அட்மின் போட்ட ட்வீட்? வந்து விழுந்த கேள்வி.. " நக்கலா பேசுன வெளியே போ!" கடுப்பான ஹெச்.ராஜா! சலசலப்பு
சென்னை: பொன்னியின் செல்வன் திரைப்படத்தைப் பார்த்துவிட்டு ஹெச். ராஜா செய்தியாளர்களைச் சந்தித்த போது, திடீரென அங்குச் சலசலப்பு ஏற்பட்டது.
மணிரத்தினம் இயக்கத்தில் வெளியாகி உள்ள பொன்னியின் செல்வன் திரைப்படத்திற்கு மிகப் பெரிய அளவில் வரவேற்பு கிடைத்து உள்ளது. இந்தத் திரைப்படம் வசூலை வாரிக் குவித்து வருகிறது.
பல்வேறு அரசியல் தலைவர்களும் கூட பொன்னியின் செல்வன் திரைப்படத்தைப் பார்த்து தங்கள் கருத்துகளைத் தெரிவித்து வருகின்றனர். அதன்படி பாஜகவின் மூத்த தலைவர் ஹெச்.ராஜா பொன்னியின் செல்வன் திரைப்படத்தைப் பார்த்தார்.

ஹெச் ராஜா
படத்தைப் பார்த்த பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், "இந்தியாவில் மிகப் பெரிய சாம்ராஜ்யத்துக்கு சொந்தமே சோழ வம்சம் தான். தலைசிறந்த மன்னராக ராஜ ராஜ சோழர் இருந்தார். ஆனால், தமிழருக்குத் தமிழ் உணர்வு வரக்கூடாது என்பதற்காக இதைச் சிலர் திட்டமிட்டு மறைந்தனர். நமது குழந்தைகளுக்கு ஆங்கிலேயர்களின் சரித்திரம் மட்டுமே திட்டமிட்டுக் கற்பிக்கப்பட்டது. இந்த தேசத்தின் சரித்திரத்தைக் காட்டும் படமாகப் பொன்னியின் செல்வன் இருக்கிறது.

பொன்னியின் செல்வன்
பாகுபலி இணையாக இப்போது தமிழில் பொன்னியின் செல்வன் படம் எடுக்கப்பட்டு உள்ளது. இனிமேல் நமது தமிழ் மன்னர்களின் வரலாறு பலரும் தேட தொடங்குவார்கள். இதன் காரணமாகவே பொய்யாகத் தமிழர்களின் அடையாளம் எது மறைக்கப்பட்டதாகச் சிலர் கூற தொடங்கி உள்ளனர். ரோஜாவுக்கு பிறகு மணிரத்னம் தேச உணர்வைப் பறைசாற்றும் படங்களை எடுக்கவில்லை. இருப்பினும், இது ஒரு நல்ல முயற்சி,

இந்து மத சர்ச்சை
இது தமிழர்களுக்குத் திருப்பு முனையாக அமையும் திரைப்படம். சமீபத்தில் சாதிய படங்களே வந்த நிலையில், தமிழ் சரித்திரம் குறித்து அறிந்து கொள்ள உதவும் படமாக இது இருக்கிறது. மொத்தத்தில் இது நல்ல படம்.. இந்து மதம் இல்லை என்று நானே சட்டசபையில் பேசி உள்ளேன். பிராய்லர் கோழி நமது நாட்டில் வருவதற்கு முன், அதன் பேர் நாட்டுக் கோழியா.. வெறும் கோழி தானே. அப்படித்தான் மற்ற மதங்கள் வரும் முன்பு, இந்து மதம் மட்டுமே இருந்ததால் அதைத் தர்மம் என்று சொன்னார்கள். அது பழமையானது என்பதால் சனாதன தர்மம் என்றார்கள்" என்று அவர் பேசினார்.

குழம்பி இருக்கிறார்.
அப்படியே அரசியல் பக்கம் திரும்பிய அவர், "ஸ்டாலின் குழம்பி உள்ளார். அவர் முதலில் அதில் இருந்து வெளியே வர வேண்டும். அரசுக்குத் தான் மதம் இல்லை. தனி மனிதருக்கு மதம் இருக்கவே செய்கிறது. பாஜக கட்சி தொடங்கும் போது அனைத்து மதத்தினருக்கும் இங்கு இடம் உண்டு என்று தான் ஆரம்பித்தும். எங்களுக்கு மதம் கிடையாது" என்று அவர் தெரிவித்தார்.

கடுப்பான ஹெச் ராஜா
சமீபத்தில் ஹெச்.ராஜா தனது டிவிட்டரில், எங்கள் வீட்டில் வளர்த்த அல்சேஷன் நாய்க்கு வெறி பிடித்தால் நாய் பிடிப்பவர் அதை அடித்துக் கொன்றார் என்ற ரீதியில் பதிவிட்டு இருந்தார். இது தொடர்பாக விலங்குகள் நல ஆணையம் விசாரணை நடத்த உள்ளதாகத் தகவல் வெளியாகி உள்ளது. இது நீங்கள் போட்ட ட்வீட்டா இல்லை அட்மின் போட்ட ட்வீட்டா எனச் செய்தியாளர் கேட்ட கேள்விக்குக் கோபமடைந்த அவர், "இப்படி நக்கலாக எல்லாம் என்னிடம் பேசக் கூடாது. வெளியே போங்கள்னு சொல்லிவிடுவேன்.

காட்டமான பதில்
என்னிடம் சீரியஸாக என்ன வேண்டுமானாலும் பேசலாம். ஆனால், அசிங்கப்படுத்த வேண்டும் என்று நினைத்து பொய்யாகக் கேட்கக் கூடாது. விசாரிக்க வருவதாகச் சொல்கிறீர்களே! அந்த ஆர்டர் இருக்கா? இருந்தால் காட்டுங்கள். சும்மா என்னை அசிங்கப்படுத்த வேண்டும் என்பதற்காக எல்லாம் இப்படிப் பேசக் கூடாது. நீங்கள் சொல்வது பொய். என்னிடம் எந்தவொரு அதிகாரியும் விசாரிக்க உள்ளதாகச் சொல்லவில்லை.

மூத்த அரசியல்வாதி
தமிழகத்தில் இருக்கும் மூத்த அரசியல்வாதி நான். என்னைத் துச்சமாக நினைத்துப் பேசக்கூடாது.. தமிழ்நாட்டில் உள்ள பெரும்பாலான அரசியல் தலைவர்களைக் காட்டிலும் நான் நல்ல அதிகமாகவே படித்து உள்ளேன்" என்று கூறி பாதியில் பிரஸ் மீட்டை முடித்துக் கொண்டு கிளம்பினார். பின் சில நொடிகளில் மீண்டும் வந்த அவர், "மரியாதையுடன் பேச வேண்டும். நான் அமைதியாகப் பேசிக் கொண்டு இருக்கும்போது, நீங்களும் நாகரிகமாகப் பேச வேண்டும்.

நாகரீகமாகப் பேசுங்கள்
ஒரு அரசியல் தலைவரிடம் நாகரீகமாகப் பேச கற்றுக் கொள்ளுங்கள். ராஜாவை அசிங்கப்படுத்த வேண்டும் என்று நினைத்து தவறாகப் பேசக் கூடாது.. வள்ளுவர் இந்து தானே. அவர் திருநீரோடும் ருத்ராட்சத்தோடும் இருந்ததாக அவ்வையார் படத்தில் கூறப்படுகிறது. அதை மாற்றியது யார்.. அதற்கான அதிகாரத்தை யார் கொடுத்தார்களோ, அவர்களே எங்களுக்குக் காவி உடை போட அதிகாரம் கொடுத்தார்கள்" என்று தெரிவித்தார்.












Click it and Unblock the Notifications