கோவில் திருவிழாவில்.. பெண் போலீசுக்கு பாலியல் சீண்டல்.. திமுக நிர்வாகி கைது!
சென்னை: சென்னை வளசரவாக்கத்தை அடுத்த ராமாபுரத்தில் கோவில் திருவிழாவில், பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போது தனக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக பெண் காவலர் கொடுத்த புகாரின் பேரில் திமுக நிர்வாகி கண்ணன் என்பவரை போலீசார் கைது செய்துள்ளனர்.
ஆடி மாதம் என்பதால் கோவில்களில் திருவிழாக்கள் களை கட்டியுள்ளது. குறிப்பாக சென்னையில் உள்ள கோவில்கள் பலவற்றிலும் கோவில் திருவிழாக்கள் வெகு விமர்சியாக கொண்டாடப்பட்டு வருகிறது. அந்த வகையில், சென்னை வளசரவாக்கம் அடுத்த ராமாபுரம் பகுதியில் உள்ள பரமேஸ்வரி கோவிலில் திருவிழா நடைபெற்றது. நேற்று முன் தினம் இரவு தீமிதி திருவிழா நடைபெற்றது.

கோவில் திருவிழாவைக் காண மக்கள் அதிக அளவு அங்கு கூடியிருந்தனர். பக்தர்கள் கூட்டம் அதிக அளவில் இருந்ததால் பாதுகாப்பு பணிக்காக ராமாபுரம் போலீசாரும் சென்று இருந்தனர். அந்த வகையில் பெண் போலீஸ் சிலரும் பாதுகாப்பு பணிக்கு சென்றுள்ளனர். கோவில் திருவிழாவின் போது பாதுகாப்பு பணியில் இருந்த பெண் போலீசிடம் கண்ணன் என்பவர் பாலியல் சீண்டலில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது.
இதனால், அதிர்ச்சி அடைந்த பெண் போலீஸ், சம்பவம் குறித்து போலீஸ் ஸ்டேஷனில் புகார் அளித்தார். இந்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த போலீசார், பெண் போலீசிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்ட கண்ணன் என்பவரை கைது செய்தனர். விசாரணையில் 48 வயதான கண்ணன், கார் மெக்கானிக்காக வேலை செய்து வருவதும் திமுக பிரமுகர் என்பதும் தெரியவந்தது.

பெண் போலீசில் பாலியல் சீண்டலில் ஈடுபட்டது விசாரணையில் உறுதி செய்யப்பட்டதால் அவரை கைது செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். கோவில் திருவிழாவில் பாதுகாப்பு பணிக்காக சென்ற பெண் போலீசிடமே சில்மிஷம் செய்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.












Click it and Unblock the Notifications