ஜிஎஸ்டி வரியே இல்லை.. மக்களுக்கு ஜாக்பாட் கொடுக்க போகும் மத்திய அரசு.. இது ஏன் ரொம்ப முக்கியம்?
சென்னை: நமது நாட்டில் ஆயுள் மற்றும் ஹெல்த் இன்சூரன்ஸுக்கு காப்பீட்டை இன்னும் பலர் எடுப்பதை ஊக்குவிக்கும் வகையில் மத்திய அரசு மிக முக்கியமான திட்டத்தைக் கொண்டு வரவிருக்கிறது. அதாவது ஆயுள் காப்பீடு மற்றும் ஹெல்த் இன்சூரன்ஸ் பிரீமியம்களுக்கு ஜிஎஸ்டி விலக்கு அளிப்பதற்கான ஒரு திட்டம் முன்மொழியப்பட்டுள்ளது. இது காப்பீட்டுச் செலவுகளைக் கணிசமாகக் குறைக்கும் என்பதால் முக்கியமானதாகப் பார்க்கப்படுகிறது.
இந்தியாவில் இன்னுமே கூட ஆயுள் காப்பீடு மற்றும் ஹெல்த் இன்சூரன்ஸுக்கு மக்களிடையே பெரிய விழிப்புணர்வு இல்லை. ஒரே ஒரு முறை மருத்துவமனையில் அனுமதி ஆனாலும் கூட கையில் இருக்கும் மொத்தக் காசும் காலியாகும் சூழலே இப்போது பெரும்பாலான குடும்பங்களில் நிலவுகிறது. அதைத் தடுக்கவே ஹெல்த் இன்சூரன்ஸ் பிரதானமாகிறது.

இன்சூரன்ஸ் பிரீமியம்
அதேபோல எதிர்பாராத நேரங்களில் ஒருவர் மறைந்தால் அவரது குடும்பத்தினர் கஷ்டத்தை எதிர்கொள்ளாமல் இருக்க ஆயுள் காப்பீடு இருக்கிறது. இப்போது தான் இது தொடர்பான விழிப்புணர்வு மக்களிடையே மெல்ல அதிகரித்து வருகிறது. இருப்பினும், இப்போது ஆயுள் காப்பீடு மற்றும் ஹெல்த் இன்சூரன்ஸ் ப்ரீம்யம்களுக்கு 18% ஜிஎஸ்டி செலுத்தப்படுகிறது. உதாரணமாக, ஆண்டு பிரீமியம் ₹20,000 ஆக இருந்தால், ஜிஎஸ்டியாக மட்டும் ₹3,600 செலுத்த வேண்டி இருக்கிறது. இதனால் மொத்தத் தொகை ₹23,600 ஆகிறது.
எல்லா இன்சூரன்ஸ்களுக்கும் இதே ஜிஎஸ்டி தான் என்பதால் கணிசமான தொகை ஜிஎஸ்டிக்கே போய்விடுகிறது. ஜிஎஸ்டி காரணமாக இன்சூரன்ஸ் பிரீமியம் அதிகரிப்பதாகவும் இதனால் மக்கள் ஆயுள் காப்பீடு மற்றும் ஹெல்த் இன்சூரன்ஸ் எடுக்கவே யோசிப்பதால் அதைக் குறைக்க வேண்டும் அல்லது வரி விலக்கு தர வேண்டும் எனப் பல்வேறு தரப்பினரும் கோரிக்கை விடுத்தனர்.
வரியே இல்லை
ஒருவழியாக இப்போது அதில் நல்ல செய்தி வரும் எனத் தெரிகிறது. அதாவது இன்சூரன்ஸ் பிரீம்யம்களுக்கான வரியை முழுமையாக நீக்கும் திட்டம் முன்மொழியப்பட்டுள்ளது. இதற்கு ஜிஎஸ்டி கவுன்சில் ஒப்புதல் அளித்தால்.. முழு வரி விலக்கு கிடைக்கும். அதன் பிறகு நாம் இன்சூரன்ஸ் பிரீமியம் கட்டும்போது ஜிஎஸ்டி கட்ட தேவை இருக்காது.. கூடுதலாக எந்தவொரு வரியும் இருக்காது. இதன் மூலம் பாலிசிகளின் செலவு சுமார் 15% குறையக்கூடும் என்று வல்லுநர்கள் மதிப்பிடுகின்றனர்.
தயங்கும் மாநிலங்கள்
ஜிஎஸ்டி குழுவில் உள்ள அமைச்சரவைக் குழு இந்த முன்மொழிவைச் சமர்ப்பித்துள்ளது. அடுத்த கட்டமாக இது ஜிஎஸ்டி கவுன்சிலில் முன்மொழியப்படும். காப்பீட்டுத் திட்டங்களை மக்கள் அதிகம் எடுக்க வேண்டும் என்பதை ஊக்குவிக்கவே இது முன்வைக்கப்பட்டுள்ளது. மத்திய அரசு இதற்கு முழுமையாக ஆதரவாக இருக்கிறதாம்.. பெரும்பாலான மாநில அரசுகளும் இதற்கு ஆதரவு தெரிவித்துள்ளன. ஆனாலும், இதனால் கணிசமான வருமான இழப்பு ஏற்படும் என்பதால் தெலங்கானா போன்ற சில மாநிலங்கள் இதற்குக் கவலை தெரிவிப்பதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
2023-24 நிதியாண்டில் ஆயுள் மற்றும் சுகாதாரக் காப்பீட்டில் இருந்து ஜிஎஸ்டி மூலம் சுமார் ₹8,262 கோடி வசூலானது. ஹெல்த் இன்சூரன்ஸ் புதுப்பிக்கும் நபர்களிடம் இருந்து கூடலாக ₹1,500 கோடி கிடைத்தது. எனவே, ஜிஎஸ்டி விலக்கு அளிக்கப்பட்டால், சுமார் ₹10,000 கோடி வருவாய் இழப்பு ஏற்படும் எனச் சொல்லப்படுகிறது.
அடுத்து என்ன
அதேநேரம் வரி விலக்கு அளிக்கப்பட்டால் அதன் முழு பலனும் மக்களுக்கு செல்கிறது என்பதை உறுதி செய்ய வேண்டும் எனச் சில மாநிலங்கள் வலியுறுத்துகிறது. காப்பீடு நிறுவனங்கள் இன்சூரன்ஸ் பிரீம்யம்களை அதிகரித்துவிட்டால் இதன் பலன் மக்களுக்குச் செல்லாது என்பதால் அதில் தெளிவு தேவை என வலியுறுத்துகிறார்கள்.
செப்டம்பர் மாதம் ஜிஎஸ்டி குழு கூட்டம் நடைபெறும் நிலையில், அதில் இறுதி முடிவு எடுக்கப்படும் என தெரிகிறது. இருப்பினும், ஜிஎஸ்டி வரி நீக்க வாய்ப்புகள் மிக அதிகம் என்றே சொல்லப்படுகிறது. கணிசமான தொகை மிச்சமாகும் என்பதால் அவசரம் இல்லை என்றால் ஒரு மாதம் காத்திருந்து காப்பீடு எடுக்கலாம் என்கிறார்கள் வல்லுநர்கள்!












Click it and Unblock the Notifications