சென்னைக்கு ரெட் அலர்ட்.. இன்று இரவு முதல் நாளை வரை மக்கள் வெளியே வர வேண்டாம்: அமைச்சர் வார்னிங்
சென்னை: சென்னைக்கு ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ள நிலையில், இன்று இரவு முதல், நாளை மாலை வரை, மக்கள் அவசியம் இல்லாமல் வீட்டை விட்டு வெளியே வரவேண்டாம் என்று தமிழக வருவாய்த்துறை மற்றும் பேரிடர் மேலாண்மை துறை அமைச்சர் கேகேஎஸ்எஸ்ஆர் ராமச்சந்திரன் பொதுமக்களை கேட்டுக் கொண்டிருக்கிறார்.
வங்கக் கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு பகுதி இன்று இரவு காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெறுகிறது.
இது காரைக்கால் முதல் ஆந்திராவின் ஸ்ரீஹரிகோட்டா இடையே உள்ள கடல் பகுதியில் கடலூரை ஒட்டி கரையை கடக்கும் என்று கூறப்பட்டது. ஆனால் 10ம் தேதி புதன்கிழமை மாலை நிலவரப்படி, காற்றழுத்த தாழ்வு நிலை நகர்ந்து மகாபலிபுரம் மற்றும் ஸ்ரீஹரிகோட்டா இடையே சென்னை அருகே நாளை கரையை கடக்கும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

அமைச்சர் பேட்டி
இந்த நிலையில்தான் இன்று மாலை சென்னையில் செய்தியாளர்களை சந்தித்தார் அமைச்சர் கேகேஎஸ்எஸ்ஆர் ராமச்சந்திரன். அப்போது அவர் கூறுகையில், சென்னை மற்றும் அதனை சுற்றியுள்ள மாவட்டங்களில் இன்று இரவு முதல் நாளை மாலை வரை அதிக மழை பெய்யும் வாய்ப்பு இருக்கிறது. சென்னையில் மீட்பு பணிக்காக அனைத்து ஏற்பாடுகளும் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன .

தேவையில்லாமல் வராதீர்கள்
இன்று இரவு முதல் நாளை மாலை வரை பொதுமக்கள் அவசியம் இன்றி வீட்டை விட்டு வெளியே வரவேண்டாம். நீர்நிலைகளின் அருகே நின்று செல்பி புகைப்படம் எடுக்கவோ, ஆறு போன்றவற்றை கடக்கவோ வேண்டாம்.

ஆவணங்கள் பத்திரம்
வீட்டில், ஆதார் கார்டு, ரேஷன் அட்டை, கல்வி சான்றிதழ் போன்ற ஆவணங்களை பத்திரமாக தண்ணீர் படாத இடத்தில் வைத்துக்கொள்ள வேண்டும். நாகப்பட்டினம் மாவட்டத்தில் கனமழை பெய்துள்ளது, அங்கு மட்டுமின்றி ஒட்டுமொத்த டெல்டா மாவட்ட பகுதிகளிலும் மழை முடிந்த பிறகு பயிர் சேதம் தொடர்பாக தமிழக அரசு ஆய்வு நடவடிக்கைகளை மேற்கொண்டு உரிய இழப்பீடு தொகை வழங்க நடவடிக்கை எடுக்கும். இவ்வாறு அமைச்சர் கேகேஎஸ்எஸ்ஆர் ராமச்சந்திரன் தெரிவித்தார்.

சென்னைக்கு ரெட் அலர்ட்
காற்றழுத்த தாழ்வுப்பகுதி தென் கிழக்கே 460கி.மீ தொலைவில் தற்போது மையம் கொண்டுள்ளது. அது சென்னை அருகே கரையை கடப்பதால், சென்னைக்கு நாளை மற்றும் நாளை மறுநாள் ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளதால் தேவையற்ற பயணங்களை தவிர்த்து பாதுகாப்பாக இருக்க மக்கள் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர்.












Click it and Unblock the Notifications