காண்ட்ராக்ட் செவிலியர்களுக்கு யோகம்.. நிரந்தர செவிலியர்களுக்கு இணையாக ஊதியம்! கோர்ட் போட்ட ஆர்டர்.!
சென்னை: தமிழக அரசு மருத்துவமனைகளில் தொகுப்பூதிய அடிப்படையில் நியமிக்கப்பட்ட செவிலியர்களுக்கு, நிரந்தர செவிலியர்களுக்கு இணையாக ஊதியம் வழங்குவது தொடர்பாக 2018ம் ஆண்டு பிறப்பிக்கப்பட்ட உத்தரவை மூன்று மாதங்களில் அமல்படுத்த தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
தமிழகத்தில் அரசு மருத்துவமனைகளில் கடந்த 2015 ஆம் ஆண்டு தொகுப்பூதிய அடிப்படையில் 7,243 செவிலியர்கள் பணியமர்த்தப்பட்டனர். 2 ஆண்டுகளுக்குப் பின் பணி நிரந்தரம் வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டும், 8 ஆண்டுகளாகியும் 4,000 செவிலியர்கள் மட்டுமே பணி நிரந்தரம் செய்யப்பட்டனர்.

இதை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. வழக்கில், தொகுப்பூதிய செவிலியர்கள் நிரந்தர செவிலியர்களுக்கு இணையாக பணி செய்வதால் அவர்களுக்கு சம வேலைக்கு சம ஊதியம் வழங்க வேண்டும், மக்கள் நல்வாழ்வு துறை செயலாளர் தலைமையில் குழு அமைத்து நிரந்தர செவிலியர்களின் பணியுடன், தொகுப்பூதிய செவிலியர்கள் செய்யும் பணியை ஒப்பீடு செய்து 6 மாதத்தில் சம வேலைக்கு சம ஊதியம் வழங்குவது தொடர்பாக முடிவெடுக்க வேண்டுமென கடந்த 2018 ஆம் ஆண்டு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.
இந்த உத்தரவை அரசு நிறைவேற்றாததால், நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த உயர் நீதிமன்றம், தொகுப்பூதிய செவிலியர்கள், நிரந்தர செவிலியர்களின் பணி குறித்து ஆய்வு செய்து அறிக்கை அளிக்க ஓய்வு பெற்ற நீதிபதிகள் பார்த்திபன் மற்றும் பாரதிதாசன் அடங்கிய குழுவை அமைத்து உத்தரவிட்டது.
இந்த வழக்கை நீதிபதிகள் ஆர்.சுப்பிரமணியன் மற்றும் பி.டி.ஆஷா அடங்கிய அமர்வு விசாரித்தது. நீதிபதிகள் பார்த்திபன் மற்றும் பாரதிதாசன் அடங்கிய குழு அளித்த அறிக்கையின் அடிப்படையில், தொகுப்பூதிய அடிப்படையில் நியமிக்கப்பட்ட செவிலியர்களுக்கு, நிரந்தர செவிலியர்களுக்கு இணையாக ஊதியம் வழங்குவது தொடர்பாக கடந்த 2018ம் ஆண்டு உயர் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை மூன்று மாதங்களில் அமல்படுத்த வேண்டும் என தமிழக அரசுக்கு நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
தற்போதைக்கு இந்த நீதிமன்ற அவமதிப்பு வழக்கை முடித்து வைப்பதாகக் குறிப்பிட்ட நீதிபதிகள், இந்த உத்தரவை அமல்படுத்தாவிட்டால், இந்த வழக்கை மீண்டும் விசாரணைக்கு எடுக்கலாம் எனவும் நீதிபதிகள் தங்கள் உத்தரவில் சுட்டிக் காட்டியுள்ளனர்.
செவிலியர்கள்: தமிழ்நாடு மருத்துவப் பணிகள் ஆட்சேர்ப்பு வாரியம் மூலம் சுமார் 15,000 செவிலியர்கள் தற்போது தொகுப்பூரியத்தில் பணியாற்றி வருகின்றனர். பணியில் சேரும்போது அவர்களுக்கு 7500 ஊதியம் வழங்கப்பட்டது. 2014 ஆம் ஆண்டு போராட்டம் நடத்தப்பட்ட நிலையில் அது 14,000 ஆக உயர்த்தப்பட்டது. தொடர்ந்து 2021 இல் பதினெட்டாயிரம் ஊதியம் வழங்கப்பட்டது. இந்த நிலையில் இவர்களுக்கு செவிலியர்களுக்கு இணையான ஊதியம் வழங்கினால் 54,000 வரை கிடைக்கும். மேலும் மகப்பேறு விடுப்பு உள்ளிட்டவையும் வழங்கப்படுவதில்லை. எனவே சம வேலைக்கு சம ஊதியம் வழங்க வேண்டும் என தொகுப்பூதிய செவிலியர்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.












Click it and Unblock the Notifications