“5 பேருக்கு மறுவாழ்வு கொடுத்த 10மாத குழந்தை”.. பெற்றோருக்கு நெகிழ்ச்சியுடன் கமல்ஹாசன் சொன்ன வார்த்தை
சென்னை: கேரளாவில் பெற்றோருடன் காரில் பயணித்தபோது விபத்தில் சிக்கி மூளைச்சாவு அடைந்த 10 மாத குழந்தையின் உடல் உறுப்புகள் தானம் செய்யப்பட்டது. இதன் மூலம் 5 பேர் மறுவாழ்வு பெறுகின்றனர். இந்தச் சம்பவத்தை மநீம தலைவர் கமல்ஹாசன் எம்.பி நெகிழ்ந்து போய் பாராட்டி உள்ளார்.
கேரள மாநிலம் பத்தனம்திட்டா மாவட்டம் மல்லப்பள்ளி மலையாற்றூரை சேர்ந்தவர் அருண் ஆபிரகாம். இவரது மனைவி ஷெரின் ஆன் ஜான். இவர்களது ஒரே மகள் ஆலின் ஷெரின் ஆபிரகாம். பிறந்து 10 மாதங்களே ஆகின்றன. ஷெரின் ஆன் ஜான் பட்டம் பெறும் நிகழ்ச்சிக்காக குடும்பத்தினருடன் கோட்டயம் சென்றுவிட்டு, கடந்த 5 ஆம் தேதி காரில் வீடு திரும்பிக்கொண்டு இருந்தார்.

அப்போது இவர்களது கார் திடீரென அந்த வழியாக வந்த மற்றொரு கார் மீது மோதி விபத்துக்குள்ளானது. இதில் 10 மாத குழந்தை ஆலின் ஷெரின் ஆபிரகாம் படுகாயம் அடைந்தது. மேலும் ஷெரின் ஆன் ஜான் மற்றும் அவரது தந்தை ராஜன் ஜான், தாய் ஜெசி ஜான் ஆகியோரும் காயம் அடைந்தனர். கார்கள் விபத்துக்கு உள்ளானதை பார்த்த அக்கம் பக்கத்தினர் அவர்களை மீட்டு திருவல்லா தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர்.
படுகாயம் அடைந்திருந்த குழந்தை ஆலின் ஷெரின் ஆபிரகாம் கொச்சியில் உள்ள அமிர்தா மருத்துவமனைக்கு மேல் சிகிச்சைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. ஆனாலும் கடந்த 13 ஆம் தேதி குழந்தை மூளைச்சாவு அடைந்தது. இதையடுத்து 10 மாத குழந்தை ஆலின் ஷெரின் ஆபிரகாம் உடல் உறுப்புகளை தானம் செய்ய அதன் பெற்றோர் விரும்பினர்.
இதற்கான நடவடிக்கைகளை குழந்தையின் தந்தை அருண் ஆபிரகாம் உடனடியாகச் செய்தார். அதன்படி குழந்தையின் கல்லீரல், இரு சிறுநீரகங்கள், இதய வால்வு மற்றும் இரு கண்கள் ஆகியவை தானமாக வழங்கப்பட்டன. இதன்மூலம் 5 குழந்தைகள் பயனடையும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. 'கேரளாவின் இளம் உடல் உறுப்பு நன்கொடையாளர்' என்ற பெருமையை ஆலின் ஷெரின் ஆபிரகாம் பெற்றுள்ளார்.
இதில் கல்லீரல், திருவனந்தபுரம் கிம்ஸ் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் ஆறு மாத குழந்தைக்கு தானம் செய்யப்பட்டது. குழந்தை ஆலின் ஷெரின் ஆபிரகாமின் 2 சிறுநீரகங்கள் திருவனந்தபுரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் குழந்தைக்கு வழங்கப்பட்டன. 10 மாத குழந்தையின் உடல் உறுப்பு தானத்தால் 5 குழந்தைகள் வாழ்வு பெறும் என்று கேரள சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
உறுப்பு தானம் செய்த குழந்தை ஆலின் ஷெரின் ஆபிரகாமுக்கு கேரளா முதல்வர் பினராயி விஜயன் உள்பட பல்வேறு தரப்பினரும் இரங்கல் தெரிவித்து உள்ளனர். பெற்றோரின் இந்த முடிவுக்கு பாராட்டு தெரிவித்துள்ளனர். இதுகுறித்து முதலமைச்சர் பினராயி விஜயன் வெளியிட்ட அறிவிப்பில், "குழந்தையின் உடல் அரசு மரியாதையுடன் நல்லடக்கம் செய்யப்படும்'' என்று அறிவித்துள்ளார்.
இந்நிலையில் இந்த உறுப்பு தானத்தை நெகிழ்ந்து பாராட்டியுள்ளார் கமல்ஹாசன். இது தொடர்பாக மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் எக்ஸ் தளப் பக்கத்தில், "அருண் ஆபிரகாம், ஷெரின் ஆன் ஜான், உங்களுக்கு சல்யூட். உங்கள் குழந்தை ஆலின் ஷெரின் ஆபிரகாம் தாயின் கருவறையில் பல மாதங்கள் வளர்ந்து, 10 மாதங்கள் உங்களது எல்லையற்ற அன்பில் தழுவப்பட்டாள்.
இப்போது அவள், மற்ற 5 குழந்தைகள் சிறப்பாக வாழ உதவுவுகிறாள். மனநிலையாலும், இதயத்தாலும் நீங்கள் அன்பான பெற்றோர்கள். எப்போதும் அப்படியே இருப்பீர்கள். வாழ்க்கையின் மூலம் உங்கள் மகிழ்ச்சியை மீட்டெடுக்கவும், நீங்கள் இருவரும் உண்மையிலேயே அதற்கு தகுதியானவர்கள்" என்று நெகிழ்ச்சியோடு தெரிவித்துள்ளார்.


Click it and Unblock the Notifications
