையில் திமுக நாடாளுமன்ற உறுப்பினர்கள் குடியரசுத் தலைவர் திரெளபதி முர்முவிடம் புகார் அளிக்கப்பட்டது.

தேநீர் விருந்து
அதேபோல் ஆளுநர் மாளிகையில் நடைபெற்ற பொங்கல் விழாவையும் திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சி எம்எல்ஏ-க்கல் புறக்கணித்தனர். இந்த நிலையில் ஒவ்வொரு ஆண்டும் குடியரசு தின விழாவை முன்னிட்டு ஆளுநர் மாளிகையில் அனைத்து கட்சியினருக்கும் தேநீர் விருந்து அளிப்பது மரபாகும். குடியரசு நாளன்று மாலை 4.30 மணியளவில் ஆளுநர் மாளிகையில் தேநீர் விருந்து நடைபெறவுள்ளது.

ஆளுநர் மாளிகை அழைப்பிதழ்
இதனைத் தொடர்ந்து குடியரசு தின விழாவை முன்னிட்டு ஆளுநர் மாளிகையில் நடைபெறவிருக்கும் தேநீர் விருந்துக்கு அரசியல் கட்சிகளின் எம்பி-க்கள், எம்எல்ஏ-க்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. குறிப்பாக அழைப்பிதழில் தமிழ்நாடு என்றும், அரசின் இலச்சினையை பொறித்தும் தேநீர் விருந்துக்கு ஆளுநர் மாளிகை தரப்பில் அழைப்பிதழ் தயாரிக்கப்பட்டு வெளியிடப்பட்டது.

புறக்கணிப்பு
இருப்பினும் தேநீர் விருந்தை புறக்கணிப்பதாக திமுக கூட்டணியில் காங்கிரஸ், விசிக, மதிமுக, சிபிஎம், சிபிஐ, தமிழக வாழ்வுரிமை கட்சி உள்ளிட்டவை அறிவித்துள்ளனர். இந்த நிலையில் ஆளுநர் மாளிகையில் நடைபெற உள்ள தேநீர் விருந்தில் பங்கேற்க வருமாறு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு தொலைபேசி மூலமாக ஆளுநர் ஆர்.என்.ரவி அழைப்பு விடுத்துள்ளார்.

திமுக பங்கேற்குமா?
அதேபோல் ஆளுநரின் தனிச்செயலாளர் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை சந்தித்து அழைப்பிதழையும் வழங்கியுள்ளார். ஆளுநருக்கும் தமிழ்நாடு அரசுக்கும் இடையே மோதல் நிலவி வரும் சூழலில், ஆளுநர் ஆர்.என்.ரவியின் அழைப்பு முக்கியத்துவம் பெற்றுள்ளது. அதேபோல் ஆளுநர் ஆர்.என்.ரவியின் தேநீர் விருந்து அழைப்பை ஏற்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பங்கேற்பாரா என்ற கேள்வி எழுந்துள்ளது.












Click it and Unblock the Notifications