தங்க ரதம் போல்.. அரசு மல்டி ஆக்சில் சொகுசு பஸ்கள்.. ஆம்னி பஸ்களையே ஆடிப்போக வைக்கும் வசதிகள்
சென்னை: தங்க ரதம் போல் தனியார் ஆம்னி பஸ்களுக்கு நிகராக அரசும் மல்டி ஆக்சில் சொகுசு பஸ்களை வாங்கி உள்ளது. இந்த பேருந்துகள் அனைத்தும் கர்நாடகாவின் பெங்களூருவில் உள்ள பஸ் பாடிக்கட்டும் தொழிற்சாலையில் வடிவமைக்கப்பட்டு அனுப்பப்பட்டு வருகிறது. இதுவரை 8 பேருந்துகள் சென்னைக்கு வந்துள்ளன. இந்த மல்டி ஆக்சில் சொகுசு பஸ்களை கிறிஸ்துமஸ் பண்டிகைக்கு முன்பு இயக்க தமிழ்நாடு அரசு போக்குவரத்துக்கழகம் திட்டமிட்டுள்ளது. இதற்காக முதல்வரிடம் அனுமதியை பெற நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
இதுவரை தனியார் ஆம்னி பேருந்துகள் தான் சாலையில் தங்க ரதம் போல் ஓடி வருகின்றன. ஆம்னி பேருந்துகளை பார்க்கும் சாமானிய மக்கள் இதுபோன்ற பேருந்துகளில் பயணிக்க அதிகம் செலவாகுமே என்று அந்த பக்கமே போவது இல்லை. ஏனெனில் அந்த பேருந்துகளில் டிக்கெட் கட்டணம் சென்னையில் இருந்து வார இறுதிகளில் 2000 வரையிலும், தீபாவளி,கிறிஸ்துமஸ், பொங்கல், தமிழ்புத்தாண்டு, ஆயுத பூஜை, கோடை விடுமுறை போன்ற காலங்களில் 3000 வரையிலும் இருக்கும்.

ஆம்னி பேருந்துகளுக்கு வரவேற்பு அதிகம்
இந்த பேருந்துகளில் சென்றால், அலுப்பே தெரியாது. அவ்வளவு அழகாக வீட்டில் படுக்கை அறைகளில் தூங்கி சென்ற உணர்வுகள் இருக்கும். இதனால் தான் விமானத்தில் செல்ல முடியாத பலர், ரயில்களில் செல்ல முடியாத பலர், ஆம்னி பேருந்துகளை விரும்புகிறார்கள்.ரயில்களில் செல்வதைவிடவும் ஆம்னி பேருந்துகளில் செல்வது பலருக்கும் பிடித்திருக்கிறது. இதனால் ஆம்னி பேருந்துகளுக்கு வரவேற்பும் அதிகமாக உள்ளது.
20 பேருந்துகள் வருகிறது
இதையடுத்து தனியார் ஆம்னி பஸ்களுக்கு நிகராக அரசு பஸ்களை தரம் உயர்த்தும் நடவடிக்கையில் தமிழக அரசும் இறங்கியது. தற்போது ஒரே நேரத்தில் 20 மல்டி ஆக்சில் சொகுசு பஸ்கள் அரசு விரைவு போக்குவரத்துக் கழகத்திற்கு வாங்கப்பட்டுள்ளன. இந்த மல்டி ஆக்சில் சொகுசு பஸ்கள் கர்நாடக மாநிலம் பெங்களூருவில் வடிவமைக்கப்பட்டு வருகிறது. இதுவரை 8 பஸ்கள் சென்னையில் உள்ள அரசு விரைவு போக்குவரத்துக் கழக தலைமை அலுவலக பணிமனைக்கு கொண்டு வரப்பட்டிருக்கிறது.
15 மீட்டர் நீளம்
இந்த மல்டி ஆக்சில் சொகுசு பஸ்கள் 15 மீட்டர் நீளத்தில் தங்க ரதம் போல் வடிமைக்கப்பட்டுள்ளது. முன்பக்கம் தியேட்டர் போன்று தாழ்வாகவும், பின்பக்கம் உயரமாகவும் வடிவமைக்கப்பட்டிருக்கிறது.. பஸ்சின் முன்பகுதி மற்றும் நடுப்பகுதிகளில் டி.வி. திரைகள் அமைக்கப்பட்டிருக்கிறது. மேலும், தீ பிடிப்பதை கண்டறியும் அலாரம் வசதியுடன் தானாகவே தண்ணீரை பீச்சி அடிக்கும் வகையிலான வசதிகளும், தீயணைப்பு கருவிகளும் பொருத்தப்பட்டிருக்கிறது.
சிசிடிவி கேமரா, வயர்லெஸ் மைக்
இந்த மல்டி ஆக்சில் சொகுசு பஸ்களில் சில தனியார் ஆம்னி பேருந்துகளில் உள்ளது போன்ற, சி.சி.டி.வி. கேமரா மற்றும் பயணிகளுடன் பேசுவதற்கான மைக் (வயர்லெஸ்) வசதியும் ஏற்படுத்தப்பட்டிருக்கிறது. ஒவ்வொரு சீட்டிற்கு மேலேயும் ரீடிங் லைட் பொருத்தப்பட்டிருக்கிறது. பஸ்சின் அனைத்து ஜன்னல்களும் அவசர காலத்தில் உடைத்து வெளியேறும் வகையில் வடிவமைக்கப்பட்டிருக்கிறது. ஒவ்வொரு இருக்கையிலும் சீட் பெல்ட் மற்றும் யு.எஸ்.பி. சார்ஜிங் வசதியும் சூப்பராக வடிவமைக்கப்பட்டுள்ளது.
இருசக்கர வாகனத்தை அப்படியே நிறுத்தலாம்
பேருந்தின் அடிப்பக்க உயரத்தை கூட்டவும் முடியும். அதேபோல் பேருந்தின் அடிப்பக்க உயரத்தை குறைக்கும் வசதியும் இருக்கிறது. மேலும் மல்டி ஆக்சில் சொகுசு பஸ்ஸின் அடிப்பாகத்தில் இருசக்கர வாகனத்தை அப்படியே கொண்டு நிறுத்தி வைக்கும் வகையிலான 14 மீட்டர் அளவிற்கான சுமை பெட்டியும் இணைக்கப்பட்டுள்ளது.
கிறிஸ்துமஸ் முதல் இயக்க திட்டம்
இப்படி பல்வேறு வசதிகள் கொண்ட அரசின்மல்டி ஆக்சில் சொகுசு பஸ்களில் 51 இருக்கைகள் உள்ளன. இதுவரை 8 பஸ்கள் வந்துள்ள நிலையில், எஞ்சியுள்ள 12 பஸ்களும் விரைவில் சென்னை வரப்போகிறது. இந்த பேருந்துகளை கிறிஸ்துமஸ், புத்தாண்டு, பொங்கல் என தொடர் பண்டிகைகளை கருத்தில் கொண்டு வருகிற டிசம்பர் 20-ந் தேதிக்குள் கொண்டு வந்துவிட வேலைகள் நடக்கிறது. மேலும் முதல்வர் ஸ்டாலினிடம் பேருந்துகளை இயக்க ஒப்புதல் பெற்று, கிறிஸ்துமஸ் பண்டிகையின் போது (அரையாண்டு விடுமுறை காலம்) இயக்க அரசு விரைவு போக்குவரத்துக் கழகம் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. எனவே கிறிஸ்துமஸ், அரையாண்டு விடுமுறை, புத்தாண்டு, பொங்கலுக்கு ஊருக்கு செல்வோர் இந்த புதிய பேருந்துகளில் செல்லலாம்.
எந்தெந்த ஊர்களுக்கு இயக்கம்
இந்த மல்டி ஆக்சில் சொகுசு பஸ்கள் மதுரை, கோவை, நாகர்கோவில், திருநெல்வேலி, பெங்களூர், தஞ்சாவூர், தேனி போன்ற வழித்தடங்களில் இயக்க அதிக வாய்ப்பு உள்ளது. எந்தந்த ஊர்களுக்கு எத்தனை மல்டி ஆக்சில் சொகுசு பஸ்கள் வழங்கப்பட உள்ளன என்பது இதுவரை தெளிவாக தெரியவில்லை..












Click it and Unblock the Notifications