பூந்தமல்லியில் ஆசை ஆசையாய் கோடியில் வீடு கட்டி குடியேறியவருக்கு ட்விஸ்ட்.. விசாரித்தால் அரசு நிலம்
சென்னை: சென்னை புறநகர்பகுதியில் வீடு அல்லது நிலம் வாங்குவோர், அந்த இடத்தின் வகையை அறிய வேண்டும். பட்டா உள்ளதா.. நிலத்தின் அளவும், பட்டா அளவும் சரியாக உள்ளதா என்பதை ஆய்வு செய்ய வேண்டும். எல்லாவற்றுக்கும் மேலாக அது அரசு நிலமா அல்லது பஞ்சமி நிலமா, பூமி தான நிலமா, மேய்ச்சல் நிலமா அல்லது எந்த வகை நிலம் என்பதை அறிய வேண்டும். ஏனெனில் பூந்தமல்லியில் ஆசை ஆசையாய் வீடு கட்டி குடியேறிய பின்னர் தான், அது அரசு நிலம் என்பது ஒருவருக்கு தெரியவந்துள்ளது. அரசு நிலத்தை ரூ.90 லட்சத்துக்கு விற்று மோசடி செய்த முதியவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
சென்னையில் வீடு, நிலம் எல்லாம் வாங்குவது எளிதானது அல்ல.. கோடிகளை கொட்டினாலும் தனி வீடு அல்லது இடம் வாங்குது சவாலாக மாறிவிட்டது. அதனால் சென்னையின் புறநகர் பகுதிகளில் தான் தனி வீடு கட்ட விரும்புவோர் இடம் வாங்குகிறார்கள். கிளாம்பாக்கம் முதல் செங்கல்பட்டு வரை உள்ள பகுதிகளிலும், பூந்தமல்லி முதல் ஆவடி வரை உள்ள பகுதிகளிலும், தாம்பரம் முதல் உரக்கடம் வரை உள்ள பகுதிகளிலும், ரெட் ஹில்ஸ், புழல் பகுதிகளிலும் மக்கள் இடம் வாங்க அதிக ஆர்வம் காட்டுகிறார்கள்.

சென்னையில் வீட்டு மனை
இதேபோல் கிளாம்பாக்கம் முதல் கேளம்பாக்கம் வரை உள்ள சாலை பகுதிகளிலும், மேடவாக்கம் தாண்டி பொன்மார் பகுதிகளிலும், கண்டிகை பகுதிகளிலும் மக்கள் இடம் வாங்க ஆர்வம் காட்டுகிறார்கள். ஆனால் இடம் அல்லது வீடு வாங்க ஆசைப்படும் மக்கள், நிலம் எந்த வகையான நிலம் என்பதை கண்டிப்பாக அறியவேண்டும். அரசு நிலமா அல்லது பஞ்சமி நிலமா, பூமி தான நிலமா, மேய்ச்சல் நிலமா அல்லது அனாதீன நிலமா அல்லது கோயில் நிலமா என்பதை அறிய வேண்டும்.
90 லட்சம் செலவில் வீடு
நத்தம் புறம்போக்கு தவிர வேறு எந்த வகை அரசு நிலமாக இருந்தாலும் வாங்கக்கூடாது. அதேபோல் அரசு நிலத்தை சிலர் அந்த காலத்தில் ஆக்கிரமித்து பத்திரப்பதிவு செய்து வாங்கியிருப்பார்கள். ஆனால் கண்டிப்பாக பட்டா இருக்காது. அப்படிப்பட்ட நிலங்களை சிலர் தெரியாமல் வாங்கி வீடு கட்டுகிறார்கள். அப்படித்தான் ஒருவர் வாங்கி வீடு கட்டி குடியேறியிருக்கிறார். வீடு கட்டி குடியேறிய பின்னர் தான் அரசு நிலம் என்பது தெரியவந்தது. சுமார் 90 லட்சம் அளவிற்கு மோசடி நடந்துள்ளது.
பத்திரப்பதிவு
சென்னை பூந்தமல்லி அடுத்த காட்டுப்பாக்கம் கணபதி நகரை சேர்ந்த 70 வயதாகும் மகாதேவன் என்பவரிடம், வளசரவாக்கம் பெத்தானியா நகர் 1-வது தெருவைச் சேர்ந்த 73 வயதாகும் ஜெயராஜ் என்பவர் காட்டுப்பாக்கம் கணபதி நகரில் 1200 சதுர அடி கொண்ட காலிமனை இருப்பதாகவும், அந்த இடம் பட்டா நிலம் என கூறி மகாதேவனுக்கு குன்றத்தூர் சார்பதிவாளர் அலுவலகத்தில் பத்திரப்பதிவு செய்து கொடுத்திருக்கிறார்.
அரசு நிலம்
நிலத்தை வாங்கிய மகாதேவன், அந்த இடத்தில் வீடு கட்டி குடும்பத்துடன் தற்போது வசித்து வருகிறார். இதற்கிடையில் தான் வாங்கிய நிலத்தின் உண்மை தன்மையை அறிவதற்காக பார்த்தபோது மகாதேவன் வாங்கிய இடம் அரசாங்கத்துக்கு சொந்தமான பூமிதான நிலம் என்பது தெரியவந்தது. அந்த இடத்தை சி.எம்.டி.ஏ. அனுமதி பெற்ற பட்டா நிலம் எனக்கூறி ஜெயராஜ் ஏமாற்றி விற்றதும் தெரிந்து அதிர்ச்சி அடைந்தார்.
முதியவர் கைது
இந்த மோசடி குறித்து ஆவடி போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் உள்ள மத்திய குற்றப்பிரிவு போலீசில் மகாதேவன் புகார் கொடுத்தார். அதன்பேரில் இன்ஸ்பெக்டர் ரமணி வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டார். இதையடுத்து மோசடியில் ஈடுபட்ட ஜெயராஜ் என்பவரை போலீசார் நேற்று கைது செய்து சிறையில் அடைத்தனர். மோசடி செய்யப்பட்ட அரசு நிலத்தின் மதிப்பு ரூ.90 லட்சம் என்று தகவல்கள் வெளியாகி உள்ளது.












Click it and Unblock the Notifications