‛‛சொக்கத்தங்கம்யா அவரு’’.. விஜயகாந்தின் பாதத்தை வணங்கிய ஆளுநர் ஆர்என் ரவி.. நேரில் அஞ்சலி
சென்னை: சென்னை தீவுத்திடலில் வைக்கப்பட்டு இருந்த மறைந்த நடிகர் விஜயகாந்துக்கு ஆளுநர் ஆர்என் ரவி மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தியபோது அவரது பாதத்தை தொட்டு வணங்கினார்.
நடிகராக இருந்து அரசியலில் நுழைந்தவர் விஜயகாந்த். எம்எல்ஏ, எதிர்க்கட்சி தலைவர் வரை உயர்ந்த அவர் கடந்த சில ஆண்டுகளாக உடல்நலம் பாதிக்கப்பட்டு வந்தார்.

இந்நிலையில் தான் சென்னை மியாட் மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த விஜயகாந்த் நேற்று காலமானார். சிகிச்சை பலனின்றி நேற்று காலையில் அவரது உயிர் பிரிந்தது.
இதையடுத்து நேற்று விஜயகாந்தின் உடல் சென்னை கோயம்பேடு தேமுதிக அலுவலகத்திலும், இன்று காலை முதல் தீவுத்திடலில் அவரது உடல் வைக்கப்பட்டு இருந்தது. பொதுமக்கள், அரசியல் தலைவர்கள், திரை பிரபலங்கள் விஜயகாந்துக்கு அஞ்சலி செலுத்தினர். ஆளுநர் ஆர்என் ரவியும் இன்று நேரில் அஞ்சலி செலுத்தினார். சென்னை தீவுத்திடலில் வைக்கப்பட்டு இருந்த விஜயகாந்தின் உடலுக்கு மலர்வளையம் வைத்தார்.
அதோடு அங்கு நின்ற விஜயகாந்தின் மனைவி பிரேமலதாவுக்கு ஆர்என் ரவி இரங்கல் தெரிவித்தார். முன்னதாக அஞ்சலி செலுத்த வந்த ஆர்என் ரவி தான் அணிந்திருந்த ஷூவை கழற்றிவிட்டு விஜயகாந்தின் உடல் வைக்கப்பட்டு இருந்த கண்ணாடி பேழையின் மீது மலர்வளையம் வைத்தார். அதன்பிறகு அவர் விஜயகாந்தின் உடலை பார்த்து கைகூப்பி சில வினாடிகள் வணங்கியதோடு கண்ணாடி பேழையில் தெரிந்த விஜயகாந்தின் பாதத்தை தொட்டு வணங்கினார்.
அதன்பிகு சென்னை தீவுத்திடலில் இருந்து விஜயகாந்தின் உடல் இறுதி ஊர்வலமாக எடுத்து செல்லப்பட்டு வருகிறது. மாலை 4.45 மணிக்கு தேமுதிக தலைமை அலுவலகத்தில் அவரது உடல் இறுதி சடங்குகளுடன் நல்லடக்கம் செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டது. ஆனால் ஏராளமான ரசிகர்கள், தொண்டர்கள் திரண்டுள்ளனர். இதனால் இறுதி ஊர்வலம் மெல்ல மெல்ல நகர்ந்து செல்கிறது. இதனால் உடல் அடக்கம் செய்வதில் தாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது.

நடிகராக இருந்தபோதும், அரசியலில் ஜொலித்தபோது நடிகர் விஜயகாந்த் ஏழைகள், வறுமையில் வாடும் திரைத்துறை கலைஞர்களுக்கு உதவுவதை மட்டும் கைவிடவே இல்லை. இப்படியான சொக்கத்தங்கமான விஜயகாந்தின் முகத்தை கடைசி ஒருமுறை பார்க்க ஏராளமானவர்கள் சென்னை தேமுதிக அலுவலகம் அருகே திரண்டுள்ளனர்.
இருப்பினும் போதிய இடவசதி இல்லாத காரணத்தினால் விஜயகாந்த் உடல் அடக்கத்தில் முக்கிய பிரமுகர்கள், விஜயகாந்தின் குடும்பத்தினர் என மொத்தம் 200 பேர் மட்டுமே பங்கேற்க உள்ளனர். பொதுமக்களுக்கு அனுமதி வழங்கப்படவில்லை. ஆனாலும் பொதுமக்கள் உடல் அடக்கத்தை பார்த்து அஞ்சலி செலுத்தும் வகையில் தேமுதிக அலுவலகத்தில் எல்இடி ஸ்கீரின் பொருத்தப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications