வங்கக்கடலில் காற்றழுத்தம் தமிழகத்தில் 5 நாட்களுக்கு கனமழை...கடலோர மாவட்டங்களிலும் மழைக்கு வாய்ப்பு
தமிழகத்தில் இன்று முதல் 8ஆம் தேதி வரைக்கும் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை மையம் அறிவித்துள்ளது. வங்கக் கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாக வாய்ப்புள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.
சென்னை: வளி மண்டல மேலடுக்குச் சுழற்சி காரணமாக நீலகிரி மாவட்டத்தில் ஓரிரு இடங்களில் மிக கன மழையும், கோயம்பத்தூர், சேலம், ஈரோடு, கிருஷ்ணகிரி, திருப்பத்தூர், வேலூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கன மழையும் பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை மையம் கூறிய நிலையில் சென்னையில் காலை நேரத்தில் ஈக்காட்டுத்தாங்கல், விருகம்பாக்கம், கே.கே.நகர், வளசரவாக்கம், கிண்டி உள்ளிட்ட இடங்களில் மழை பெய்தது. சாலைகளில் மழை நீர் தேங்கியதால் வாகன ஓட்டிகள் சிரமத்திற்கு ஆளாகினர்.
கடந்த 24 மணி நேரத்தில் ஏற்காட்டில் 13 செமீ மழை பதிவாகியுள்ளது. திருவண்ணாமலை, இளையாங்குடி, சாத்தனூர், ஜெயங்கொண்டம், மயிலாடுதுறை, விருத்தாச்சலம், திருவாலங்காடு உள்ளிட்ட ஊர்களில் 4 செமீ மழை பதிவாகியுள்ளது. எட்டயபுரம், காவேரிப்பாக்கம் உள்ளிட்ட பகுதிகளிலும் 2 செமீ மழையும், ஊத்தக்கரை, பெருஞ்சாணி, பேரவூரணி, மங்களாபுரத்தில் தலா 1 செமீ மழை பதிவாகியுள்ளது. இன்று முதல் 8ஆம் தேதி வரைக்கும் மழை நீடிக்கும் எனவும் வானிலை மையம் அறிவித்துள்ளது.

கனமழைக்கு வாய்ப்பு
இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் புவியரசன் வெளியிட்டுள்ள அறிவிப்பில், இன்று நீலகிரி மாவட்டத்தில் ஓரிரு இடங்களில் மிக கன மழையும், கோயம்பத்தூர், சேலம், ஈரோடு, கிருஷ்ணகிரி, திருப்பத்தூர், வேலூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கன மழையும், கடலோர மாவட்டங்கள், டெல்டா மாவட்டங்கள் மற்றும் புதுவை, காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழையும், ஏனைய மாவட்டங்களில் ஒருசில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழையும் பெய்யக்கூடும்.

தென் மாவட்டங்களில் மழை
நாளைய தினம் நீலகிரி, கோயம்பத்தூர், கிருஷ்ணகிரி, திருப்பத்தூர், மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கன மழையும், டெல்டா மாவட்டங்கள், ஏனைய வட மாவட்டங்கள் மற்றும் புதுவை, காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழையும், தென் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசான மழையும் பெய்யக்கூடும்.

லேசான மழை
நாளை மறுநாள் 6ஆம் தேதி நீலகிரி, கோயம்பத்தூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன மழையும், ஏனைய மேற்கு தொடர்ச்சி மலை ஒட்டிய திருப்பூர், தேனி, திண்டுக்கல், தென்காசி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் மிதமான மழையும், உள் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசான மழையும் பெய்யக்கூடும். செப்டம்பர் 7 மற்றும் 8ஆம் தேதிகளில் மேற்கு தொடர்ச்சி மலை ஒட்டிய நீலகிரி, கோயம்பத்தூர், திருப்பூர், தேனி, திண்டுக்கல், தென்காசி) மாவட்டங்கள் கடலோர மாவட்டங்கள் மற்றும் புதுவை, காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
மிதமான மழைக்கு வாய்ப்பு
சென்னையை பொறுத்தவரை அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும், நகரின் ஒருசில பகுதிகளில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 33 மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 26 டிகிரி செல்சியஸை ஒட்டி இருக்கும்.

மீனவர்களுக்கு அறிவிப்பு
வடக்கு மற்றும் அதனை ஒட்டிய மத்திய வங்க கடல் பகுதியில் அடுத்த 48 மணி நேரத்தில் ஒரு குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாவதன் காரணமாக வங்ககடல் பகுதிகளில் 04.09.2021, 05.09.2021 ஆகிய இரண்டு நாட்களில் மத்திய வங்க கடல் மற்றும் அதனை ஒட்டிய தென் மேற்கு வங்க கடல் பகுதிகளில் பலத்த காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோமீட்டர் வேகத்தில் வீசக்கூடும் மீனவர்கள் இந்த பகுதிகளுக்கு செல்ல வேண்டாமென அறிவுறுத்தப்படுகிறார்கள்

பலத்த காற்று வீசும்
அரபிக்கடல் பகுதிகளில் 05.09.2021 முதல் 07.09.2021 வரை கேரள மற்றும் கர்நாடக கடலோர பகுதிகள், லட்சத்தீவு பகுதிகளில் சூறாவளி காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோமீட்டர் வேகத்தில் வீசக்கூடும். மேலும் 04.09.2021 முதல் 08.09.2021 வரை தென் மேற்கு மற்றும் மத்திய மேற்கு அரபிக்கடல் பகுதிகளில் பலத்த காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோமீட்டர் வேகத்திலும் இடைஇடையே 60 கிலோமீட்டர் வேகத்திலும் வீசக்கூடும். மீனவர்கள் இந்தப் பகுதிகளுக்கு செல்ல வேண்டாமென அறிவுறுத்தப்படுகிறார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஒகேனக்கல் அருவியில் வெள்ளம்
இதனிடையே டெல்டா மாவட்டங்களில் தொடர் மழை பெய்து வருவதால், மேட்டூர் அணையிலிருந்து நீர்திறப்பு குறைக்கப்பட்டுள்ளது. காவிரி நீர்பிடிப்பு பகுதியில் பெய்து வரும் தொடர் மழையால், தமிழக எல்லையான பிலிகுண்டுலுவுக்கு நீர்வரத்து 19,000 கன அடியாக அதிகரித்துள்ளது. பிலிகுண்டுலுவுக்கு நேற்று வரை வினாடிக்கு 14,000 கன அடியாக இருந்த நீர்வரத்து, இன்று காலை நிலவரப்படி வினாடிக்கு 19,000 கன அடியாக உயர்ந்துள்ளது. காவிரி ஆற்றில் மழை நீரால் நீர்வரத்து அதிகரித்திருப்பதால், தண்ணீர் கலங்கலாக வருகிறது. இதனால் ஒகேனக்கல் மெயினருவி, சினி அருவி, ஐந்தருவிகளில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டி வருகிறது.












Click it and Unblock the Notifications