என்னமோ நடக்குதே! அடுத்தடுத்து காய் நகர்த்திய ஆளுநர் ரவி.. மத்திய அரசின் தலைமை வழக்கறிஞருடன் மீட்டிங்
சென்னை: டெல்லி சென்றுள்ள ஆளுநர் ஆர். என் ரவி மத்திய அரசின் தலைமை வழக்கறிஞருடன் ஆலோசனை செய்து வருகிறார்.
அமலாக்கத்துறை வழக்கிற்கு இடையே கடந்த வாரம் திடீரென செந்தில் பாலாஜியை பதவியில் இருந்து நீக்குவதாக ஆளுநர் ஆர். என் ரவி அறிவித்தார். செந்தில் பாலாஜி பதவியில் தொடர கூடாது. அவர் இலாக்கா இல்லாத அமைச்சராக தொடர்ந்தால் அவர் மீதான விசாரணை சரியாக நடக்காது.

அவரின் விசாரணை நியாயமாக நடக்க வேண்டும் என்றால் அவர் அமைச்சரவையில் நீடிக்க கூடாது. அதனால் அவரை அமைச்சரவை பதவியில் இருந்து நீக்குகிறேன் என்று ஆளுநர் ஆர். என் ரவி அறிவித்தார். சமீபத்தில் செந்தில் பாலாஜியை இலாக்கா இல்லாத அமைச்சராக வைத்துக்கொள்ள முடியாது என்று ஆளுநர் ஆர். என் ரவி கூறினார். அமைச்சரவை மாற்றத்திற்கான உண்மையான காரணத்தை கூற வேண்டும் என்று கோரிக்கை விடுத்தார் .
ஆனால் தமிழ்நாடு அரசு.. செந்தில் பாலாஜியின் இலாக்கா மாற்றத்திற்கு காரணம் அவரின் உடல்நிலைதான் என்று அறிவித்தது. அதோடு இல்லாமல் ஆளுநர் ஆர். என் ரவிக்கு இதில் விளக்கம் கேட்கும் அதிகாரம் எல்லாம் இல்லை என்றும் அறிவித்தது. இதையடுத்து அமைச்சரவை மாற்றத்தை ஏற்றுக்கொள்கிறேன். ஆனால் செந்தில் பாலாஜி இலாக்கா இல்லாத அமைச்சராக தொடர்வதில் எனக்கு விருப்பம் இல்லை என்றும் அறிவித்தார்.
ஆனாலும் செந்தில் பாலாஜி இலாக்கா இல்லாத அமைச்சராக தொடர்வார் என்று அரசாணை வெளியிடப்பட்டது. இந்த நிலையில்தான் அமைச்சர் ஒருவர் மீது புகார் உள்ளதாலும், அவர் நீதிமன்ற காவலில் உள்ளதாலும் அவரை பதவியில் இருந்து நீக்குவதாக ஆளுநர் ஆர். என் ரவி அறிவித்தார். ஆளுநருக்கு பொதுவாக இந்த அதிகாரம் கிடையாது. அமைச்சரை தன்னிச்சையாக நியமிக்கவோ, நீக்கவோ ஆளுநருக்கு அதிகாரம் கிடையாது.
பின்வாங்கினார்: இந்த நிலையில் சரியாக 5 மணி நேரத்தில் ஆளுநர் ஆர். என் ரவி தனது முடிவை மாற்றினார். அதாவது செந்தில் பாலாஜியை நீக்கியது செல்லாது என்று அறிவித்தார். அதோடு இது தொடர்பாக மத்திய உள்துறை அமைச்சகம்தான் தனக்கு அறிவுறுத்தியது. அவர்களின் அறிவுரை காரணமாக எனது அறிவிப்பை நிறுத்தி வைக்கிறேன். அதோடு இது தொடர்பாக மத்திய அரசின் தலைமை வழக்கறிஞரிடம் ஆலோசனை செய்துவிட்டு முடிவு எடுக்கிறேன், என்றும் ஆளுநர் ஆர். என் ரவி தெரிவித்துள்ளார் .
ஆலோசிக்கவில்லை: நேற்று நடந்த இந்த சம்பவங்கள் மூலம் ஆளுநர் ஆர். என் ரவி மத்திய அரசின் தலைமை வழக்கறிஞர் அதாவது அட்டர்னி ஜெனரலிடம் ஆலோசனை செய்யவில்லை என்பது தெளிவாகிறது. அவரிடம் பேசாமலே ஆளுநர் ஆர். என் ரவி முடிவெடுத்துவிட்டார் என்பது தெளிவாகிறது.
பொதுவாக இது போன்ற பெரிய விஷயங்களில் முடிவு எடுக்க ஆளுநர் ரவி தலைமை செயலாளரிடம் ஆலோசனை செய்ய வேண்டும். அல்லது மத்திய உள்துறை அமைச்சகத்திடம் ஆலோசனை செய்ய வேண்டும். அது இரண்டையும் ஆளுநர் செய்யவில்லை என்பது இதன் மூலம் தெளிவாகிறது. அமைச்சர் ஒருவரை நீக்கும் அதிகாரம் இல்லாமலே ஆளுநர் ஆர். என் ரவி செந்தில் பாலாஜியை நேற்று நீக்குவதாக அறிவித்தார்.
இந்த நிலையில்தான் தற்போது டெல்லி சென்றுள்ள ஆளுநர் ஆர். என் ரவி மத்திய அரசின் தலைமை வழக்கறிஞருடன் ஆலோசனை செய்து வருகிறார். மத்திய அரசின் தலைமை வழக்கறிஞர் வெங்கட்ரமணி உடன் ஆர். என் ரவி ஆலோசனை மேற்கொண்டு வருகிறார். இது தொடர்பாக மத்திய அரசின் தலைமை வழக்கறிஞரிடம் ஆலோசனை செய்துவிட்டு முடிவு எடுக்கிறேன், என்றும் ஆளுநர் ஆர். என் ரவி தெரிவித்த நிலையில் தற்போது இந்த ஆலோசனை நடைபெறுகிறது.












Click it and Unblock the Notifications