7 மாவட்டங்களில் ஆகஸ்ட் 13 வரை கனமழை இருக்கு - உங்க ஊர் நிலவரம் செக் பண்ணுங்க
வளிமண்டல மேலடுக்கு சுழற்சி மற்றும் வெப்பச்சலனம் காரணமாக தமிழ்நாட்டில் ஆகஸ்ட் 13ஆம் தேதி வரைக்கும் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை மையம் அறிவித்துள்ளது.
சென்னை: தமிழ்நாட்டில் இன்று முதல் ஆகஸ்ட் 13ஆம் தேதி வரை நீலகிரி, கோவை மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை மையம் அறிவித்துள்ளது. அரபிக்கடல் பகுதிகளில் பலத்த காற்று வீசக்கூடும் என்பதால் மீனவர்கள் கடலுக்குள் செல்ல வேண்டாம் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
தென்மேற்குப் பருவமழை தமிழ்நாட்டில் பல மாவட்டங்களில் தீவிரமடைந்துள்ளது. பகல் நேரங்களில் வெயில் சுட்டெரித்தாலும் மாலை நேரங்களில் கருமேகங்கள் சூழ்ந்து பலத்த மழை கொட்டித்தீர்க்கிறது. இடியும் மின்னலுமாய் பெய்த கனமழையால் மதுரை மாவட்டத்தில் பல ஊர்களில் வெள்ளம் கரைபுரண்டு ஓடியது.
கடந்த 24 மணிநேரத்தில் சோழவந்தானில் 10 செமீ மழை பதிவாகியுள்ளதாக வானிலை மையம் அறிவித்துள்ளது.
கரூர், கோவை, நீலகிரியில் 7 செமீ மழையும் திருச்சி, ஈரோடு, மதுரையில் 5 செமீ பதிவாகியுள்ளது. குளித்தலை, சேலம், கன்னியாகுமரி மாவட்டத்திலும் 2செமீ அளவிற்கு மழை பதிவாகியுள்ளது. இந்த நிலையில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி மற்றும் வெப்பச்சலனம் காரணமாகவும் தமிழ்நாட்டில் 5 நாட்களுக்கு மழை நீடிக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

சென்னை வானிலை மைய இயக்குநர் புவியரசன் வெளியிட்டுள்ள அறிக்கையில், இன்றைய தினம் நீலகிரி கோவை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது. சேலம், நாமக்கல், கள்ளக்குறிச்சி, திருவண்ணாமலை திருவள்ளூர் மாவட்டங்களில் இடி மின்னலுடன் கூடிய கனமழையும் பெய்ய வாய்ப்புள்ளது.
ஏனைய மேற்குத் தொடர்ச்சி மலையை ஒட்டிய மாவட்டங்கள், உள் மாவட்டங்கள், கடலோர மாவட்டங்களிலும் புதுச்சேரி காரைக்காலில் இடி,மின்னலுடன் கூடிய கனமழையும் பெய்ய வாய்ப்புள்ளது. நாளைய தினம் நீலகிரி, கோவை, தேனி மாவட்டங்களில் இடியுடன் கூடிய கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது.
அரியலூர், பெரம்பலூர், கடலூர், விழுப்புரம், நாகப்பட்டினம், மயிலாடுதுறை மாவட்டங்களில் இடி மின்னலுடன் கூடிய கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது. ஏனைய மேற்குத் தொடர்ச்சி மலையை ஒட்டிய மாவட்டங்கள் உள் மாவட்டங்களிலும் காரைக்கால், புதுச்சேரியில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது.
ஆகஸ்ட் 11,12,13ஆம் தேதிகளில் நீலகிரி, கோவை, தேனி மாவட்டங்களிலும் சேலம், நாமக்கல், கள்ளக்குறிச்சி, திருவண்ணாமலை, கடலூர், நாகை, மயிலாடுதுறை, திருவாரூர், தஞ்சாவூர் மற்றும் புதுச்சேரியில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது.
சென்னையைப் பொறுத்தவரை அடுத்த 24 மணி நேரத்தில் இடி மின்னலுடன் கூடிய லேசான மழை பெய்ய வாய்ப்பு உள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 38 டிகிரி செல்சியஸ் ஆகவும் குறைந்த பட்ச வெப்பநிலை 28 டிகிரி செல்சியஸ் ஆகவும் இருக்கும்.
வங்கக் கடல் பகுதியில் இன்றும் நாளையும் மணிக்கு 30 முதல் 40 கிலோமீட்டர் வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடும். இதே போல தென்கிழக்கு அரபிக்கடல், கேரளா கடலோர பகுதிகளிலும் வரும் 13ஆம் தேதி வரைக்கும் மணிக்கு 50 முதல் 70 கிலோமீட்டர் வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடும் எனவே மீனவர்கள் இந்த பகுதிகளுக்குச் செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்படுகின்றனர்.
உத்தரபிரதேசத்தில் வெள்ளம்
வட இந்திய மாநிலங்களில் வெள்ளம் பெருக்கெடுத்துள்ளது. உத்தரபிரதேச மாநிலத்தில் கடந்த 2 நாட்களாக பெய்து வரும் மழையால் கங்கை ஆற்றில் அபாய கட்டத்தைத் தாண்டி பெருவெள்ளம் ஏற்பட்டுள்ளது. அங்குள்ள 21 மாவட்டங்களில் வெள்ள நீர் தேங்கியுள்ளதால் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. வெள்ளம் பாதித்த பகுதிகளில் மீட்புப்பணிகளை மேற்கொள்ள மாவட்ட நிர்வாகங்களுக்கு முதல்வர் யோகி ஆதித்யாநாத் அறிவுறுத்தியுள்ளார்.












Click it and Unblock the Notifications