சிலீப்பர் பஸ்கள் வாடகைக்கு.. தனியார் பேருந்துகளில் இதுதான் கட்டணமா? சட்டென வெளியான மகிழ்ச்சி தகவல்
சென்னை: அரசு பேருந்துகளை கூடுதலாக இயக்குவதற்கு திட்டமிடுவதற்கு பதிலாக தனியார் பேருந்துகளை வாடகைக்கு எடுத்து இயக்குவது, அரசுக்கோ, பொதுமக்களின் நலனுக்கோ வலுசேர்க்காது என்று ஏற்கனவே எதிர்க்கட்சிகள் கருத்து தெரிவித்திருந்தது. இந்நிலையில், தமிழகத்தில் முதல்முறையாக, தனியார் சிலீப்பர் வகை பஸ்களை வாடகைக்கு எடுத்து இயக்க, அரசு விரைவு போக்குவரத்து கழகம் முடிவு செய்திருப்பதாக தகவல் வெளியாகியிருக்கிறது.
பயணிகளின் வசதிக்காக தனியார் பஸ்களை வாடைகைக்கு அமர்த்தியும் இயக்க உள்ளதாகவும், பேருந்துகளை வாடகைக்கு எடுப்பதற்கு வெளிப்படையான டெண்டர் விடப்பட்டு, அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி, ஒரு கிலோ மீட்டருக்கு ரூ.51.25 பைசா என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் சிவசங்கர் சில மாதங்களுக்கு முன்பு தெரிவித்திருந்தார்.

அரசு பஸ்ஸில் தரப்படும் கட்டணத்தையே, தனியார் பஸ்ஸிலும் தருவதால், பொது மக்களுக்கு எந்த சிரமமும் இருக்காது என்றும், தனியார் பேருந்துகள் அவரவர் ஓட்டுநரை வைத்து இயக்குவார்கள், அரசு ஏற்பாடு என ஒரு ஸ்டிக்கர் மட்டும் ஒட்டப்படும் என்றும் அமைச்சர் அப்போது தெரிவித்திருந்தார்.
கண்டனம் தெரிவித்த எதிர்க்கட்சிகள்
அதன்படியே, நெரிசலை தவிர்க்க மாநிலம் முழுவதும் பல ஆயிரம் அரசு பஸ்களை இயக்கும் போக்குவரத்துக் கழகம், 200க்கும் மேற்பட்ட தனியார் பஸ்களையும் வாடகைக்குப் பெற்று இயக்க ஏற்பாடு செய்யப்பட்டது. ஆனால், தனியார் பஸ்கைளை பேருந்துகளை வாடகைக்கு எடுத்து இயக்குவது தனியார்மயம்தான் என்பதால், இந்த திட்டத்தை போக்குவரத்துத்துறை கைவிட வேண்டும் என அன்புமணி ராமதாஸ், டிடிவி தினகரன், சிபிஎம் பாலகிருஷ்ணன் உள்ளிட்டோர் கருத்து தெரிவித்திருந்தனர்.
அதுமட்டுமல்ல, தனியார் பேருந்துகளை வாடகைக்கு எடுத்து இயக்குவது, எதிர்காலத்தில் பொதுப்போக்குவரத்தை தனியாருக்கு விடும் நிலையை ஏற்படுத்திவிடும் என்றும், அரசு பேருந்துகளை கூடுதலாக இயக்குவதற்கு திட்டமிடுவதற்கு பதிலாக தனியார் பேருந்துகளை வாடகைக்கு எடுத்து இயக்குவது, அரசுக்கோ, பொதுமக்களின் நலனுக்கோ வலுசேர்க்காது, இது எதிர்காலத்தில் பொதுப் போக்குவரத்தை தனியாருக்கு விடும் நிலையை ஏற்படுத்திவிடும் என்றும் அச்சம் தெரிவித்திருந்தனர்.
தனியார் பஸ்கள் வாடகை
எனினும், அரசு போக்குவரத்து துறையுடன், தனியார் பஸ் உரிமையாளர்கள் இதற்கான ஒப்பந்தத்தை செய்தனர்.. அதற்கேற்ப அரசு போக்குவரத்து கழகங்களுக்கு தேவைக்கு ஏற்ப தனியார் பஸ்கள் வழங்கப்பட்டு, இயக்கப்பட்டு வருகின்றன. முதலில் விழுப்புரம் அரசு போக்குவரத்து கழகம் சார்பில், தனியார் பஸ்கள் இயக்கப்பட்ட நிலையில் பிறகு மெல்ல மெல்ல, அரசு சார்பிலும், தனியார் பஸ்களை வாடகைக்கு எடுத்து இயக்கப்பட்டு வருகின்றன.
இப்படிப்பட்ட சூழலில முதல் முறையாக, எஸ்இடிசி எனப்படும் அரசு விரைவு போக்குவரத்து கழகம் சார்பில், சிலீப்பர் வகை பஸ்களை, தனியாரிடமிருந்து பெற்று இயக்க, டெண்டர் வெளியிடப்பட்டிருக்கிறது.
பஸ் வசதி இனி கிடைக்கும்
இது குறித்து, அரசு விரைவு போக்குவரத்து கழக அதிகாரிகள் சொல்லும்போது, "தொடர் விடுமுறை, பண்டிகை நாட்களில் பஸ்களில் கூட்டம் அதிகமாக இருக்கும் என்பதால், அதிகமாக பஸ்கள் தேவைப்படுகின்றன. அதனால், தேவை அடிப்படையில், அரசு ஒப்பந்தப்படி தனியார் பஸ்களை இயக்கும் திட்டத்தை, நாங்களும் செயல்படுத்த போகிறோம்.. இதனால், பயணியருக்கு தடையின்றி பஸ் வசதி கிடைக்கும்.. அத்துடன் செலவும் குறையும்.
கடந்த வருடம் தேர்வு செய்யப்பட்ட தனியார் பஸ்களுக்கு, 1 கி.மீ., 51.25 ரூபாய் என கட்டணம் நிர்ணயம் செய்யப்பட்டது. 20 சிலீப்பர் தனியார் பஸ்களை, அரசின் ஒப்பந்த பஸ் என்ற பெயரில் இயக்க போகிறோம்.. அரசு பஸ்சை இயக்கும்போது, 1 கி.மீ.,க்கு 65 ரூபாய் செலவாகிறது. இதுவே தனியார் பஸ்சை எடுத்து இயக்கினால், 1 கி.மீ.,க்கு அதிகபட்சம் 55 ரூபாய்க்குள் தான் செலவாகும்.. 10 ரூபாய் எங்களுக்கும் மிச்சமாகும்" என்றார்












Click it and Unblock the Notifications