குடும்ப அட்டைதாரர்களுக்கு குஷி.. ரேஷனில் இந்த பொருளுக்கு தட்டுப்பாடு இல்லை.. மத்திய அரசு சர்ப்ரைஸ்
சென்னை: ரேஷன் கடைகளில் கோதுமைக்கு தட்டுப்பாடு வந்துவிடுமோ என்ற லேசான கலக்கம் சூழ்ந்து வந்த நிலையில், தற்போது குட்நியூஸ் ஒன்று வெளியாகியிருக்கிறது. முதல்வர் ஸ்டாலின், தமிழக அமைச்சர் சக்கரபாணி உள்ளிட்டோர் மேற்கொண்ட முயற்சியால், மத்திய அரசு அதிரடி அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இது ரேஷன்தாரர்களுக்கு நிம்மதியை தந்து வருகிறது.
தமிழகத்திற்கான கோதுமை ஒதுக்கீட்டை, 1,038 டன்னாக மத்திய அரசு கடந்த வருடம் குறைத்திருந்தது.. இதனால், ரேஷன்தாரர்களுக்கு கோதுமை வழங்க முடியாத நிலைமையும் ஏற்பட்டது.

உணவுத்துறை: பிறகு, "தமிழகத்திற்கு வழக்கம் போல கோதுமை வழங்க வேண்டும்" என்று தமிழக உணவுத் துறை சார்பில், மத்திய அரசுக்கு கடிதம் எழுதியதுடன், நேரிலேயே சென்று மத்திய அமைச்சர்களை சந்தித்து பேசினார்கள்.. இதற்கு பிறகுதான், தமிழகத்துக்கு 8500 டன் கோதுமையை வழங்க மத்திய அரசு ஒப்புதல் வழங்கியது.
அதேபோல, கோதுமை ஒதுக்கீட்டை அதிகரிக்க வேண்டும் என்றும், திறந்தவெளி சந்தை விற்பனை திட்டத்தில் விற்கப்படும் அரிசியின் விலையை கிலோவிற்கு ரூ.20 ஆக குறைக்க வேண்டும் என்றும், உணவுத் துறை அமைச்சா் பிரஹலாத் ஜோஷியை கடந்த மாதம், சந்தித்து தமிழக உணவுத்துறை அமைச்சர் சக்கரபாணி சந்தித்து பேசியிருந்தார்.
மானிய தொகை: அப்போது, பல்வேறு வகைகளில் நிலுவையில் உள்ள உணவு மானிய தொகையான ரூ.3,191 கோடியை விடுவிக்கவும் அவா் கோரிக்கை விடுத்தாா். அதுமட்டுமல்ல, கடந்த ஜூலை 9-ம் தேதியிட்ட மத்திய அரசின் கடிதத்தில், அரிசி கிலோ ரூ.28-க்கு இந்திய உணவுக்கழகம் மூலம் வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது. ஆனால், அந்த அரிசியை ஏற்கெனவே வழங்கப்பட்டது போல் கிலோ ரூ.20-க்கே வழங்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுக்கப்பட்டது.
ஒருவேளை தமிழக அரசின் இந்த கோரிக்கைகளை மத்திய அரசு ஏற்கும்பட்சத்தில், கோதுமையின் அளவு அதிகரிப்பதுடன், அரிசியை கிலோ ரூ. 20-க்கு வழங்கவும் விரைவில் அறிவிப்பு வெளியாகும் என்றும், இதனால், கோதுமை, அரிசிக்கு, தமிழக ரேஷனில் எப்போதுமே தட்டுப்பாடு வராது என்றும் நம்பப்பட்டு வருகிறது.
கோதுமை ஒதுக்கீடு: இப்படிப்பட்ட சூழலில், தமிழகத்திற்கான கோதுமை ஒதுக்கீட்டை, மாதம் 8,500 டன்னில் இருந்து, 17,100 டன்னாக அதிகரித்து, மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.
தமிழகத்திற்கான கோதுமையை உயர்த்தி வழங்குமாறு, மத்திய அரசை முதல்வர் ஸ்டாலின் தொடர்ந்து வலியுறுத்தி வந்ததுடன், உணவு துறை அமைச்சர் சக்கரபாணி, செயலர் ராதாகிருஷ்ணன், உணவு வழங்கல் துறை இயக்குனர் மோகன் உள்ளிட்ட அதிகாரிகள் டில்லி சென்று, மத்திய உணவு துறை அதிகாரிகளை சந்தித்து வலியுறுத்தியிருந்தனர்.
மகிழ்ச்சி: இதையடுத்தே, தமிழகத்திற்கான கோதுமை ஒதுக்கீட்டை, மாதம் 8,500 டன்னில் இருந்து, 17,100 டன்னாக அதிகரித்து, மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. இது அடுத்த மாதம், 24ம் தேதி முதல் வழங்கப்பட உள்ளது. இதனால், ரேஷன்தாரர்களுக்கு கோதுமை பெறுவதில் எந்த சிக்கலும் இருக்காது என்றே எதிர்பார்க்கப்படுகிறது. அடுத்தடுத்து பண்டிகை காலங்கள் துவங்க உள்ள நிலையில், மத்திய அரசு அறிவித்திருக்கும் இந்த அறிவிப்பானது, குடும்ப அட்டைதாரர்களுக்கும் மகிழ்ச்சியை தந்து வருகிறது.
புதிய கார்டுகள்: இதனிடையே, தமிழகத்தில், புதிய ரேஷன் கார்டுகள் வழங்கும் பணி தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்ட நிலையில் மீண்டும் பணிகள் தொடங்கப்பட்டது. தமிழகம் முழுவதும் புதிய ரேஷன் அட்டைகளுக்கு 2,89,591 பேர் விண்ணப்பித்துள்ள நிலையில்,
இதனை பரிசீலித்து 1.22 லட்சம் பேருக்கு புதிய ரேஷன் அட்டைகள் வழங்க ஒப்புதலும் வழங்கப்பட்டிருந்தது. இந்நிலையில் 80,050 பேருக்கு புதிய ரேஷன் கார்டுகள் வழங்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியிருக்கிறது. இதில் 99,300 ரேஷன் அட்டைகள் விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டுள்ளது. மேலும் 68,291 பேருக்கு விரைவில் புதிய ரேஷன் கார்டுகள் வழங்கும் படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications