திருவண்ணாமலை போறீங்களா? பக்தர்களுக்கு தமிழக அரசு சொன்ன குட்நியூஸ்.. மாஸ்டர் பிளானும் ரெடியாயிருச்சு
சென்னை: திமுக ஆட்சிக்காலத்தில் 11 பெண் ஓதுவார்கள் உட்பட 29 கோவில்களில் ஓதுவார்கள் நியமிக்கப்பட்டுள்ளதாக இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு பெருமிதம் தெரிவித்துள்ளார். அத்துடன், திருவண்ணாமலை பக்தர்களுக்கும் மகிழ்ச்சி தகவல் ஒன்றை வெளியிட்டிருக்கிறார.
இன்று சட்டப்பேரவையில் வினாக்கள் - விடைகள் நேரத்தில் உறுப்பினர்களின் பல்வேறு கேள்விகளுக்கு அமைச்சர் சேகர்பாபு பதில் அளித்தார்.. இதில், தாம்பரம் தொகுதி உறுப்பினர் எஸ்.ஆர்.ராஜா எழுப்பிய கேள்விக்கு சேகர் பாபு பதிலளித்தார்.

பூஜைகள்: அதில், "இந்திய தொல்லியல் துறை கட்டுப்பாட்டில் உள்ள மாடம்பாக்கம் தேனபுரீஸ்வரர் கோயிலிலும் பெண் ஓதுவார் நியமிக்கப்பட்டு அனைத்து பூஜைகளும் கால நேரத்தின்படி நடந்து வருகின்றன. தமிழ்நாடு முழுவதும் 29 கோவில்களில் ஓதுவார்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். அவர்களில் 11 பேர் பெண்கள் ஆவர்.
கோவில் தங்கங்களை உருக்கும் பணி மூலம் கோவில் தங்கங்கள் உருக்கப்பட்டு தங்கக் கட்டிகளாக மாற்றப்பட்டு ரூ.5.74 கோடி வைப்பு நிதி வங்கிகளில் வைக்கப்பட்டு உள்ளன. தங்கக் கட்டிகள் வைப்பு நிதி மூலம் கிடைக்கும் வருவாய் மூலம் 14 கோயில்களில் திருப்பணி மேற்கொள்ளப்படுகின்றன" என்று பதிலளித்தார்.
பக்தர்கள்: இதையடுத்து, திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவிலுக்கான மாஸ்டர் பிளான் திட்டம் தயாராகி உள்ளதா? தினசரி லட்சக்கணக்கான பக்தர்கள் வருவதால் அடிப்படை வசதிகளை மேற்கொள்ள வேண்டுமே? தங்க வைப்பு நிதி மூலம் வங்கிகளில் எவ்வளவு கையிருப்பு வைக்கப்பட்டுள்ளது? என்றெல்லாம் சட்டமன்ற உறுப்பினர் பிச்சாண்டி கேள்வி எழுப்பினார். இந்த அனைத்து கேள்விகளுக்குமே இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு பதிலளித்து பேசினார்.
"திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவில் பணிகள் குறித்து மாவட்ட அமைச்சர் எ.வ.வேலு தலைமையில் 10 நாட்களுக்கு ஒருமுறை ஆலோசனைக் கூட்டம் நடத்தப்பட்டு வருகிறது.. திருவண்ணாமலை கோவிலுக்காக முதற்கட்ட மாஸ்டர் பிளான் திட்டத்திற்காக ரூ.36.41 கோடியில் ஒப்பந்தம் கோரப்பட்டு பணிகள் நடைபெறுகின்றன.
திருவண்ணாமலை: திருவண்ணாமலை கோவிலுக்கு ஆந்திரா, தெலுங்கானா, கர்நாடகா உட்பட பல்வேறு மாநிலங்களில் இருந்தும் பவுர்ணமி நாளில் 30 லட்சத்துக்கும் மேற்பட்டோர் வருகை தருகின்றனர்.. எனவே பக்தர்களுக்கான வசதிகளை மேம்படுத்த 2வது மாஸ்டர் பிளான் விரைவில் போடப்பட உள்ளது.. இவைகளை தவிர, இந்து சமய அறநிலையத் துறை மானிய கோரிக்கையில் பல்வேறு அறிவிப்புகள் வெளியிடப்பட உள்ளன' என்று சேகர்பாபு பதிலளித்தார்.
கடந்த வருடமும் திருவண்ணாமலை செல்லும் பக்தர்களுக்கு அமைச்சர் சேகர் பாபு சர்ப்ரைஸ் தந்திருந்தார்.. அதாவது, மாதந்தோறும் பவுர்ணமி நாட்களில் திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலுக்கு சிறப்பு தரிசனக் கட்டணம் ரூ.50 பெறப்பட்டு வந்தது.
முழு ரத்து: இதன் மூலம் வருடத்துக்கு சுமார் ரூ.1.32 கோடி வருமானமாக கிடைக்க பெற்று வந்த நிலையில், பக்தர்களின் நலன் கருதி, இந்த சிறப்பு கட்டண தரிசனத்தை முழுமையாக ரத்து செய்து அறிவிப்பு வெளியிடப்பட்டிருந்தது. அதுமட்டுமல்ல, பக்தர்களின் வசதிக்காக பல்வேறு பகுதிகளில் இருந்து 100 சிறப்பு பஸ்கள் இயக்க தமிழக அரசு நடவடிக்கையையும் எடுத்துள்ளது.
எப்போதுமே பவுர்ணமி தினத்தன்று கிரிவலம் சென்றால் கடவுளின் அருள் கிடைக்கும் என்பது ஐதீகமாகும். அதனால் மற்ற நாட்களைவிட பவுர்ணமி தினத்தன்று ஏராளமான பக்தர்கள் மலையை சுற்றி கிரிவலம் செல்வார்கள்.
கிரிவலம்: குறிப்பாக கார்த்திகை தீபத்திருவிழா மகா தீபம் ஏற்றப்படும் நாளிலும், சித்திரை மாத பவுர்ணமி தினத்தன்று லட்சக்கணக்கான பக்தர்கள் கிரிவலம் சென்று சாமி தரிசனம் செய்வார்கள். எனவே பக்தர்களின் வசதியை கருத்தில் கொண்டு, தமிழக அரசு பல்வேறு அறிவிப்புகளை வெளியிட்டு வருவது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications