கூடுவாஞ்சேரி டூ முடிச்சூர்.. பெருங்களத்தூரில் இனி சல்லுனு போலாம்.. குஷியில் துள்ளுதே கிளாம்பாக்கம்
சென்னை: கிளாம்பாக்கம் புதிய பேருந்து முனையத்தையொட்டி, ஜிஎஸ்டி சாலையில் அமைக்கப்பட்டு வரும் மழைநீர் வடிகால் பணிகளை அமைச்சர் சேகர்பாபு ஆய்வு செய்துள்ளார்.. அத்துடன், இதுகுறித்து முக்கிய தகவல் ஒன்றையும் பகிர்ந்து கொண்டுள்ளார்.
கிளாம்பாக்கத்தில் வடிகால் வசதி பணிகள் நடந்து கொண்டிருப்பதால், பஸ் ஸ்டாண்டு திறப்பது தள்ளிப்போயுள்ளது.. ஜிஎஸ்டி சாலையில், புதிதாக கால்வாய் மற்றும் கல்வெட்டு அமைப்பதற்கான பணிகளை ரூ.17 கோடியில் செயல்படுத்தும் பணி துரிதமாகி உள்ளது..

ஜிஎஸ்டி ரோடு: அதேபோல, இந்த பஸ் ஸ்டாண்டிலிருந்து வெளியேறும் மழைநீர் சுமார் 180 அடிநீளமுள்ள ஜிஎஸ்டி சாலையை கடந்து கிளாம்பாக்கம் ஏரி, மற்றும் வண்டலூர் ஏரிகளுக்கும் செல்லும் வகையில் மழைநீர் வடிகால்வாய் அமைக்கும் பணிகளும் நடந்து வருகின்றன.
இதைத்தவிர, பஸ் ஸ்டாண்டு அருகில், சுமார் 1 மீட்டர் அகலம் உள்ள மழைநீர்கால்வாயை 2 மடங்கு அகலப்படுத்துவதுடன், புதிதாக 1180 மீட்டர் நீளத்தில் புதிய கால்வாய் அமைக்கவும், தேசிய நெடுஞ்சாலையின் குறுக்கே சுமார் 65 மீட்டர் நீளத்தில் சுரங்கப்பாலம் அமைக்கும் பணிகளை தொடங்கவும் தேசிய நெடுஞ்சாலைத்துறை ஆணையத்துக்கு சென்னை பெருநகர வளர்ச்சி குழுமம் சார்பில் அனுமதி கோரப்பட்டிருக்கிறது.
கிளாம்பாக்கம்: இந்நிலையில், கிளாம்பாக்கத்தில் அமைச்சர் சேகர்பாபு நேரடி ஆய்வுகளை தொடர்ந்து மேற்கொண்டு வருகிறார்.. நேற்றைய தினம் அதிகாரிகளுடன் ஆலோசனை மேற்கொண்ட அமைச்சர், இன்றுகூட கிளாம்பாக்கத்துக்கு சென்று ஆய்வு செய்தார்..
கிளாம்பாக்கம் புதிய பேருந்து முனையத்தையொட்டி, ஜிஎஸ்டி சாலையில் அமைக்கப்பட்டு வரும் மழைநீர் வடிகால் பணிகள் அனைத்தும், அக்டோபர் மாதத்துக்குள் முடிக்க திட்டமிட்டு இருப்பதாக அமைச்சர் சேகர்பாபு உறுதி தெரிவித்துள்ளார்.
இறுதிக்கட்ட பணிகள்: இது தொடர்பாக தமிழக அரசு செய்திக்குறிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.. அதில், செங்கல்பட்டு மாவட்டம், கிளாம்பாக்கத்தில் ரூ.393.74 கோடி மதிப்பீட்டில் அமைக்கப்பட்டு வரும் புதிய பேருந்து முனையத்தின் இறுதிக்கட்ட பணிகள் மற்றும் சென்னை வெளிவட்ட சாலையை ஒட்டி ஜிஎஸ்டி சாலையில் அமைக்கப்பட்டு வரும் மழைநீர் வடிகால் பணிகள் மற்றும் நெடுஞ்சாலைகள் துறை மூலம் நடைபெற்று வரும் சாலைப் பணிகளை அமைச்சர் சேகர்பாபு ஆய்வு செய்தார்.
பிறகு செய்தியாளர்களை சந்தித்தபோது அவர் சொன்னதாவது தமிழக முதல்வரின் வழிகாட்டுதலின்படி, கிளாம்பாக்கத்தில் ரூ.393.74 கோடி மதிப்பீட்டில் நவீன தொழில்நுட்ப வசதிகளுடன் அமைக்கப்பட்டு வரும் புதிய புறநகர் பேருந்து முனையம் "கலைஞர் நூற்றாண்டு பேருந்து முனையம்" எனும் பெயரில் மக்கள் பயன்பாட்டுக்காக தமிழக முதல்வரால் திறந்து வைக்கப்படும்.

மழைநீர் வடிகால்: முதல்வரின் உத்தரவின் பேரில் கிளாம்பாக்கம் புதிய பேருந்து முனையத்தையொட்டி, ஜிஎஸ்டி சாலையில் அமைக்கப்பட்டு வரும் மழைநீர் வடிகால் பணிகள் ரூ.17 கோடி மதிப்பீட்டில் 1.5 கிலோமீட்டர் அளவுக்கு போர்க்கால அடிப்படையில் மூன்று பிரிவுகளாக நடைபெற்று வருகின்றன. இந்த வடிகால் பணியானது அக்டோபர் மாதத்துக்குள் முடிக்க திட்டமிட்டு இருக்கிறோம்.
அதே போல, நெடுஞ்சாலைத்துறை மூலம் ரூ.16.61 கோடி மதிப்பீட்டில் நடைபெற்று வரும் சாலைப் பணிகளான அயனஞ்சேரி- மீனாட்சிபுரம் சாலை விரிவாக்கம், போலீஸ் அகாடமி சாலை-கூடுவாஞ்சேரி-ஊனமஞ்சேரி சாலை மற்றும் கூடுவாஞ்சேரி-மண்ணிவாக்கம்-ஆதனூர் சாலை ஆகிய பணிகள் போர்க்கால அடிப்படையில் நடைபெற்று வருகின்றன.
பேருந்து முனையம்: இந்த பேருந்து முனையத்தில் முகப்பு வளைவு அமைக்கும் பணி ரூ.4.75 கோடி மதிப்பீட்டில் அமைப்பதற்கான பணி ஆணை வழங்கப்பட்டுள்ளது. இப்பணி ஓரிரு நாட்களில் தொடங்கப்படும். இப்பேருந்து முனையத்தில் காவல் நிலையம் ரூ.14 .80 கோடி மதிப்பீட்டில் அமைப்பதற்கான பணிகள் நடைபெறவுள்ளன.
முடிச்சூர் சென்னை வெளிவட்ட சாலையில் ஆம்னி பேருந்து நிறுத்துமிடம் அமைக்கும் பணி ரூ.29 கோடி மதிப்பீட்டில் முழு வீச்சில் நடைபெற்று வருகிறது" என்றார்.
இந்த ஆய்வுகளின்போது வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித்துறை முதன்மைச் செயலாளர் அபூர்வா, சென்னை பெருநகர் வளர்ச்சிக் குழும உறுப்பினர் செயலர் அன்சூல் மிஸ்ரா, செங்கல்பட்டு சட்டமன்ற உறுப்பினர் வரலட்சுமி மதுசூதனன், செங்கல்பட்டு மாவட்ட ஆட்சித்தலைவர் ராகுல்நாத், உதவி ஆட்சியர் (பயிற்சி) ஆனந்த் குமார் சிங், தாம்பரம் காவல் ஆணையர் (போக்குவரத்து) என்.குமார், நெடுஞ்சாலைத்துறை மற்றும் துறை சார்ந்த அலுவலர்கள் உடனிருந்தனர்" என்று அந்த செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications