சென்னையில் பஸ் ஓட்டும் போது வேண்டாத வேலை பார்த்த டிரைவர் - கண்டக்டர்! பாய்ந்தது அதிரடி ஆக்ஷன்!
சென்னை: சென்னையில் அரசு பேருந்தை இயக்கியபடியே ரீல்ஸ் எடுத்து இன்ஸ்டாகிராமில் பதிவிட்ட நடத்துனர் மற்றும் ஓட்டுனர் பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். பயணிகள் பஸ்சில் இருக்கும்போதே எதையும் பொருட்படுத்தாமல் அலட்சியமாக செல்போனில் ரீல்ஸ் பதிவிட்ட சம்பவம் பயணிகள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்த நிலையில் ஒப்பந்த அடிப்படையில் பணியாற்றி வந்த இருவரையும் பணியின் போது ரீல்ஸ் பதிவிட்டதற்காக பணி நீக்கம் செய்து நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
சென்னை மாநகர போக்குவரத்து கழகத்தின் சார்பில் அரசு பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன. புறநகர் மின்சார ரயில் சேவைகளுக்கு அப்புறம் பயணிகள் தேவையை பூர்த்தி செய்வதில் சென்னை மாநகர போக்குவரத்து பஸ்கள் இன்றியமையாததாக உள்ளன. பயணிகள் பாதுகாப்பை உறுதிப்படுத்த தமிழக அரசும் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.

எனினும் ஒருசில ஓட்டுனர்கள் செல்போன் பேசியபடியே பஸ்களை இயக்குவது போன்ற வீடியோக்கள் அவ்வப்போது சமூக வலைத்தளங்களில் வெளியாவதையும், அவர்கள் மீது நடவடிக்கையும் எடுக்கபட்டு வருவதையும் பார்த்திருப்போம். இந்த நிலையில் பயணிகளின் உயிர்களை பற்றி கவலைப்படாமல், டிரைவரும் கண்டக்டரும் பஸ்சை ஓட்டிக்கொண்டே ரீல்ஸ் எடுத்து அதனை இன்ஸ்டாகிராமில் பதிவிட்ட அதிர்ச்சி சம்பவம் நடந்துள்ளது. இந்த நிலையில் அந்த பஸ்சை ஓட்டிய ஓட்டுனர் மற்றும் நடத்துனர் பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.
பயணிகளின் பாதுகாப்பை உறுதி செய்யாமல் அலட்சியமாக செயல்பட்ட காரணத்தால் இருவரையும் பணி நீக்கம் செய்து சென்னை மாநகர போக்குவரத்து கழகம் உத்தரவிட்டுள்ளது. சென்னை மாநகர பேருந்துகளில், பயணிகளின் பாதுகாப்பை உறுதிப்படுத்த வேண்டும், பேருந்துகளை முறையாக, பாதுகாப்பாக இயக்க வேண்டும் என்று ஓட்டுனர்கள் மற்றும் நடத்துனர்களுக்கு அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டு உள்ளது. இந்த நடவடிக்கைகளை மீறியதால் அவர்கள் மீது பணி நீக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
கோயம்பேடில் இருந்து சென்னை கிண்டிக்கு சென்ற அரசு பஸ்சை அங்கு ஒப்பந்த பணியாளராக நியமிக்கப்பட்டிருந்த ஓட்டுனரும், நடத்துனரும் இயக்கியுள்ளனர். பஸ் சாலையில் சென்று கொண்டிருக்கிறது. பயணிகளும் பஸ்சுக்குள்ளே இருக்கின்றனர். அப்போது நடத்துனர் செல்போனுடன் ஓட்டுனர் அருகே சென்று அமர்ந்து இருக்கிறார். பின்னர் இருவரும் செல்போனில் சிரித்தபடியே வீடியோ பதிவு செய்தனர்.

பஸ் சென்றுகொண்டிருக்கும்போதே இருவரும் செல்போனில் ரீல்ஸ் எடுத்துள்ளனர். பஸ்சில் பயணிகள் இருக்கிறார்கள். அவர்கள் உயிருக்கு நாம் தான் பொறுப்பு என்பதை உணராமல் அஜாக்கிரதையாக ரீல்ஸ் எடுத்து அதனை இன்ஸ்டாகிராமில் பதிவிட்டு இருக்கிறார்கள். இந்த வீடியோ இணையத்தில் பரவி டிரெண்ட் ஆனதால் பயணிகள் பலரும் அச்சமடைந்தனர். மேலும் அலட்சியமாக செயல்பட்ட டிரைவர் மற்றும் கண்டக்டர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கோரிக்கை வைத்தனர்.
பணி நேரத்தின் போது செல்போனில் பேசவே அனுமதி இல்லாதபோது, பஸ் சென்று கொண்டு இருக்கும் போது செல்போனில் ரீல்ஸ் பதிவு செய்து வெளியிட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருந்தது. இந்த நிலையில் தான் சென்னை மாநகர போக்குவரத்துக் கழகம் இருவர் மீது நடவடிக்கை எடுத்துள்ளது. சென்னை மாநகர போக்குவரத்து கழகத்தின் நடவடிக்கைக்கு பயணிகள் பாராட்டு தெரிவித்துள்ளனர்.












Click it and Unblock the Notifications