வித்தியாசமாக மூவ் செய்யும் எச். ராஜா.. லண்டனில் இருந்து போனை போட்ட அண்ணாமலை? என்னங்க நடக்குது?
சென்னை: பாஜக தலைவர் அண்ணாமலை லண்டன் சென்றுள்ள நிலையில், தமிழக பாஜகவின் அரசியல் பணிகளை கவனிப்பதற்காக மூத்த தலைவர் ஹெச்.ராஜா தலைமையில் ஒருங்கிணைப்புக் கமிட்டி சமீபத்தில் அமைக்கப்பட்டது. இதற்கான உத்தரவை தேசிய தலைவர் ஜே.பி.நட்டா அறிவித்திருந்தார்.
அண்ணாமலை இல்லாத சூழலில், கட்சியை வழிநடத்த செயல் தலைவர் அல்லது தற்காலிகத் தலைவர் ஒருவரை நியமிப்பது குறித்து தேசியத் தலைமை ஆலோசித்திருந்தது. இதனை அறிந்து, அப்பதவியை கைப்பற்ற தமிழிசை, வானதி, குஷ்பு உள்ளிட்ட பெண் பிரபலங்களும், பொன் ராதாகிருஷ்ணன், நயினார், எஸ்.ஆர்.சேகர், கே.டி.ராகவன் உள்ளிட்ட சீனியர்களும் கடும் முயற்சி செய்தனர்.

எச். ராஜா உள்ளே வந்தது எப்படி?: தங்களுக்கு அந்த பதவி வேண்டும் அல்லது இவருக்கு அந்த பதவி கிடைக்கக் கூடாது என்கிற ரீதியில், இவர்கள் காய்களை நகர்த்தியிருந்தனர். இதற்காக டெல்லியில் தங்களின் லாபியை பயன்படுத்தினர். போட்டிகளும் பிரச்சனைகளும் இருந்ததால், இவர்களில் யாரை நியமித்தாலும் அதிருப்தி வெடிக்கும் என்பதை உணர்ந்ததால், செயல் தலைவர் கான்செப்ட்டை தற்காலிகமாக நிறுத்தி வைத்து விட்டு 'ஒருங்கிணைப்பு குழு' ஒன்றை அமைத்து, உறுப்பினர் சேர்க்கை பணிகளை முன்னெடுக்கச் சொல்லலாம் என முடிவு செய்து அதன்படி குழுவை அமைத்தனர். தலைவர் பதவி ரேசில் இருக்கும் யாரையும் கமிட்டியில் போடாமல் ஹெச்.ராஜா தலைமையில் கமிட்டியை உருவாக்கினர். இதன் மூலம் கான்ட்ராவெர்சியை தவிர்க்கலாம் என்கிற யோசனையில் இந்த கமிட்டியை அமைத்தனர் என்று சுட்டிக்காட்டுகிறது தமிழக பாஜக.
இந்த நிலையில், தற்காலிகமாக இருந்தாலும், கமிட்டி கலைக்கப்படுவது வரை கன்வீனர் நாம் தான் யோசித்து, அண்ணாமலையைத் தாண்டி அரசியல் செய்ய வேண்டும் என்று திட்டமிட்டாராம் ஹெச்.ராஜா. அதன் ஒரு கட்டமாகத்தான், கவர்னர் ரவியை சந்தித்து பரபரப்பை ஏற்படுத்தியது, பிரதமரின் அப்பாயிண்ட்மென்ட் பெற்று அவரை சந்தித்து வாழ்த்துப் பெற்றது போன்ற நடவடிக்கைகள் என்கிறது ஹெச்.ராஜாவின் ஆதரவு வட்டம்.
இலக்கு என்ன?: இது குறித்து அவரது ஆதராவளர்களிடம் விசாரித்தபோது, "தேசிய அளவில், பத்து கோடி உறுப்பினர்கள் கொண்ட கட்சியாக பாஜகவை கொண்டு வர வேண்டும் என இலக்கு வைத்துள்ளோம். தமிழகத்தில் பாஜகவுக்கு 1 கோடி தொண்டர்கள் இருக்கிறார்கள்ங்கிற நிலையை உருவாக்குங்கள். தமிழகத்தில் பாஜகவுக்கு தலைவர் இல்லைங்கிற தோற்றம் வாராத அளவுக்கு கட்சி பணிகளை கவனியுங்கள்னு ராஜாவை பிரதமர் வாழ்த்தினார் " என்று மோடியை ராஜா சந்தித்த விபரங்களை கூறுகிறார்கள்.
இந்த நிலையில், லண்டனில் இருக்கும் அண்ணாமலை நேரம் கிடைக்கும் போதெல்லாம் தமிழகத்தில் உள்ள தனது ஆதரவாளர்களை தொடர்புகொண்டு, ஒருங்கிணைப்பு குழுவினரின் செயல்பாடுகளையும் அரசியலையும் கேட்டறிந்து கொள்வதில் ஆர்வம் காட்டி வருகிறாராம். கமிட்டியின் நடவடிக்கைகளை தினமும் தனக்கு அப்-டேட் செய்யுமாறு ஆதரவாளர்களுக்கு கட்டளை பிறப்பித்திருக்கிறாராம் அண்ணாமலை.
உறுப்பினர் சேர்க்கை: பாஜகவில் உறுப்பினர்கள் புதுப்பிப்பு, புதியவர்கள் சேர்ப்பு ஆகிய பணிகளை செப்டம்பர் 1-ந்தேதி தொடங்கியது. புதுப்பிப்பதில் முதல் நபராக பிரதமர் மோடி தனது உறுப்பினரை புதுப்பிக்கிறார். அவரது உறுப்பினர் அட்டை புதுப்பிக்கப்பட்டதும் தமிழக பாஜகவில் தொடங்கி உள்ளது.
ஆக்ஸ்போர்ட் பல்கலைக்கழகத்தில் சர்வதேச அரசியல் கல்வியை கற்பதற்காக லண்டன் சென்றுள்ள அண்ணாமலை, தமிழக பாஜக நிர்வாகிகளிடம், உறுப்பினர் சேர்க்கையில் சீரியஸாக இருக்க வேண்டும் ; 1 கோடி உறுப்பினர்கள் நம் இலக்கு ; ஏற்கனவே நம்மிடம் 50 லட்சம் உறுப்பினர்கள் இருக்கிறார்கள். 50 லட்சம் பேரை புதிதாக சேர்க்க வேண்டும்.
1 கோடி இலக்கை அடைந்துவிட்டால் 2026 தேர்தலில் நாம் நினைப்பது சாத்தியமாகும் என்று நம்பிக்கையாக பேசியிருக்கிறார் அண்ணாமலை. இதற்கிடையே, அண்ணாமலை லண்டனுக்கு செல்வது செப்டம்பர் இரண்டாவது வாரத்தில் இறுதி செய்யப்பட்டிருந்தது. ஆனால், அவர் தற்போது முன்னதாகவே லண்டன் கிளம்பிச் சென்றிருப்பது ஏன்? என்கிற கேள்வி தமிழக பாஜகவின் மூத்த நிர்வாகிகளிடம் எதிரொலிக்கச் செய்துகொண்டிருக்கிறது.












Click it and Unblock the Notifications