அரசு எழுதி கொடுத்ததை வாசிக்காமல் தவிர்த்த ஆளுநர் ரவி.. என்னென்ன வார்த்தைகள் தெரியுமா? லிஸ்ட்
சென்னை: தமிழ்நாடு அரசு எழுதி கொடுத்து ஆளுநர் ஆர்.என்.ரவி சில வார்த்தைகளை புறத்கணித்துள்ளார். அவை என்னென்ன வார்த்தைகள் என்பதை பார்ப்போம்.
தமிழ்நாடு சட்டசபை கூட்டத் தொடர் இன்று காலை 10 மணிக்கு ஆளுநர் உரையுடன் தொடங்கியது. இந்த கூட்டத் தொடரில் ஆளுநர் ஆர்.என்.ரவி உரையாற்றும் போது சில வார்த்தைகளை படிக்காமல் தவிர்த்துவிட்டார் என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
அவர் படிக்காமல் தவிர்த்த வார்த்தைகளை ஆளுநரின் உரையை சபாநாயகர் மொழிபெயர்த்த போது அவர் வாசித்தார். அதில் திராவிட மாடல் என்ற வார்த்தையை ஆளுநர் படிக்கவில்லை. இந்த வார்த்தை மொத்தம் இரு இடங்களில் வருகிறது. மேலும் தமிழ்நாடு என்ற வார்த்தையை ஆரம்பத்தில் ஒரு சில இடங்களில் கூறியிருந்த ஆளுநர் பின்னர் வரும் தனது உரைகளில் This government என கூறியிருந்தார்.

அமைதிப் பூங்கா
மேலும் அமைதிப் பூங்காவாக திகழ்கிறது என்ற வார்த்தையையும் அவர் தவிர்த்துவிட்டார். அது போல் அண்ணா, பெரியார், கலைஞர், அம்பேத்கர், காமராஜர், சமூகநீதி, சமத்துவம், பெண்ணுரிமை, பல்லுயிர் ஓம்புதல், மதநல்லிணக்கம் ஆகிய வார்த்தைகள் அடங்கிய 65 ஆவது பத்தியை படிக்காமல் ஆளுநர் தவிர்த்துள்ளார்.

சமூகநீதி
அந்த பத்தியில் இருந்தவை இதோ: "சமூகநீதி, சுயமரியாதை, அனைவரையும் உள்ளடக்கிய வளர்ச்சி, சமத்துவம் , பெண்ணுரிமை, மதநல்லிணக்கம், பல்லுயிர் ஓம்புதல் ஆகிய கொள்கைகள் இவ்வரசின் அடித்தளமாக அமைந்துள்ளன. தந்தை பெரியார் அண்ணல் அம்பேத்கர், பெருந்தலைவர் காமராசர், பேரறிஞர் அண்ணா, முத்தமிழறிஞர் கலைஞர் போன்ற மாபெரும் தலைவர்களின் கொள்கைகளையும் கோட்பாடுகளையும் பின்பற்றி பார்போற்றும் திராவிட மாடல் ஆட்சியை இந்த அரசு வழங்கி வருகிறது" என்ற பத்தி இடம்பெற்றுள்ளது.

64 ஆவது பாயிண்ட்
அது போல் 64 ஆவது பாயிண்டில் "சட்டம் ஒழுங்கை சிறப்பாக நிலைநாட்டுவதால் தமிழ்நாடு தொடர்ந்து அமைதிப் பூங்காவாகத் திகழ்கிறது. இதனால் பன்னாட்டு முதலீடுகளை ஈர்த்து அனைத்துத் துறைகளிலும் முதன்மை மாநிலமாக தமிழ்நாடு திகழ்கிறது என்ற பத்தியையும் ஆளுநர் படிக்கவில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

ஆளுநர் உரை
பொதுவாக ஆளுநர் உரை என்பது தமிழக அரசு தயாரித்து கொடுக்கும் உரையாகும். இதை அப்படியே படிக்க வேண்டும் என்பதுதான் மரபு. அது போல் நாடாளுமன்றக் கூட்டத் தொடரின் போது இரு அவைகளிலும் குடியரசுத் தலைவர் உரையாற்றுவார். இந்த உரையை மத்திய அரசு தயாரித்து கொடுக்கும். இவ்வாறு குடியரசுத் தலைவர், ஆளுநர் படிக்கும் உரைகளில் கூடுதலாக சில வார்த்தைகளை படிக்கும் போது சேர்த்துக் கொள்வது வழக்கம். ஆனால் தமிழ்நாடு ஆளுநர் ரவி பல பத்திகளை தவிர்த்துள்ளதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.












Click it and Unblock the Notifications