சனாதன பாதுகாவலர்னு சொல்றீங்க.. விரும்பத்தகாத வார்த்தை மட்டும் பேசலாமா? ரங்கராஜனுக்கு ஹைகோர்ட் கேள்வி
சென்னை: சனாதனத்தின் பாதுகாவலர் என்று சொல்லக்கூடிய நபர் விரும்பத்தகாத வார்த்தைகளை சமூக வலைதளங்களில் பயன்படுத்த கூடாது என்று அறிவுறுத்திய சென்னை உயர்நீதிமன்றம் நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் ரங்கராஜன் நரசிம்மன் என்பவருக்கு 2000 ரூபாய் அபராதம் விதித்து உத்தரவிட்டு உள்ளது.
சென்னை கபாலீஸ்வரர் கோவில் மயில் சிலை காணாமல் போன விவகாரம் தொடர்பாக பிரபல தொழிலதிபர் வேணு சீனிவாசனுக்கு எதிராக சமூக வலைத்தளங்களில் குற்றச்சாட்டுகளை பதிவு செய்ய கூடாது என வலதுசாரி ஆதரவாளரான ரங்கராஜன் நரசிம்மனுக்கு தடை விதிக்க வேண்டும் என்று கடந்த 2022 செப்டம்பர் மாதம் 2 ஆம் தேதி உத்தரவு பிறப்பித்த நிலையில், இந்த உத்தரவை மீறி தொடர்ந்து சமூக வலைத்தளங்களில் விரும்பத்தகாத வார்த்தைகளை பயன்படுத்தி வருவதாக கூறி வேணு சீனிவாசன் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தாக்கல் செய்து இருந்தார்.

இந்த வழக்கில் ரங்கராஜன் நரசிம்மன் மன்னிப்பு கோரினார். இது தொடர்பாக எக்ஸ் சமூக வலைதள பக்கத்தில் மற்றொரு பதிவையும் அவர் பதிவு செய்து இருக்கிறார். இது நீதிமன்ற அவமதிப்பு செயல் என்று வேணு சீனிவாசன் தரப்பில் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்கு நீதிபதிகள் நிஷா பானு மற்றும் நீதிபதி மாலா அடங்கிய அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிமன்றத்தின் கண்ணியத்திற்கு பாதிப்பு ஏற்படுத்தும் வகையில் சமூக வலைத்தளங்களில் பதிவிட்டு வருவதாக கூறி ரங்கராஜன் நரசிம்மனுக்கு 2000 ரூபாய் அபராதம் விதித்த நீதிபதிகள், அந்த தொகையை நான்கு வாரங்களில் செலுத்த வேண்டும் என உத்தரவிட்டனர்.

மேலும் பாலியல் தொழிலாளர்களை குறிப்பிட கூடிய வார்த்தையை பயன்படுத்தியது ஆட்சேபத்துக்குரியது என்று தெரிவித்த நீதிபதிகள், சனாதனத்தின் பாதுகாவலர் என்று கூறிக்கொள்ளும் நபர் சமூக வலைத்தளங்களில் விரும்பத்தகாத வார்த்தைகளை பயன்படுத்த கூடாது என்றும், அதை ஊக்குவிக்கவும் முடியாது எனவும் தெரிவித்தனர். மேலும், இளைஞர்கள், வயதானவர்கள் என அனைவரும் பயன்படுத்தும் சமூக வலைத்தளங்களில் நாகரிகத்தையும், கண்ணியத்தையும் பேண வேண்டிய அவசியத்தை உணர்த்த இரண்டு வாரங்களுக்கு சமூக வலைத்தளங்களை பயன்படுத்துவதில் இருந்து விலகி இருக்க வேண்டும் என்று நீதிபதிகள் உத்தரவிட்டனர்.












Click it and Unblock the Notifications