மேகங்கள் திரண்டு.. வானம் கறுத்து.. சென்னை நகரின் பல பகுதிகளிலும் குளிர் காற்றுடன் கொட்டும் மழை!
சென்னை: சென்னையில் பல்வேறு பகுதிகளில் பரவலாக மழை பெய்து வருகிறது. அண்ணா நகர், கோயம்பேடு, அம்பத்தூர், முகப்பேர் உள்ளிட்ட பகுதிகளில் குளிர்ந்த காற்று வீசியதோடு, கனமழை பெய்து வருகிறது. நகர் முழுக்கவே மேகங்கள் திரண்டு வானம் கறுத்து, பலத்த காற்று வீசி வருகிறது.
தலைநகர் சென்னை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் மழை பெய்து வருகிறது.
முன்னதாக சென்னை வானிலை மையம் வெளியிட்ட அறிவிப்பில், நேற்று காலை மேற்கு வங்காள - வங்கதேச கடலோரப்பகுதிகளில் நிலவிய ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம், மேற்கு வங்காளம் - வங்கதேசம் கடற்கரை பகுதிகளில், சாகர் தீவுகளுக்கும், கேபுபாராவிற்கும் (வங்கதேசம்) இடையே நேற்று மதியம் கரையை கடந்தது.

இதன் காரணமாக இன்று தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். ஓரிரு இடங்களில் தரைக்காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும். கோயம்புத்தூர், திருநெல்வேலி மாவட்டங்களின் மலைப்பகுதிகள் மற்றும் நீலகிரி மாவட்டத்தில் ஒருசில இடங்களிலும், தேனி, தென்காசி மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும் கன முதல் மிக கனமழையும், திருப்பூர் மற்றும் திண்டுக்கல் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழையும் பெய்ய வாய்ப்புள்ளது.
அதேபோல் நாளை தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும் புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். கோயம்புத்தூர் மற்றும் திருநெல்வேலி மாவட்டத்தின் மலைப்பகுதிகள், நீலகிரி, தேனி, தென்காசி, மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இன்று வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. வெப்பநிலை 35-36° செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 28-29° செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும் என சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.
தமிழக கடலோரப் பகுதிகள், மன்னார் வளைகுடா மற்றும் குமரிக்கடல் பகுதிகளில், இன்றும் நாளையும் மணிக்கு, 40 முதல் 50 கி.மீ வேகத்திலும், இடையிடையே மணிக்கு, 60 கி.மீ., வேகத்திலும் சூறாவளி காற்று வீசக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது.
இந்நிலையில் சென்னையின் பல்வேறு பகுதிகளில் பரவலாக மழை பெய்து வருகிறது. கிண்டி, மீனம்பாக்கம், நுங்கம்பாக்கம், கோடம்பாக்கம், அடையாறு, மெரினா, பட்டினம்பாக்கம், திருவல்லிக்கேணி, ராயப்பேட்டை, அண்ணா சாலை, எழும்பூர், அண்ணா நகர், கோயம்பேடு, அம்பத்தூர், முகப்பேர் உள்ளிட்ட பகுதிகளில் பரவலாக மழை பெய்து வருகிறது.
சென்னை நகர் முழுக்கவே வானிலை மிகவும் ரம்மியமாக காட்சி அளிக்கிறது. குளிர்ந்த காற்று வீசி வருகிறது. மேகங்கள் திரண்டு, வானம் கறுத்து, மழைக்குறி காணப்படுகிறது. வானம் கருத்து பலத்த காற்று வீசி வருவதால், இன்று இரவுக்குள் பெரும்பாலான பகுதிகளில் மழை பெய்யக்கூடும் எனத் தெரிகிறது.
அடுத்த 3 மணி நேரத்தில் சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, ராணிப்பேட்டை, திருவள்ளூர், கோவை, நெல்லை, தென்காசி, தேனி, கன்னியாகுமரி உள்ளிட்ட மாவட்டங்களில் மழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications