ஏழைகளுக்கு இரங்கும் சூப்பர் நண்பர்கள்.. நீங்களும் கை கொடுக்கலாமே!
சென்னை: சென்னை கிழக்குக் கடற்கரைச் சாலை பகுதியில் தவ்ஹீத் ஜமாத், மனித நேய இயக்கம், சுன்னத் ஜமாத் நண்பர்கள் இணைந்து, ஏழை எளிய மக்களுக்கு உதவிகள் செய்து வருகின்றனர்.
கொரோனாவால் அமலில் உள்ள லாக்டவுனால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு தொடர்ந்து பலரும் உதவிகள் செய்த வண்ணம் உள்ளனர். அதை நம்முடனும் தொடர்ந்து பகிர்ந்து வருகின்றனர். ஒவ்வொருவரும் செய்து வரும் உதவிகள் மகிழ்ச்சியைக் கொடுப்பதாக உள்ளது. ஏழைகளுக்கு இரங்குவதை விட பெரிய சேவை இருக்க முடியாது.

அதிலும் இப்போது உள்ள துயரமான சூழலில் ஒருவருக்கு உதவினால் கூட அது நிச்சயம் மிகப் பெரிய காரியம் ஆகும். அந்த அளவுக்கு மக்கள் கஷ்டத்தில் உள்ளனர். அந்த வகையில் நமக்கு வந்துள்ள இன்னொரு உதவிக் கரம் இது.
சென்னை கிழக்குக் கடற்கரை சாலை, வெட்டுவாண்கேனியில், தவ்ஹீத் ஜமாத் + மனித நேய இயக்க + சுன்னத் ஜமாத் நண்பர்கள் ஒருங்கிணைந்து இந்த நற்பணி செய்கிறார்கள். பிஸ்மில்லாஹ் நகர் நண்பர்கள் உதுமான் கனி, ஷஃபீக், பாஷா உள்ளிட்டோர் இந்தப் பணிகளில் தங்களை ஈடுபடுத்திக் கொண்டுள்ளனர்.

முதல் கட்டமாக ஊரடங்கு உத்தரவு காரணமாக வறுமையில் வாடும் மக்களுக்கு ஐந்து நாட்கள் சுமார் 150 நபர்களுக்கு மதிய வேளை உணவு வழங்கப்பட்டது. இரண்டாம் கட்டமாக ஏழை எளிய 23 குடும்பங்களுக்கு 5 கிலோஅரிசி 750 ரூபாய் மளிகை பொருள் மற்றும் கை பணமாக 500 ரூபாயும் 12/04/2020 அன்று காலை வழங்கப்பட்டது். இப்பணி தொடர்கிறது.

தன்னார்வலர்கள் யாரேனும் உதவி செய்ய விரும்புகிறீர்கள் என்றால் அலைபேசி: 9043619516/ 7338967334 என்ற எண்களைத் தொடர்பு கொள்ளலாம் என நமது வாசகர் அ.யா. அகமது தவ்ஃபீக் தகவல் தெரிவித்துள்ளார்.
நல்ல சேவை .. தொடரட்டும்.












Click it and Unblock the Notifications