பொன்முடி ரெய்டில் மனித உரிமை மீறல்..இரவில் நடந்தது முறைகேடான விசாரணை!’’ஹென்றி டிபேன் அதிரடி
சென்னை: அமைச்சர் பொன்முடியை விடிய விடிய வைத்து விசாரணை செய்தது அப்பட்டமான மனித உரிமை மீறல் என்கிறார் மனித உரிமை ஆர்வலர் ஹென்றி டிபேன்.
ஒரு மூத்த குடிமகனை இரவில் வைத்து விசாரிப்பது சட்டத்திற்குப் புறம்பானது என்றும் அவர் வாதிடுகிறார். எதிர்க்கட்சிகள் அனைவரும் ED ரெய்டு என்பதே சட்டத்திற்கு எதிராக நடத்தப்பட்டு வருவதாகக் குற்றச்சாட்டை முன்வைத்து வரும் வேளையில், இவர் மனித உரிமையைக் காப்பாற்றப்படவில்லை எனக் கூறி இருப்பது சர்ச்சையைக் கிளப்பி உள்ளது.

அமைச்சர் பொன்முடி வழக்கில் நடந்திருப்பது என்ன? அவர் சட்டப்படிதான் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளாரா? என்ற பல்வேறு கேள்விகளுக்கு விடைகாண விரும்பினோம். அதன் பொருட்டு தனது கருத்துகளை முன்வைத்தார் ஹென்றி டிபேன்.
"முதலில் 2 விஷயங்களை நான் சொல்ல விரும்புகிறேன். ஒன்று, பொன்முடிக்கு இப்போது 72 வயது. அவரது மகனுக்கு 49 வயது. அவர் ஒரு மூத்த குடிமகன் என்பதைப் பதிவு செய்ய விரும்புகிறேன்.

விழுப்புரத்தில் அவர் மீதான ஒரு வழக்கு நடந்துவருகின்ற வேளையில், அதை விழுப்புரத்தில் நடத்தக் கூடாது எனக் கூறி வேலூருக்கு மாற்றப்பட்டு, ஜூன் மாதம் இறுதியில் அவர் விடுதலை செய்யப்படுகிறார். அதாவது Prevention of Money Laundering Act வழக்கில் அவர் விடுதலை பெறுகிறார்.
அதைப்போன்றே சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கான சென்னையில் செயல்படும் விசேஷ நீதிமன்றத்தில் ஒரு வழக்கும் இவருக்கு எதிராக நடந்துவருகிறது.

அதிலும் பொன்முடி விடுவிக்கப்படுகிறார். அதற்கு எதிராக 2017இல் உயர்நீதி மன்றத்திற்குச் சென்று அனுமதி பெற்று மறுபடியும் விசாரணை நடத்தப்படுகிறது. அதிலிருந்தும் ஜூலை மாதம் முதல் வாரத்தில் அவர் விடுதலை செய்யப்படுகிறார்.
இதை எதற்குச் சொல்கிறேன் என்றால், பல ஆண்டுகளாக நடைபெற்றுவந்த இரண்டு வழக்குகளிலிருந்தும் அவர் விடுதலை செய்யப்பட்டிருக்கிறார் என்பதைக் குறிப்பிடுவதற்காகத்தான். இந்தப் பின்னணியில்தான் Prevention of Money Laundering Act சட்டத்தைப் பயன்படுத்தி ED அதிகாரிகள் உள்ளே வருகிறார்கள்.

அவர்களுக்குச் சட்டம் சார்ந்த நடவடிக்கைகளில் ஈடுபடுவதற்கு உரிமை உண்டு. அதைப்போன்றே சோதனை நடத்தவும் உரிமை உண்டு. PMLA சட்டம் பிரிவு 4இன் கீழ், அதிகபட்சமாக ஒருவரை 3 ஆண்டுகள் முதல் 7 ஆண்டுகள் வரை தண்டிக்க முடியும்.
ஆக, எந்த நிலையில் அவர்களைக் கைது செய்தாலும், 41ஏ இன் கீழ், நோட்டீஸ் கொடுத்து அதன்பின்பாகத்தான் நடவடிக்கைகளில் இறங்க முடியும். இது கைது சார்ந்த நடைமுறைகள். அதற்கு மேல் இதை விரிவாக இந்தநேரத்தில் விவாதிக்க அவசியம் இல்லை. ஏனெனில் பொன்முடி இதுவரை கைது செய்யப்படவில்லை.

பொன்முடியின் வீட்டை ஐடி டிபார்ட்மெண்ட் சோதனை செய்கிறது. செக்ஷன் 133 ஏ இன் படி வருமானவரித்துறை அதிகாரிகள் எவ்வாறு சோதனை செய்ய வேண்டும்? அதற்கான விதிமுறைகள் எல்லாம் வலுவாக வகுக்கப்பட்டுள்ளது. அந்த விதிப்படி சோதனை நடத்தப்பட்டால், அதிகாரிகள் காலை முதல் மாலை வரை இருப்பார்கள். அதன் பிறகு இரவில் விசாரணை தொடர்ந்ததாகச் சரித்திரம் கிடையாது. இதுவரை இந்த வழக்கமே கிடையாது.
ஒருவேளை, நீதிமன்றக் கட்டுப்பாட்டுக்குள் எடுத்து விசாரிக்கிறீர்கள் என்றால் கூட ஒருவரை இரவில் விசாரிக்க முடியாது. நேற்று பொன்முடிக்குச் சம்மன் வழங்கப்பட்டுள்ளது. இரவு 8:45க்கு மேல் அவரை அதிகாரிகள் அவர்களின் அலுவலகத்திற்கு அழைத்துச் சென்றுள்ளனர்.
விடியற்காலை 4 மணி வரை வைத்து இரவு முழுவதும் விசாரித்துள்ளனர். இது ஒரு மனித உரிமை மீறல். அதை மிகக் காட்டமாக நான் பதிவு செய்கிறேன். இது ஒரு முறைகேடான விசாரணை என்பதையும் குறிப்பிட்டுச் சொல்ல விரும்புகிறேன்.
பரம்வீர் சிங் வழக்கில், உச்சநீதிமன்றம் 2.12.2020 அன்று அனைத்து காவல்நிலையங்களிலும் சிசிடிவி கேமிரா வைக்க வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளது. அது மட்டும் போதாது சிபிஐ, ED, என்.ஐ.ஏ. என அனைத்து விசாரணை அலுவலகங்களிலும் சிசிடிவி கேமிரா இருக்கவேண்டும் எனக் கூறியுள்ளது.
அப்படி என்றால், பொன்முடி இரவில் வைத்து விசாரிக்கப்பட்டுள்ளாரே அதற்கான சிசிடிவி பதிவுகளை வெளியிட அதிகாரிகள் தயாரா? அப்படி வெளியிட்டால், தேசிய மனித உரிமை ஆணையம் உங்களைக் கேள்வி கேட்கும். மாநில மனித உரிமை ஆணையம் உங்களைக் கேள்வி கேட்கும்.
ஒருவேளை தேவைப்பட்டால், பொன்முடி தரப்பில் உயர்நீதிமன்றத்தில் இதை வைத்து வழக்கு தொடரப்படும் என்பதையும் குறிப்பிட விரும்புகிறேன். இது பொன்முடிக்காகச் சொல்லவில்லை. இரவில் யாரை வைத்து விசாரித்தாலும் அது மனித உரிமை மீறல்தான்.
நாட்டில் ஒரு அமைச்சரையே இரவில் அழைத்துப்போய் இந்தப் பாடுபடுத்தினால், இந்த நாட்டில் உள்ள சாதாரண மக்களின் நிலை என்ன ஆகும்?" என்று கொதித்துப் போய் கேள்வி எழுப்புகிறார்












Click it and Unblock the Notifications