க்ளைமேட்டே பொசுக்குனு மாறுதே.. திடீர்னு அதிமுகவுக்கு அழைப்பு விடுத்த உதயநிதி ஸ்டாலின்.. அதிர்ந்த பாஜக
சென்னை: நீட் தேர்வு ரத்து செய்யக்கோரி திமுக இளைஞரணி சார்பில் தமிழகம் முழுவதும், மாபெரும் கையெழுத்து இயக்கத்தினை, திமுக அமைச்சர் உதயநிதி துவக்கி வைத்துள்ளார். அப்போது, உதயநிதி பேசிய பேச்சு, தமிழக அரசியல் கட்சிகளின் கவனத்தை ஈர்த்து வருகின்றன.
கிராமப்புற மாணவர்கள், அரசுப் பள்ளி மாணவர்கள் பாதிக்கப்பட்டு வருவதாககூறி தமிழ்நாட்டுக்கு நீட் தேர்வில் இருந்து விலக்கு அளிக்க வேண்டும் என்று சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இந்தகோரிக்கையை நிறைவேற்ற உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று திமுக வலியுறுத்தி வருகிறது.

இதை முன்னிறுத்தி, நீட் தேர்வுக்கு எதிரான கையெழுத்து இயக்கத்தை திமுக இளைஞரணி கையில் எடுத்துள்ளது. அந்தவகையில், இளைஞரணி செயலாளரும், அமைச்சருமான உதயநிதி, சென்னை கலைவாணர் அரங்கில் நடந்த நிகழ்ச்சியில் கையெழுத்து போட்டு தொடங்கி வைத்தார்.. கையெழுத்து இயக்கத்தை தொடங்கி வைத்து அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேசியதாவது:
டாக்டர்கள்: "நீட் விலக்குதான் எங்கள் இலக்கு என்று தொடர்ந்து போராடி வருகிறோம். நீட் தேர்வால் தரமான டாக்டர்கள் கிடைப்பார்கள் என்று சொன்னார்கள்.. பிறகு, மருத்துவக் கல்லூரிகளில் பணம் கொடுத்து சேருவது தடுக்கப்படும் என்றும் சொன்னார்கள்.
ஆனால் முதுகலை பட்டப்படிப்பில் நீட் தேர்வில் முட்டை மதிப்பெண் எடுத்தாலும் பணம் கொடுத்து சேர முடியும் என்பதைதான் உருவாக்கி இருக்கிறார்கள். (அப்போது உதயநிதி, ஒரு முட்டையை கையில் எடுத்து காட்டினார்)
கையெழுத்து இயக்கம்: நீட் தேர்வுக்கு எதிராக போராடுவதற்காக அதிமுகவினரையும் அழைக்கிறேன்.. எல்லோரும் சேர்ந்து போராடுவோம் வாருங்கள். இந்த கையெழுத்து இயக்கத்தில் பங்கெடுங்கள்... முன்பு பாஜக கூட்டணியில் இருந்ததால் வரமுடியவில்லை.. ஆனால், இப்போது கூட்டணியிலிருந்து வெளியே வந்துவிட்டீர்கள்.. தமிழர்களின் உரிமையை காக்க வாருங்கள்.
இதை வெறும் திமுக.வின் பிரச்சனை என்று மட்டும் யாரும் கருத வேண்டாம். இது ஒட்டுமொத்த தமிழர்களின் பிரச்சனை. இந்த விஷயத்தில், தொடர்ந்து ஒன்றிய அரசு அலட்சியம் செய்தால் ஜல்லிக்கட்டு போராட்டத்தைபோல், மிகப்பெரிய போராட்டத்தை சந்திக்க நேரிடும் என்பதை எச்சரிக்கையாகவே சொல்கிறேன்.
பூட்டு - சாவி: இந்த நேரத்தில் ஒரு கதையை சொல்ல விரும்புகிறேன். சாவியை பார்த்து சுத்தியல் கேட்டதாம், நான் இவ்வளவு பெரியதாகவும் வலிமையாகவும் இருந்தும் பூட்டை திறக்க முடியவில்லை... ஆனால் நீ மட்டும், ஈஸியாக பூட்டை திறந்து விடுகிறாயே எப்படி என்று கேட்டதாம்.
அதற்கு சாவி சொன்னதாம், "நீ தலையில் அடிக்கிறாய். நான் பூட்டின் இதயத்தை தொடுகிறேன்" என்றதாம். அதை போல் எவ்வளவு வலிமையான கட்சியாக இருந்தாலும் பாஜகவால், தமிழர்களின் இதயத்தை தொட முடியாது என்றார்.
உதயநிதியின் இந்த பேச்சை பாஜக மட்டுமல்லாமல் அதிமுகவும் உற்று கவனித்து வருகிறது.. காரணம், பாஜகவை கூட்டணியிலிருந்து கழட்டிவிடப்பட்டதையடுத்து, எதிர்க்கட்சிகள் தொடர்ந்து அதிமுகவை விமர்சித்து வருகின்றன. ஒருவேளை, இது தேர்தலுக்கான வாக்கு வங்கி யுக்தியாக இருக்குமோ என்ற சந்தேகத்தையும் கிளப்பிவிட்டு வருகின்றன.
நிலைப்பாடு என்ன: ஆனால், பாஜகவுடன் கூட்டணி இல்லை என்பதை, கட்சியில் தீர்மானமாகவே நிறைவேற்றி விட்டதுடன், செய்தியாளர்களிடமும் 3 முறை தன்னுடைய நிலைப்பாட்டை அறிவித்துவிட்டார் எடப்பாடி பழனிசாமி. போதாக்குறைக்கு, இதை ஒரு பிரச்சாரமாகவே வீடுதோறும் மக்களிடம் எடுத்து செல்லுங்கள் என்று நிர்வாகிகளிடம் அசைன்மென்ட்டும் தந்துள்ளார்.
அந்தவகையில், பாஜகவுடன் கூட்டணி இல்லை என்பது உறுதியாகிஉள்ளது.. வழக்கமாக, திமுகவுக்கு மெயின் எதிரியே பாஜகவாக இருந்துவரும்நிலையல், அதிமுகவும் இந்த முடிவை எடுத்துள்ளது.. அந்தவகையில், "பாஜக எதிர்ப்பு" என்ற விஷயத்தில், திமுகவும், அதிமுகவும் ஒரே புள்ளியில் தற்போது இணைந்துள்ளன..
அழைப்பு: வரும் தேர்தலில், பாஜக எதிர்ப்பு வாக்குகளை யார் அறுவடை செய்யப்போகிறார்கள் என்ற எதிர்பார்ப்பு ஒருபக்கம் இருந்தாலும், பாஜகவை எதிர்ப்பதில் 2 திராவிட கட்சிகளுமே உறுதியாக உள்ளன. இதை அடிப்படையாக, நீட் விவகாரத்தில், அதிமுகவுக்கு அழைப்பு விடுத்து, அமைச்சர் உதயநிதி பேசியிருப்பது, தமிழக அரசியலில் மிகுந்த கவனத்தை பெற்று வருகிறது. எனினும், இந்த விஷயத்தில் அதிமுகவின் பதில்? என்ன என்று தெரியவில்லை.. பொறுத்திருந்து பார்ப்போம்..!!!












Click it and Unblock the Notifications