மரக்காணம் கலவரம்: பாமகவிடம் இருந்து இழப்பீடு வசூல்.. 8 வாரங்களில் இறுதி முடிவெடுக்க ஐகோர்ட் ஆணை!
சென்னை: கடந்த 2013 ஆம் ஆண்டு நடந்த மரக்காணம் கலவரத்தை தொடர்ந்து ஏற்பட்ட இழப்பை, பாமகவிடம் வசூலிப்பது தொடர்பான விசாரணையை உயர் நீதிமன்ற உத்தரவின்படியும், சட்டப்படியும் நடத்தி, எட்டு வாரங்களில் உத்தரவு பிறப்பிக்க தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
மாமல்லபுரத்தில், கடந்த 2013 ல் வன்னியர் சங்கத்தினர் நடத்திய சித்திரை திருவிழாவின்போது, மரக்காணத்தில் ஏற்பட்ட கலவரத்தில் பேருந்துகள் சேதப்படுத்தப்பட்டன. பல்வேறு மாவட்டங்களில் டாஸ்மாக் கடைகள் தீ வைக்கப்பட்டன.

பா.ம.க.வினர் போராட்டம் காரணமாக, 2013 ஏப்ரல் 25 ஆம் தேதி முதல் மே 19 ஆம் தேதி வரை சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களில் பொது போக்குவரத்து பாதிக்கப்பட்டது. 12 மாவட்டங்களில் டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டன.
இதனால் ஏற்பட்ட வருவாய் இழப்பை பாமகவிடம் வசூலிப்பது தொடர்பாக, தமிழக வருவாய் நிர்வாக ஆணையர் விசாரணை நடத்தி வருகிறார். இந்த விசாரணை, தமிழ்நாடு பொது சொத்து சேதம் தடுப்பு சட்டத்தை பின்பற்றி நடத்தப்படவில்லை எனக் கூறி, இது சம்பந்தமாக இறுதி உத்தரவு பிறப்பிக்க தடை விதிக்கக் கோரி பாமக கவுரவத் தலைவர் ஜி.கே.மணி, சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார்.
அந்த மனுவில், இழப்பீட்டை தீர்மானிக்கும் முன், வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளதா என ஆரம்பகட்ட விசாரணை நடத்த உயர் நீதிமன்ற இரு நீதிபதிகள் அமர்வு உத்தரவிட்டுள்ள போதிலும், அதை பின்பற்றாமல் இழப்பீடு குறித்து முடிவு செய்யும் விசாரணையை நடத்தக் கூடாது எனவும், இழப்பீடு கோரி டாஸ்மாக் நிர்வாகம், போக்குவரத்து கழகங்கள் அளித்த விண்ணப்பங்களை நிராகரிக்க வேண்டும் என்றும் கூறப்பட்டுள்ளது.
சட்ட விதிகளை பின்பற்றி விசாரணை நடத்தாமல் இழப்பீடு குறித்து இறுதி உத்தரவு பிறப்பிக்க தடை விதிக்க வேண்டும் என மனுவில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இந்த மனு, நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் முன் விசாரணைக்கு வந்த போது, வெறும் அச்சத்தின் அடிப்படையில், வருவாய் நிர்வாக ஆணையரின் விசாரணையை தடுக்கும் நோக்கில் இந்த வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளதாகவும், உயர் நீதிமன்ற உத்தரவின் அடிப்படையிலும், சட்ட விதிகளின்படியும் விசாரணை நடத்தப்படும் என அரசுத் தரப்பில் ஆஜரான கூடுதல் தலைமை வழக்கறிஞர் ரவீந்திரன் உறுதியளித்தார்.
இதை பதிவு செய்து கொண்ட நீதிபதி, உயர் நீதிமன்ற உத்தரவின்படி விசாரணையை நடத்தி, எட்டு வாரங்களில் இறுதி உத்தரவை பிறப்பிக்க வேண்டும் என உத்தரவிட்டு, வழக்கை முடித்து வைத்தார்.












Click it and Unblock the Notifications