"பெருங்களத்தூர்" தாண்டும் முன்பு தீபாவளி வந்திரும்? ஊருக்கு மொத்தமாக கிளம்பிய மக்கள்! ட்ராபிக் ஜாம்
சென்னை: தீபாவளி பண்டிகையையொட்டி மக்கள் சொந்த ஊருக்கு பயணம் செய்ய தொடங்கிய நிலையில், தாம்பரம் மற்றும் பெருங்குளத்தூர் பகுதிகளில் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது.
தீபாவளி பண்டிகை வரும் 24ம் தேதி கொண்டாடப்பட உள்ளது. இதனால் அண்மைக் காலமாகவே புத்தாடைகள் வாங்குவது, பலகாரங்கள் செய்வதற்கான பொருட்கள் வாங்குவது என கடைவீதிகளில் பொதுமக்கள் குவிய தொடங்கினர்.
அதேபோல் குடும்பத்துடன் புத்தாடைகள் வாங்க பொதுமக்கள் குவிந்ததால், வணிக வளாகங்கள் மக்கள் கடலில் நிரம்பி காணப்பட்டு வருகிறது. சென்னையின் தியாகராய நகர், பாரிஸ், திருவல்லிக்கேணி உள்ளிட்ட பகுதிகளில் தீபாவளி விற்பனை மும்முரமாக நடந்து வருகிறது. இதனால் சென்னையின் முக்கிய சாலைகளில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது.

3 நாட்கள் விடுமுறை
இதுஒரு பக்கம் இருக்க வெளியூர் மற்றும் வெளிமாநிலங்களில் உள்ள பெரும்பாலான மக்கள் தீபாவளி பண்டிகையை கொண்டாடுவதற்காக சொந்த ஊர்களுக்கு பயணம் செய்ய திட்டமிட்டுள்ளனர். குறிப்பாக தீபாவளிக்கு முந்தைய நாட்களான சனி, ஞாயிறு ஆகிய நாட்கள் விடுமுறையாகும். திங்கட்கிழமை தீபாவளி என்பதால், தொடர்ந்து 3 நாட்கள் விடுமுறை நாட்களாக அமைந்துள்ளது.

போக்குவரத்து நெரிசல்
இதனால் தீபாவளி பண்டிகையை சொந்த ஊரில் கொண்டாட ஏராளமான மக்கள் திட்டமிட்டு இன்றே பயணத்தை தொடங்கியுள்ளனர். அதன்படி இன்று மாலை முதலே சென்னையில் இருந்து தங்களது சொந்த ஊர்களுக்கு மக்கள் பயணம் செய்து வருகின்றனர். பொதுமக்கள் பலரும் ஒரே நேரத்தில் கார், பைக் என தங்களது வாகனங்களில் புறப்பட்டுள்ளதால் டிராபிக் ஜாம் ஏற்பட்டுள்ளது.

பெருங்களத்தூரில் டிராபிக் ஜாம்
குறிப்பாக தாம்பரம் மற்றும் பெருங்குளத்தூர் சாலைகளில் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது. கடுமையான போக்குவரத்து நெரிசல் காரணமாக கார், பைக், பேருந்துகள் மற்றும் இதர வாகனங்கள் நகர முடியாமல் அதே இடத்தில் சிக்கி தவித்து வருகின்றனர். ஆயிரக்கணக்கான வாகனங்கள் அணிவகுத்து நிற்பதால், ஏராளமான மக்கள் தவித்து வருகின்றனர்.

செங்கல்பட்டு வரை நீளும் டிராபிக் ஜாம்
இதேபோல் செங்கல்பட்டு பகுதியிலும் கடுமையான டிராபிக் ஜாம் ஏற்பட்டுள்ளதாக தெரிய வந்துள்ளது. இதற்கு ஒரே நேரத்தில் மக்கள் பயணிக்க தொடங்கியதும், பல்வேறு பகுதிகளில் மழை பெய்வதும் காரணமாக கூறப்பட்டுள்ளது. தாம்பரத்தில் தொடங்கிய போக்குவரத்து நெரிசல், பெருங்களத்தூர், மறைமலைநகர் என செங்கல்பட்டு வரை நீண்டுள்ளதாக தெரிகிறது.












Click it and Unblock the Notifications