Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

சமூகநீதிக்கு சாவுமணி.. "திராவிட மாடல்" என்று சொல்வது வெட்கக்கேடானது.. திமுக வெளுத்துவாங்கும் ஓபிஎஸ்!

Subscribe to Oneindia Tamil

சென்னை: அரசுப் பணிகள் தனியாரிடம் ஒப்படைக்கப்படுவது சமூகநீதிக்கு சாவுமணி அடிக்கும் நடவடிக்கை என்று முன்னாள் முதலமைச்சர் ஓ பன்னீர் செல்வம் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக ஓ பன்னீர் செல்வம் வெளியிட்டுள்ள அறிக்கையில், ஒவ்வொரு ஆண்டும் பத்து இலட்சம் வேலைவாய்ப்புகள் என்ற முறையில் 5 ஆண்டுகளில் 50 லட்சம் வேலைவாய்ப்புகள் வழங்கிட நடவடிக்கை எடுக்கப்படும் என்ற வாக்குறுதியை அளித்து திமுக ஆட்சிக் கட்டிலில் அமர்ந்தது.

இன்று இருக்கின்ற அரசுப் பணிகளை எப்படி வெளிமுகமை மூலம் மேற்கொள்ளலாம் என்பது குறித்து ஆய்வு செய்ய ஒரு குழுவை அமைத்து ஆணை பிறப்பித்திருப்பதைப் பார்க்கும்போது "உள்ளத்தில் நஞ்சும், உதட்டில் வெல்லமும்" என்ற பழமொழிதான் நினைவுக்கு வருகிறது.

மனித வளம் தொடர்பான சீர்திருத்தங்கள் என்று நிதிநிலை அறிக்கையில் சொல்லிவிட்டு, அதற்கு செயல்வடிவம் கொடுக்கும் விதமாக மனிதவள மேலாண்மைத் துறை மூலம் 18-10-2022 நாளிட்ட அரசாணை எண் 115 வெளியிடப்பட்டு இருக்கிறது.

ஓபிஎஸ் அறிக்கை

ஓபிஎஸ் அறிக்கை

இந்த ஆணையில் குழுவின் ஆய்வு வரம்புகளாக பன்முக வேலைத் திறனோடு பணியாளர்களின் ஆட் சேர்ப்பு மற்றும் பதவி உயர்வு அமைதல், அரசின் பல்வேறு நிலைப் பணியிடங்கள், பதவிகள், பணிகள் ஆகியவற்றை திறன் அடிப்படையில் ஒப்பந்த முறையில் நிரப்புவதற்கான முறைகளை மேற்கொள்ளுதல், 'டி' மற்றும் 'சி' பிரிவு பணியிடங்களை வெளிமுகமை மூலம் நிரப்புதல், பணியாளர்களை ஒப்பந்த முறையில் நியமித்து குறிப்பிட்ட காலத்திற்கு பிறகு அவர்களின் பணிச் செயல்பாடுகளை ஆய்வு செய்து அவர்களை காலமுறை ஊதியத்தில் அமர்த்துதல் போன்றவை சேர்க்கப்பட்டுள்ளன.

சமூகநீதிக்கு மூடுவிழா

சமூகநீதிக்கு மூடுவிழா

இந்தக் குழுவின் ஆய்வு வரம்புகளை (Terms of Reference) பார்க்கும்போது அரசு இயந்திரத்தை தனியாரிடம் தாரைவார்த்துக் கொடுத்துவிட்டு சமூகநீதிக்கு மூடுவிழா நடத்த திமுக அரசு தயாராகிவிட்டது என்பது தெள்ளத் தெளிவாகிறது. ஒரு புறம் அரசுப் பணிகளை தனியாருக்கு தாரை வார்க்கும் வகையில் சமூகநீதிக்கு எதிராக ஒரு குழுவை அமைத்துவிட்டு, மறுபுறம் அரசுப் பணிகளின் அனைத்து நிலைகளிலும் சமூகநீதிக் கொள்கைகளை செயல்படுத்த சட்ட வல்லுநர் குழுவை அமைத்திருப்பது முன்னுக்குப் பின் முரணானது. தி.மு.க. அரசின் இரட்டை வேடத்திற்கு மற்றுமொரு சான்று.

சமூகநீதிக்கு சாவுமணி

சமூகநீதிக்கு சாவுமணி

தனியார் துறையில் உள்ள நிபுணர்களை இணைச் செயலாளர் நிலையில் மத்திய அரசு நியமித்தபோது, இது மத்திய அரசின் திறமையின்மைக்கு ஒரு சான்று என்றும், இதர பிற்படுத்தப்பட்டவர்களுக்கான இடஒதுக்கீட்டை வழங்காமல் சமூகநீதிக்கு சாவுமணி அடிக்கும் நடவடிக்கை என்றும் விமர்சித்தவர் தி.மு.க. தலைவரும், தற்போதைய முதலமைச்சருமான மு.க. ஸ்டாலின். ஆனால், இன்று ஒட்டுமொத்த அரசுப் பணிகளையுமே தனியாருக்கு காவு கொடுக்கத் தயாராகிவிட்டது திமுக அரசு. முதலமைச்சரின் கூற்றுப்படி பார்த்தால், சமூக நீதிக்கு சங்கு ஊதும் நடவடிக்கையில் திமுக அரசு ஈடுபட்டிருக்கிறது.

 இடஒதுக்கீட்டுக்கு எதிரான நடவடிக்கை

இடஒதுக்கீட்டுக்கு எதிரான நடவடிக்கை

ஏற்கெனவே அரசாங்கப் பணிகளில் தலையிட்டு வரும் திமுகவினர், அரசுப் பணிகள் தனியாரிடம் ஒப்படைக்கப்பட்டால், அவர்கள் மூலம் திமுகவினர் தங்களுக்கு வேண்டியவர்களை பணியில் நியமிப்பதற்கும், அதன்மூலம் பணியின் தரம் குறைவதற்கும், இடஒதுக்கீடு என்பதே இல்லாமல் போவதற்கும், அரசின் ரகசியங்கள் வெளியிலே செல்வதற்கும், ஊழல் பெருகுவதற்கும் வழிவகுக்கும். இவை எல்லாவற்றிற்கும் மேலாக அரசு வேலைவாய்ப்பு என்பதே இல்லாமல் போய்விடும் சூழ்நியை உருவாகும்.

இதுதான் அரசுக்கு அழகா?

இதுதான் அரசுக்கு அழகா?

திமுக அரசின் இந்த நடவடிக்கை அரசுப் பணிகளில் சேர வேண்டும் என்ற ஆர்வமுடைய ஏழையெளிய, பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட, தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடியின மக்களின் கனவை சிதைப்பது போல் அமைந்துள்ளது. மனித வள மேலாண்மைத் துறை என்று பெயரிட்டுவிட்டு, மனித வளத்தை சிறுமைப்படுத்தும் பணியில் ஈடுபடுவது ஓர் அரசுக்கு அழகல்ல,

திராவிட மாடலுக்கு வெட்கக்கேடு

திராவிட மாடலுக்கு வெட்கக்கேடு

இதுபோன்ற மக்கள் விரோத நடவடிக்கைகளை எல்லாம் எடுத்துவிட்டு அதை 'திராவிட மாடல்" என்று சொல்லிக் கொள்வது வெட்கக்கேடானது. திமுக அரசின் அரசுப் பணியாளர் விரோத நடவடிக்கைக்கு அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் கடும் கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

அரசாணையை திரும்பப்பெறுக

அரசாணையை திரும்பப்பெறுக

தேர்தல் வாக்குறுதியில் குறிப்பிட்டபடி மூன்றரை லட்சம் காலிப் பணியிடங்களை தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் உள்ளிட்ட இதர அமைப்புகள் மூலம் உடனடியாக நிரப்புவதற்கும், புதிதாக இரண்டு இலட்சம் வேலைவாய்ப்புகளை உருவாக்குவதற்கும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், 18-10-2022 நாளிட்ட மனிதவள மேலாண்மைத் துறை அரசாணை எண் 115-ஐ உடனடியாக திரும்பப் பெற வேண்டுமென ஓ.பன்னீர் செல்வம் தெரிவித்துள்ளார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+