இன்று வானிலை எப்படி இருக்கும்! நேற்று மட்டும் 12 இடங்களில் வெயில் சதம்.. சென்னை கிளைமேட் என்ன
சென்னை: நாட்டில் பல இடங்களில் கனமழை பெய்து வரும் நிலையில், தமிழ்நாட்டில் அதற்கு நேர்மாறான ஒரு வானிலையே நிலவுகிறது. இங்கு இன்றும் பல இடங்களில் வெப்பம் அதிகரிக்கும் என அஞ்சப்படுகிறது.
நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் கடந்த சில நாட்களாகவே கனமழை கொட்டி வருகிறது. பல இடங்களில் கனமழையால் தக்காளி உள்ளிட்ட காய்கறி உற்பத்தி பாதிக்கும் அளவுக்கு மழை மோசமாக இருக்கிறது.
இருப்பினும், தமிழ்நாட்டில் அதற்கு நேர்மாறான ஒரு வானிலையே நிலவி வருகிறது. மாநிலத்தில் எங்கும் பெரியளவில் மழை இல்லாத நிலையில், வெப்பம் தொடர்ச்சியாக அதிகரித்து வருகிறது. இன்றும் வரும் நாட்களிலும் வானிலை எப்படி இருக்கிறது என்பதைப் பார்க்கலாம்.

வானிலை: மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக இன்று ஜூலை 31ஆம் தேதி தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். அதேபோல நாளை ஆகஸ்ட் 1 முதல் ஆகஸ்ட் 5ஆம் தேதி தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
அதிகபட்ச வெப்பநிலை: இன்று ஜூலை 31ஆம் தேதி தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் ஓரிரு இடங்களில் அதிகபட்ச வெப்பநிலை 38 டிகிரி முதல் 40 டிகிரி செல்சியஸ் அளவில் இருக்கக்கூடும்; ஓரிரு இடங்களில் இயல்பிலிருந்து 2 - 4 டிகிரி செல்சியஸ் அதிகமாக இருக்கக்கூடும். அதிக வெப்பநிலை மற்றும் அதிக ஈரப்பதம் இருக்கும் பொழுது வெப்ப அழுத்தம் (Heat Stress ) காரணமாக அசௌகரியம் ஏற்படலாம்.
சென்னை மற்றும் புறநகர்ப் பகுதிகளைப் பொறுத்தவரை இன்று வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 37-38 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 28-29 டிகிரி செல்சியஸை ஒட்டியே இருக்கக்கூடும். பல நாட்களுக்குப் பிறகு, நேற்றைய தினம் 12 இடங்களில் வெப்பம் 100 டிகிரி பாரன்ஹீட்டை கடந்ததால், பொதுமக்கள் கடும் அவதியுற்றனர். இன்றைய தினமும் கிட்டதட்ட அதேபோன்ற ஒரு வானிலையே இறுக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
மீனவர்களுக்கான எச்சரிக்கை: வங்கக்கடல் பகுதிகளில் வரும் ஆகஸ்ட் 3ஆம் தேதி வரை வரை: தென்தமிழக கடலோரப் பகுதிகள், மன்னார் வளைகுடா மற்றும் அதனை ஒட்டிய குமரிக்கடல் பகுதிகளில் சூறாவளிக் காற்று மணிக்கு 45 முதல் 55 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 65 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும். இன்று தெற்கு இலங்கை கடலோரப் பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகள், மத்திய கிழக்குப் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 45 முதல் 55 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 65 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.

மத்திய மேற்கு வங்கக்கடல் பகுதிகள், தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகள் மற்றும் அந்தமான் கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 40 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 55 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.
நாளை (ஆகஸ்ட் 1) இலங்கை கடலோரப் பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகள், வடக்கு ஆந்திர கடலோரப் பகுதிகள் மற்றும் மத்திய வங்கக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 45 முதல் 55 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 65 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும். தெற்கு வங்கக்கடல் மற்றும் அந்தமான் கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 40 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 55 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும் என்பதால் மீனவர்கள் இப்பகுதிகளுக்குச் செல்ல வேண்டாமென்று அறிவுறுத்தப்படுகிறார்கள்.












Click it and Unblock the Notifications