கேமரா முன்னாடியே கதறி அழுத ஆர்ஜே பாலாஜி.. ரசிகர்களிடம் ஸாரி கேட்டு.. கருப்பு ரிலீஸ் சிக்கல் பின்னணி
சென்னை: ஒரு திரைப்படம் உருவாவதற்கு பின்னால் இருக்கும் உழைப்பும், அது ரிலீஸ் நேரத்தில் சந்திக்கும் சவால்களும் ஒரு இயக்குநரை எந்த நிலைக்குக் கொண்டு செல்லும் என்பதற்கு இந்த கருப்பு படம் சம்பவம் ஒரு சாட்சியாக அமைந்துள்ளது.. டைரக்டர் ஆர்ஜே பாலாஜி தனது கருப்பு திரைப்படம் வெளியாவதில் ஏற்பட்டுள்ள சிக்கல்கள் குறித்து பேசி, ரசிகர்களிடம் கண்ணீர் மல்க மன்னிப்பு கேட்டுள்ள வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.. பெரும் போராட்டத்திற்குப் பிறகு இன்று மாலை படம் வெளியாகும் என்று அவர் உருக்கமாகத் தெரிவித்துள்ள அந்த பரபரப்பு தகவலை இங்கே சுருக்கமாக பார்ப்போம்..!!
ஆர்ஜே பாலாஜி இயக்கத்தில் பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் உருவாகியுள்ள கருப்பு திரைப்படம் இன்று ரிலீஸாகவிருந்த நிலையில், தியேட்டர்களில் படம் திரையிடப்படுவதில் சில சிக்கல்கள் ஏற்பட்டுள்ளன.. இதனால் காலை 9 மணி காட்சிக்கு ஆர்வத்துடன் வந்த ரசிகர்கள் ஏமாற்றத்துடன் திரும்பிய சூழல் உருவானது.

கருப்பு படம் ரிலீஸ்
இந்த விவகாரம் தொடர்பாக தனது சோஷியல் மீடியா பக்கத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ள இயக்குநர் ஆர்ஜே பாலாஜி, கேமரா முன்னாடியே கண்ணீர் விட்டு அழுது ரசிகர்களிடம் உருக்கமாக மன்னிப்பு கேட்டுள்ளார்.. ஒரு படம் எடுத்துவிட்டு அது திரைக்கு வரும் நேரத்தில் ஒரு இயக்குநர் படும் வலியை அந்த வீடியோவில் அவர் வெளிப்படுத்திய விதம் பார்ப்பவர்களை கலங்க வைத்துள்ளது..
அந்த வீடியோவில் ஆர்ஜே பாலாஜி பேசியபோது, "ரசிகர்களிடம் நான் மனதார மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன், உண்மையில் இது நடந்திருக்கவே கூடாது.. படம் பார்க்க தமிழ்நாடு, ஆந்திரா, கேரளா என எங்கு நீங்கள் தியேட்டருக்கு காலையில் 9 மணிக்குச் சென்றிருந்தாலும் உங்களிடம் மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன்.
ஆர் ஜே பாலாஜி கண்ணீர்
படம் பார்ப்பதே, நமது வாழ்க்கையில் உள்ள கவலை மறந்து போகத்தான், அப்படியிருக்கும்போது, அப்படியான படம் பார்ப்பதே மிகவும் சவாலானதாக மாறிப்போனதற்கும் மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன். நானும் இதை எதிர்பார்க்கவில்லை. மே 14ம் தேதி கருப்பு வெளியாகி பெரிய அளவில் வெற்றி பெறும் என்று நான் பலமுறை யோசித்து இருக்கிறேன்.
படம் இன்று மாலை 6 மணிக்கு வெளியாகும் என்றும் எதிர்பார்க்கிறேன். கடவுள் இந்த படத்திற்கு உள்ள எல்லா பிரச்னைகளையும் சரி செய்து கொடுப்பார். அனைவரும் படம் வெளியாவதற்கு வேலை செய்து கொண்டு இருக்கிறார்கள். பல தடைகளைக் கடந்துதான் படம் வெளியாகிறது, சூர்யா சார் இந்த படத்திற்காக நிறைய கொடுத்துவிட்டார். இந்த படம் கட்டாயம் வெளியாகும். படம் இன்று மாலை வரும், படம் உங்கள் அனைவருக்கும் பிடிக்கும் என்று நான் நம்புகிறேன்.
கருப்பன் வரான் வழி மறிக்காதே
கருப்பன் வரான் வழி மறிக்காதே என்கிறேன், ஆனால் பலரும் வழி மறித்துக் கொண்டுதான் இருக்கிறார்கள். அவற்றை எல்லாம் கடந்து படம் வெளியாகும். படம் நன்றாக இருக்கும், உங்களுக்குப் பிடிக்கும் என்று அழுது கொண்டே பேசிய வீடியோவைப் பதிவிட்டுள்ளார்.
இந்த வீடியோ இப்போது சூர்யா ரசிகர்கள் மத்தியில் வேகமாக பரவி வருகிறது. மேலும் பலர், ஆர்.ஜே. பாலாஜிக்கு ஆறுதல் கூறி வருகிறார்கள்..
எதிர்பார்ப்புகளையும் ஏமாற்றங்களையும் கடந்து, ஒரு படைப்பு ரசிகர்களை சென்றடையும் போது கிடைக்கும் அந்த வெற்றிதான் ஒரு இயக்குநருக்குக் கிடைக்கும் உண்மையான அங்கீகாரம். எத்தனை தடைகள் வந்தாலும், உழைப்பின் மீதுள்ள நம்பிக்கையும் ரசிகர்களின் அன்பும் அந்தப் படைப்பை நிச்சயம் கரை சேர்க்கும் என்பதில் மாற்றுக் கருத்து இல்லை.
அந்தவகையில், ஆர்ஜே பாலாஜியின் இந்த உருக்கமான வேண்டுகோள், கருப்பு படத்தின் மீதான எதிர்பார்ப்பை இன்னும் ஒருபடி உயர்த்தியுள்ளது.. எது எப்படியோ, தடைகளைத் தகர்த்து திரையில் கருப்பன் வரும்போது, ரசிகர்களின் கொண்டாட்டம் நிச்சயம் இரட்டிப்பாகவே இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது..!!












Click it and Unblock the Notifications