காங்கிரஸ் கட்சியில் இருந்து ஹசீனா சையத் விலகல்! கார்கே, செல்வப்பெருந்தகை மீது ஊழல் குற்றச்சாட்டு
சென்னை: தமிழக காங்கிரஸ் கட்சியிலிருந்து விலகுவதாக அக்கட்சியின் மகளிர் அணி தலைவி ஹசீனா சையத் அறிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் ராகுல்காந்திக்கு கடிதமும் எழுதியுள்ளார்.
இதுகுறித்து அவர் ராகுல்காந்திக்கு அனுப்பிய கடிதத்தில் கூறியிருப்பதாவது: 2026 சட்டசபைத் தேர்தலுக்கான சீட் ஒதுக்கீட்டில் எனக்கு இழைக்கப்பட்ட அவமதிப்பைக் கண்டித்து, நீண்டகாலமாக தான் நேசித்த கட்சியில் இருந்து வேதனையுடன் ராஜினாமா செய்வதாக அறிவித்துள்ளார்.
மத்திய தேர்தல் குழுவும் (CEC) உயர்நிலைத் தலைமையும் உறுதி அளித்தபோதிலும், சட்டசபைத் தேர்தலில் போட்டியிடும் வாய்ப்பு எனக்கு மறுக்கப்பட்டதே இந்த ராஜினாமாவுக்குக் காரணம்.

இது எனக்கு தனிப்பட்ட முறையில் மன வலியை ஏற்படுத்தியதோடு, கட்சிக்கும் அவப்பெயரை ஏற்படுத்தியுள்ளது.
இந்திரா காந்தி, ராஜீவ் காந்தி மற்றும் சோனியா காந்தி ஆகியோரின் 33 சதவீத மகளிர் இட ஒதுக்கீட்டு கனவு வெறும் வெற்றுப் பேச்சாகிவிட்டது. நானும், தமிழ்நாடு மகளிர் காங்கிரஸைச் சேர்ந்த பல தகுதியான பெண்களும் சட்டசபைத் தேர்தலில் போட்டியிட ஒரு சீட்டு கூட ஒதுக்கப்படாமல் புறக்கணிக்கப்பட்டதாலேயே ராஜினாமா செய்கிறேன்.
மகளிர் காங்கிரஸ் தலைவராக எனக்கு அநீதி இழைக்கப்பட்டதாக உணர்கிறேன். தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகையை ஆதரிக்கும் "ஊழல் நிறைந்த அமைப்பிற்கு" காங்கிரஸ் தலைவர் திரு. மல்லிகார்ஜுன் கார்கே ஆதரவளிக்கிறார்.
எனது முறையீடுகள் பயனற்றதாகிவிட்டதாகத் தெரிவித்தார். ஏஐசிசி செயலாளர் திரு. ஸ்ரீவெல்ல பிரசாத் (முன்னாள் தமிழக பொறுப்பாளர்), மயிலாடுதுறை எம்.பி. சுதா, சாம் பிட்ரோடாவுடன் தொடர்புடைய திரு. புஷ்பராஜ், தற்போதைய தமிழக பொறுப்பாளர் திரு. கிரிஷ் சோடங்கர் மற்றும் நிவேதித் ஆல்வா போன்றோரும் இத்தகைய தீய செயல்களில் ஈடுபட்டனர்.
மாணவர் காங்கிரஸ் முதல் 2008 இளைஞர் காங்கிரஸ் 'திறமை கை' திட்டம் வரை, மூன்று தசாப்தங்களாக கட்சிக்கு அர்ப்பணிப்புடன் பணியாற்றியிருக்கிறேன். எனது கண்ணியமும் சுயமரியாதையும் சிதைக்கப்பட்டதால், எனக்கே நீதி மறுக்கப்படும் நிலையில் பொறுப்பாளர்களுக்கான 33% மகளிர் இட ஒதுக்கீட்டு உரிமைகளை நிலைநாட்டுவது சாத்தியமில்லை.
இதன் விளைவாக, தமிழ்நாடு மகளிர் காங்கிரஸ் மாநிலத் தலைவர் மற்றும் கட்சியின் அடிப்படை உறுப்பினர் பதவிகளிலிருந்து ராஜினாமா செய்கிறேன். காந்தி குடும்பத்தையும் கட்சியையும் என்றென்றும் நேசிப்பேன்.
காங்கிரஸ் தலைவரே, மாநிலத் தலைவரின் "ஊழல் நிறைந்த அமைப்புக்கு" துணைபோவது எப்படி? இது, உண்மையான தொண்டர்களை வெளியேற நிர்பந்திப்பதாகவும், தமிழ்நாடு காங்கிரஸ் கட்சி அமைப்பை "சரி செய்ய முடியாத" நிலைக்குத் தள்ளி, பெரும் இழப்பை ஏற்படுத்துகிறது.
எனினும், கட்சி மற்றும் காந்தி குடும்பத்தின் மீதான எனது அன்பு தொடரும் என்று அவர் உறுதியளித்தார். காங்கிரஸ் கட்சியில் மேலூர் சட்டசபை தொகுதிக்கு அவரது பெயர் பரிசீலனையில் இருந்ததாக தகவல்கள் வெளியாகின. அப்போதுதான் திடீரென விஸ்வநாதன் தேர்வு செய்யப்பட்டார்.












Click it and Unblock the Notifications