“கேப்” விடவே இல்ல.. சென்னையில் விட்டு விளாசிய கனமழை! சாலைகளில் ஓடும் தண்ணீர் - டாப் லிஸ்டில் தரமணி
சென்னை: சென்னை மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் இரவு தொடங்கிய மழை இன்று காலையிலும் தொடர்ந்து வருவதால் சாலையில் தண்ணீர் வழிந்தோடி வருகிறது.
தெற்கு அந்தமான் கடல் மற்றும் அதனை ஒட்டியுள்ள தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் 27-ஆம் தேதி வாக்கில் ஒரு காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகக்கூடும் என்று அறிவித்த வானிலை ஆய்வு மையம், இது மேற்கு - வடமேற்கு திசையில் நகர்ந்து தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் 29 ஆம் தேதி வாக்கில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுபெறக்கூடும் என்று தெரிவித்தது.

குறிப்பாக கிழக்கு திசை காற்றின் வேகமாறுபாடு காரணமாக, நேற்று தமிழகத்தில் ஒரு சில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்றும், திருவள்ளூர், இராணிப்பேட்டை மற்றும் காஞ்சிபுரம் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யவாய்ப்புள்ளதாகவும் சென்னை வானிலை மையம் அறிவித்தது.
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் 24 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசான / மிதமான மழை பெய்யக்கூடும் என்றும் அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும் எனவும், நகரின் ஒருசில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்யக்கூடும் என்றும் சென்னை வானிலை மையம் தெரிவித்து இருந்தது. இந்த நிலையில் சென்னை, செங்கல்பட்டு சுற்றுவட்டார பகுதிகளில் இரவு தொடங்கி மழை தொடர்ந்து பெய்து வருகிறது.
சென்னையின் அடையாறு, கோட்டூர்புரம், ராயபுரம், கிண்டி, தரமணி, சாந்தோம், செங்குன்றம், பூந்தமல்லி, ராயபுரம், வண்ணாரப்பேட்டை, செம்பரம்பாக்கம் உள்ளிட்ட பகுதிகளில் இன்று அதிகாலை கனமழை கொட்டித் தீர்த்தது. இதன் காரணமாக பிரதான சாலைகளில் மழை நீர் வழிந்தோடியது. நேற்று காலை 8.30 மணி முதல் இன்று காலை 5.30 மணி வரை சென்னை மீனம்பாக்கத்தில் 16 மிமீ, தரமணியில் 45.2 மிமீ, பள்ளிக்கரணை 22.4 மிமீ, அண்ணா பல்கலைக்கழகம் 11.5 மிமீ, இந்துஸ்தான் பல்கலைக்கழகம் 8.5 மிமீ, மேற்கு தாம்பரம் 1.0, நந்தனம் ஒய்.எம்.சி.ஏ. 3.5 மிமீ மழை பெய்து இருக்கிறது.
இந்த நிலையில் சென்னை உள்ளிட்ட 12 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரம் மழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை மையம் தெரிவித்து இருக்கிறது. சென்னையில் பெய்து வரும் கனமழை காரணமாக இன்று பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவிக்கப்பட்டு உள்ளது. அதேபோல் செங்கல்பட்டு மாவட்டத்திலும் கனமழையால் பள்ளிகளுக்கு விடுமுறை அளித்து உள்ளார்கள்.












Click it and Unblock the Notifications