எடப்பாடி பழனிசாமி பட்ட பாடெல்லாம் போச்சா? தவெக மூலம் தொங்கு சட்டசபை? கிங் மேக்கர் ஆக துடிக்கும் பாஜக
சென்னை: தமிழக சட்டமன்ற தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், அரசியல் களம் மேலும் சூடுபிடித்துள்ளது.. ஆனால் இந்த நேரத்தில் அதிமுகவின் அரசியல் பயணம் இதுவரை கண்டிராத ஒரு இக்கட்டான சூழலை சந்தித்து வருகிறது.. அதிலிருந்து அதிமுக எப்படி மீண்டு, சமாளித்து வரப்போகிறதோ தெரியவில்லை.. அதுகுறித்த ஒரு பிரத்யேக தகவல்தான் நமக்கு கிடைத்துள்ளது..
ஜெயலலிதா என்ற ஆளுமையால் இரும்புக்கோட்டையாகக் காக்கப்பட்ட அதிமுக, இன்று தனது சொந்தக் கட்சி முடிவுகளை எடுப்பதற்கே மற்றவர்களின் கண்ணசைவிற்காக காத்திருக்க வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டிருப்பது அக்கட்சியின் உண்மையான தொண்டர்களை வேதனையில் ஆழ்த்தி வருகிறது.

எடப்பாடி பழனிசாமி
குறிப்பாக, கூட்டணிக்குள் நடிகர் விஜய்யின் தவெகவை கொண்டு வருவதில் பாஜக காட்டும் அதீத ஆர்வம், எடப்பாடி பழனிசாமியின் அரசியல் எதிர்காலத்திற்கு குறிவைக்கப்படும் ஒரு நுணுக்கமான நகர்வாகவே பார்க்கப்படுகிறது.. விஜய்யின் வருகையை எடப்பாடி துளியும் விரும்பவில்லை என்பது தெரிந்தும், பாஜக இந்த வேலையில் தீவிரமாக இறங்கியிருப்பது அதிமுகவை இக்கட்டான நிலைமைக்கு தள்ளியுள்ளது..
தமிழகத்தில் தனித்து ஆட்சி அமைக்கத் தேவையான 118 தொகுதிகளை வென்றெடுக்க வேண்டும் என்ற முனைப்பில் இருக்கும் எடப்பாடி பழனிசாமிக்கு, தொகுதிகளின் எண்ணிக்கையைக் குறைப்பது என்பது தற்கொலைக்கு சமமான ஒரு முடிவாகும்..
சாம, பேத, தான, தண்ட
குறைந்தது 170 தொகுதிகளில் போட்டியிட்டால் மட்டுமே 118 இடங்களில் வெற்றி பெற முடியும் என்பது எதார்த்தமான அரசியல் கணக்கு.. ஆனால், தவெக-வை உள்ளே கொண்டு வருவதன் மூலம் அதிமுகவின் போட்டி தொகுதிகளை 130 முதல் 140 ஆகக் குறைத்துவிடலாம் என்பது பாஜகவின் திட்டமாக உள்ளதாம்..
இதன் மூலம் அதிமுக 90 அல்லது 100 இடங்களை வென்றாலும், ஆட்சி அமைக்க பாஜகவின் ஆதரவு கட்டாயம் தேவைப்படும் ஒரு நெருக்கடியான சூழலை உருவாக்கி, "ஆட்சியில் பங்கு" என்ற கண்டிஷனை போட்டு அதிமுகவின் அதிகாரத்தை கட்டுப்படுத்த டெல்லி தலைமை தயாராகி வருவதாக தகவல்கள் கூறுகின்றன.
இப்படியொரு சூழல் அதிமுகவின் வாக்கு வங்கியை விட, விஜய்யின் செல்வாக்கை பாஜக பக்கம் எளிதாக திருப்பிவிட உதவும் என பாஜக நம்புவதாக தெரிகிறது.. விஜய்யை பயன்படுத்திச் சட்டமன்றத்திற்குள் ஒரு பலமான இடத்தை பிடித்துவிட்டால், தமிழகத்தின் எதிர்கால அரசியலில் ஒரு நிலையான மற்றும் நிரந்தர இடத்தை தாமரைக்கு உறுதி செய்துவிடலாம் என்பதுதான் டெல்லியின் கணக்கு.. இதற்காகவே சாம, பேத, தான, தண்ட என அனைத்து முயற்சிகளையும் பாஜக கையாண்டு வருகிறது..
பாஜகவின் கேம் பிளான்
இந்த அரசியல் வியூகத்தில் அதிமுகவின் நிலைமைதான் மிகவும் பரிதாபமாக இருக்கிறது.. சொந்த கட்சியின் வேட்புமனு தாக்கல் தேதி நெருங்கியும் கூட, சுயமாக ஒரு முடிவை அறிவிக்க முடியாமல் தவிப்பது அக்கட்சியின் பலவீனத்தையே வெளிச்சம் போட்டு காட்டுகிறது..
இந்த நெருக்கடி என்பது வெறும் இடப்பங்கீடு தொடர்பானது மட்டுமே கிடையாது.. இது அதிமுகவின் அரசியல் இருப்பையே கேள்விக்குறியாக்கும் ஒரு நீண்ட காலத் திட்டமாகும்..
பாஜகவின் இந்த டபுள் கேம் வியூகமானது, அதிமுகவை ஒரு பிராந்திய கட்சியாக மட்டும் முடக்கிவிட்டு, அதன் செல்வாக்கை படிப்படியாக தான் அபகரிக்க துடிப்பதாக தெரிகிறது..
கொங்கு, தென் மாவட்டங்கள்?
ஒருவேளை எடப்பாடி பழனிசாமி இந்த 130 சீட் கணக்கிற்கு ஓகே சொல்லிவிட்டால், அது அதிமுகவின் கோட்டையான கொங்கு மற்றும் தென் மாவட்டங்களில் கட்சியின் பிடியை தளர்த்தக்கூடும்..
இறுதியில், பாஜகவின் இந்த கணக்கால் உடனடியாக அதிமுகவிற்கும், கொஞ்சம் கொஞ்சமாக தவெகவிற்கும் தான் ஆப்பு வைக்கப்படும் என்று அரசியல் விமர்சகர்கள் இப்போதே எச்சரிக்கிறார்கள்.. காலத்தின் கட்டாயத்தால் மாட்டி தவித்து கொண்டிருக்கும் அதிமுக, டெல்லியின் பிடியில் இருந்து மீளுமா அல்லது தன்னுடைய அதிகாரத்தை பகிர்ந்து கொள்ளுமா என்பதுதான் மிகப்பெரிய எதிர்பார்ப்பாக எழுந்துள்ளது.. பொறுத்திருந்து பார்ப்போம்..!!












Click it and Unblock the Notifications