குமரி மாவட்டத்தில் 10 மடங்கு அதிக மழை! 11 ஆண்டுகளில் இல்லாத சாதனை! வெதர்மேன் வெளியிட்ட எச்சரிக்கை!
சென்னை: 2010ம் ஆண்டு டிசம்பர் மாதத்திற்கு பிறகு தற்போதுதான், கன்னியாகுமரி மாவட்டத்தில் மிக கனமழை பதிவாகி இருப்பதாக தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் தெரிவித்துள்ளார்.
குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக சென்னை மற்றும் தமிழகத்தின் வடக்கு மாவட்டங்களில் கடந்த சில நாட்களாக கன மழை பெய்தது . அதேநேரம் தெற்கு எல்லையான கன்னியாகுமரி மாவட்டத்திலும் தொடர்ந்து கன மழை பெய்து வந்தது.
தற்போது சென்னை உள்ளிட்ட பகுதிகளில் மழை நின்று விட்ட நேரத்தில் அனைவரது கவனமும் கன்னியாகுமரி மாவட்டம் பக்கம் சென்றுள்ளது. ஆனால் அரசும் சில ஊடகங்களும் கவனிக்கும் முன்பாகவே கன்னியாகுமரி மாவட்டம் வெள்ளத்தில் மிதந்து கொண்டிருக்கிறது என்பது அந்த மாவட்ட மக்கள் குற்றச்சாட்டாக உள்ளது.

வழக்கமான மழை அளவு
கன்னியாகுமரி மாவட்டத்தில் அக்டோபர் 1ஆம் தேதி முதல் நவம்பர் 12ஆம் தேதி வரையிலான காலகட்டத்தில் வழக்கமாக 7.2 மில்லிமீட்டர் என்பது சராசரி மழை அளவாக இருக்கும். ஆனால் இந்த முறை 70.1 மில்லி மீட்டர் என்ற அளவுக்கு மழை பெய்துள்ளது.

10 மடங்கு
அதாவது 10 மடங்கு அதிகமாக மழை பெய்துள்ளது. இதில் அச்சப்படத் தகவல் என்னவென்றால் இந்த மழை நின்று போகவில்லை. தொடர்ந்து கனமழை பெய்து கொண்டு இருக்கிறது. எனவே இந்த புள்ளி விவரத்தையும் தாண்டி அதிக அளவுக்கு மழை பொழிவு இருக்கும் என்ற எதிர்பார்ப்பு இருக்கிறது.

11 வருடங்கள் பிறகு
இந்த கணிப்பை, தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் உறுதி செய்துள்ளார். அவர் தனது டுவிட்டர் பதிவில் கூறியிருப்பதாவது: 2010ம் ஆண்டு டிசம்பர் மாதம் கன்னியாகுமரி மாவட்டத்தில் பெய்த கனமழைக்கு பிறகு இப்போதுதான் அதிக அளவுக்கு மழை பதிவாகி இருக்கிறது. மூன்றாவது நாளாக தொடர்ந்து மழை பெய்து வருகிறது. இன்னும் ஒரு நாள் அல்லது ஒன்றரை நாள் கனமழை அங்கு தொடரும். திங்கள்கிழமை பகல் முதல் கன்னியாகுமரியில் மழை அளவு குறையத் தொடங்கும். அடுத்த இரண்டு நாட்கள் கேரளா முழு உஷார் நிலையில் இருக்க வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
|
தண்டவாளத்தில் தண்ணீர்
மேலும் நெட்டிசன் ஒருவர் பதிவு செய்த வீடியோவை தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் ஷேர் செய்துள்ளார். அதில் தண்டவாளத்துக்கு மேலே மழை வெள்ளம் நீர் பெருக்கெடுத்து ஓடும் காட்சிகள் இருக்கின்றன இதை பார்த்தால் அங்கே நிலைமை எந்த அளவுக்கு இருக்கிறது என்பதை அனைவராலும் புரிந்துகொள்ள முடியும். ரயில் போக்குவரத்து உள்ளிட்டவை இந்த வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ளன. பல்வேறு ஊர்களில் இருந்தும் மாவட்டத் தலைநகரம் நாகர்கோவில் வருவதற்கு முடியாமல் அந்தக் கிராமங்கள் தனித் தீவுகளாக மாறியுள்ளன.












Click it and Unblock the Notifications