காவிரி, தென்பெண்ணை, பாலாற்றில் கடும் வெள்ளப்பெருக்கு - கண்ணீரில் தத்தளிக்கும் மக்கள்
வற்றாத ஜீவ நதிகளில் வரலாறு காணாத அளவிற்கு வெள்ளம் பெருக்கெடுத்துள்ளதால் எங்கும் தண்ணீர் சூழ்ந்து காணப்படுகிறது. லட்சக்கணக்கான மக்கள் தண்ணீரில் தத்தளிப்பதோடு கண்ணீரில் மூழ்கியுள்ளனர்.
சென்னை: வடகிழக்குப் பருவமழையின் தீவிரத்தால் வற்றாத ஜீவநதிகள் ஆக்ரோஷமாக ஓடிக்கொண்டிருக்கின்றன. காவிரி, தென்பெண்ணை, பாலாற்றில் கடும் வெள்ளம் பெருக்கெடுத்துள்ளது. மூன்று ஆறுகளிலும் லட்சக்கணக்கான கனஅடிநீர் பெருக்கெடுத்து ஓடுகிறது. குடியிருப்புகளையும், சாலைகளையும் வாரி சுருட்டிக்கொண்டு செல்லும் ஆறுகளை அச்சத்துடன் பார்த்து வருகின்றனர். சென்னை தொடங்கி கன்னியாகுமரி வரைக்கும் பல பகுதிகளை தண்ணீர் சூழ்ந்துள்ளதால் மக்கள் கண்ணீரில் தத்தளித்து வருகின்றனர்.

வங்கக்கடலில் வலுவடைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் கரையைக் கடந்ததால் தமிழகம், கர்நாடகா, ஆந்திராவில் கனமழை கொட்டித்தீர்த்தது. எங்கு பார்த்தாலும் வெள்ளக்காடாக காட்சி அளிக்கிறது. கர்நாடகாவில் காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் கனமழையால் ஒகேனக்கல் காவிரியாற்றில் தொடர்ந்து நீர்வரத்து அதிகரித்து வருகிறது. மேட்டூர் அணையில் இருந்து விநாடிக்கு 60 ஆயிரம் கனஅடி நீர் வெளியேற்றப்படுகிறது. ஒகேனக்கல் காவிரியாற்றில் நேற்று முன்தினம் மாலை விநாடிக்கு 50 ஆயிரம் கனஅடி வீதம் நீர்வரத்து பதிவானது. நேற்று காலை விநாடிக்கு 57 ஆயிரம் கன அடியாக அதிகரித்த நீர்வரத்து, நேற்று மாலை விநாடிக்கு 67 ஆயிரம் கன அடியாக அதிகரித்த காரணத்தால் ஒகேனக்கல் காவிரியாற்றில் பாறைகளை மூழ்கடித்தபடி இருகரையையும் வெள்ளம் தொட்டபடிஓடுகிறது. பிரதான அருவி, சினிபால்ஸ், ஐந்தருவி உள்ளிட்ட அருவிகளில் தண்ணீர் ஆர்ப்பரித்துக் கொட்டுகிறது.
மேட்டூர் அணை முழு கொள்ளளவை எட்டியுள்ளதால் அணைக்கு வரும் நீர் முழுவதும் வெளியேற்றப்படுகிறது. அணையில் உள்ள சுரங்க மின் நிலையம் வழியாக விநாடிக்கு 22 ஆயிரம் கனஅடியும், 16 கண் மதகு வழியாக 38 ஆயிரம் கன அடி நீரும் வெளியேற்றப்படுகிறது இதனால் காவிரி ஆற்றில் பெருவெள்ளமாய் தண்ணீர் பாய்ந்தோடிச் செல்கிறது.
தென்பெண்ணை ஆற்றில் வரலாறு காணாத வெள்ளம்
கனமழை பெய்ததால் தென்பெண்ணை ஆற்றில் திடீர் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. சாத்தனூர் அணையில் இருந்து 50 ஆயிரம் கனஅடி நீர் திறந்து விடப்படுகிறது. இது தவிர கடலூர், விழுப்புரம் மாவட்டத்தில் கொட்டி தீர்த்த கனமழையாலும், காட்டாறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதன் மூலம் தென்பெண்ணை ஆற்றில் தண்ணீர் வரத்து அதிகரித்துள்ளது.
முதல்கட்டமாக தென்பெண்ணை ஆற்றில் 75 ஆயிரம் கனஅடி நீர் வந்தது. பின்பு அது படிப்படியாக நேற்று காலை 1.25 லட்சம் கனஅடியாக அதிகரித்தது. இதன்காரணமாக தென்பெண்ணை ஆற்றின் இருகரைகளையும் தொட்டபடி தண்ணீர் செல்கிறது. ஆற்றின் கீழ்மட்டத்தில் இருந்து 25 அடி உயரத்துக்கு தண்ணீர் செல்கிறது. இன்று காலை 8 மணி நிலவரப்படி தண்ணீர் வரத்து 75 ஆயிரம் கனஅடியாக குறைந்தது. இந்த திடீர் வெள்ளப்பெருக்கு காரணமாக கடலூர் புதிய மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே உள்ள சுங்கச்சாவடி சாலை, மேல்பட்டாம்பாக்கம் சாலை, அழகியநத்தம் சாலை தண்ணீரில் மூழ்கியது.
கடலூர் மாநகராட்சி மற்றும் புறநகர் பகுதியில் உள்ள குண்டுசாலை, பெரியகங்கணாங்குப்பம், செம்மண்டலம், குண்டு உப்பலவாடி, கண்டக்காடு, தாழங்குடா, நாணல்மேடு, சுனாமி நகர், எஸ்.என்.சாவடி உள்ளிட்ட பல இடங்களில் வெள்ளம் சூழ்ந்துள்ளது. 10 ஆயிரம் வீடுகளை தண்ணீர் சூழ்ந்துள்ளதால் அந்த பகுதி தீவுபோல காணப்படுகிறது. மக்களின் இயல்பு வாழ்க்கை முற்றிலும் முடங்கியுள்ளது. அங்குள்ள வீடுகளில் முதல் தளம் வரை தண்ணீர் தேங்கி உள்ளதால் அங்குள்ளவர்கள் வெளியேற முடியாமல் தவித்து வருகின்றனர். மீட்புப்படையினரால் அனைவரும் பாதுகாப்பாக மீட்கப்பட்டு முகாம்களில் தங்க வைக்கப்பட்டனர். தொடர் வெள்ளப்பெருக்கு காரணமாக கடலூர் ஒன்றியத்துக்குட்பட்ட அழகியநத்தம் முதல் தாழங்குடா வரையில் உள்ள 4 ஆயிரம் ஏக்கர் விளைநிலங்கள் தண்ணீரில் மூழ்கியது. இதனால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.
பாலாற்றில் நூறாண்டுகளில் இல்லாத வெள்ளம்
கர்நாடக, ஆந்திரா வனப்பகுதியில் பெய்து வரும் கனமழை காரணமாக பாலாற்றில் நீர்வரத்து அதிகரித்துள்ளது. ஆந்திர மாநிலத்தில் உள்ள புல்லூர் தடுப்பணையில் இருந்து பாலாற்றில் தண்ணீர் திறந்துவிடப்பட்டுள்ளது. தமிழகத்தில் பெய்து வரும் கனமழை காரணமாக கிளை ஆறுகளில் பாயும் வெள்ளமும் பாலாற்றில் கலக்கத்தொடங்கியுள்ளது. வேலூர் மாவட்டத்தில் இருந்து கிட்டத்தட்ட 90 ஆண்டுகளுக்குப் பிறகு ஒரு லட்சம் கன அடி நீர் பாலாற்றில் திறந்து விடப்பட்டுள்ளது.
வேலூர், குடியாத்தம், பேரணாம்பட்டு, கே.வி.குப்பம் உள்ளிட்ட பகுதிகள் வெளுத்து வாங்கும் கனமழையால் பாலாற்றில் வரலாறு காணாத வகையில் வெள்ளம் ஏற்பட்டுள்ளது. வேலூர் குடியாத்தம் அருகே உள்ள கவுண்டயா மகாநதியிலும் தொடர் மழை காரணமாக வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. குடியிருப்புகளையும், பார்த்து பார்த்து கட்டிய வீடுகளையும் வெள்ளநீர் அடித்துக்கொண்டு செல்கிறது. காஞ்சிபுரம் அருகே பாலாற்றில் நூற்றாண்டுகளில் இல்லாத அளவிற்கு பாலங்களை மூழ்கடித்து வெள்ள நீர் சென்று கொண்டிருப்பதை ஏராளமானோர் அச்சத்துடன் பார்த்து வருகின்றன. வற்றாத ஜீவநதிகளாக பாய்ந்து வளப்படுத்தி வந்த ஆறுகள் தற்போது ஆக்ரோஷமாக மாறி ஒடி கடலில் கலக்கின்றன.












Click it and Unblock the Notifications