தமிழ்நாட்டில் 5 நாட்களுக்கு இடி மின்னலுடன் கனமழை - வங்கக் கடலில் பலத்த காற்று வீசும்
தென்மேற்குப் பருவக்காற்று மற்றும் வளிமண்டல மேலடுக்குச் சுழற்சி காரணமாக தமிழ்நாட்டில் 5 நாட்களுக்கு இடி மின்னலுடன் கூடிய கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
சென்னை: தமிழ்நாட்டில் தென்மேற்குப்பருவமழை பல மாவட்டங்களில் தீவிரமடைந்துள்ள நிலையில் இன்று முதல் அக்டோபர் 3 ஆம் தேதி வரைக்கும் இடி மின்னலுடன் கூடிய கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை மையம் அறிவித்துள்ளது.
ஜூன் முதல் செப்டம்பர் வரை தென்மேற்குப் பருவமழைக்காலமாகும். கேரளாவில் ஜூன் மாதம் தென்மேற்குப் பருவமழை தொடங்கியது. தமிழ்நாட்டில் தென் மாவட்டங்களிலும் மேற்குத் தொடர்ச்சி மலையோர மாவட்டங்களிலும் பருவமழை கணிசமான அளவு பெய்துள்ளது.
பருவமழை காரணமாக அணைகளில் நீர் மட்டம் உயர்ந்துள்ளது. ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.
இந்த நிலையில் பருவமழை மீண்டும் தீவிரமடைந்துள்ளது. தென்மேற்குப் பருவக்காற்று மற்றும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக இன்று தமிழ்நாடு, புதுச்சேரி, காரைக்காலில் ஒருசில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக வானிலை மையம் அறிவித்துள்ளது.

வானிலை மைய ஆய்வு இயக்குநர் புவியரசன் வெளியிட்டுள்ள அறிவிப்பில், இன்று சேலம், தருமபுரி, நாமக்கல் மாவட்டங்களில் இடி மின்னலுடன் கூடிய பலத்த மழை பெய்ய வாய்ப்பு உள்ளது. நாளைய தினம் நீலகிரி, கோவை, சேலம், சேலம், தருமபுரி, நாமக்கல், கிருஷ்ணகிரி, திருப்பத்தூர், திருவண்ணாமலை, திண்டுக்கல், திருச்சி, புதுக்கோட்டை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது.
தமிழ்நாடு புதுச்சேரி காரைக்காலில் அநேக இடங்களில் இடி மின்னலுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்பு உள்ளது. அக்டோபர் 1ஆம் தேதியன்று நீலகிரி, கோவை, திருப்பூர், திண்டுக்கல்,தேனி,விருதுநகர், மதுரை, சேலம், தருமபுரி, நாமக்கல், கிருஷ்ணகிரி, திருப்பத்தூர், திருவண்ணாமலை, கன்னியாகுமரி, தென்காசி மாவட்டங்களில் இடி மின்னலுடன் கூடிய கனமழையும் பெய்ய வாய்ப்பு உள்ளது.
அக்டோபர் 2ஆம் தேதியன்று மதுரை, விருதுநகர், திண்டுக்கல், கன்னியாகுமரி மாவட்டங்களில் இடி மின்னலுடன் கூடிய கனமழையும் மிக கனமழையும் பெய்ய வாய்ப்புள்ளது. நீலகிரி, கோவை, ஈரோடு, திருப்பூர், சேலம், நாமக்கல், திருப்பத்தூர், திருவண்ணாமலையில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.
அக்டோபர் 3ஆம் தேதியன்று தமிழ்நாட்டில் நீலகிரி, கோவை, திருப்பூர், திண்டுக்கல், ஈரோடு, கன்னியாகுமரி மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. சேலம், நாமக்கல், மதுரை,விருதுநகர், தென்காசி, ராமநாதபுரம், தூத்துக்குடி மாவட்டங்களில் இடிமின்னலுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்பு உள்ளது.
சென்னையை பொறுத்தவரை அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 34 மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 26 டிகிரி செல்சியஸை ஒட்டி இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. நீலகிரி மாவட்டத்தில் கடந்த 24 மணி நேரத்தில் நீலகிரி மாவட்டத்தில் அதிகபட்சமாக 5 செமீ மழை பதிவாகியுள்ளது. கன்னியாகுமரி, சேலம், தேனியிலும் 1 செமீ மழை பதிவாகியுள்ளது.
தென்மேற்கு வங்கக் கடல் மற்றும் தெற்கு அந்தமான் கடலோர பகுதிகளில் மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடும் என்பதால் மீனவர்கள் கடலோர பகுதிகளுக்குச் செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications