விஜய் ஒருபக்கம்.. விஜயகாந்தின் முதல் அரசியல் மாநாடு மதுரையில் எப்படி நடந்தது தெரியுமா?
சென்னை: நடிகர் விஜய் தனது தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநாட்டை அறிவித்துள்ள நிலையில் அவரது மூத்த முன்னோடியான விஜயகாந்தின் முதல் மாநாடு எப்படி நடந்தது என்பது தெரியுமா என்ற சுவாரசிய விஷயங்களை ஒரு ரவுண்டு பார்க்கலாம்.
மறைந்த விஜயகாந்த், கடந்த 2005 ஆம் ஆண்டு தேமுதிக என்ற அரசியல் கட்சியை தொடங்கினார். இதைத் தொடர்ந்து அந்த கட்சியின் முதல் மாநாட்டில் கட்சியின் பெயரை அதிகாரப்பூர்வமாக வெளியிட்டிருந்தார். மதுரையில் 2005 ஆம் ஆண்டு செப்டம்பர் 14 ஆம் தேதி விஜயகாந்த் நடத்திய முதல் மாநாட்டில் தனது கட்சிக்கு தேசிய முற்போக்கு திராவிட கழகம் என பெயரிட்டார்.

மறைந்த முன்னாள் முதல்வர் எம்ஜிஆர் 1970, 1980 களில் தனது தேர்தல் பிரச்சாரத்திற்கு பயன்படுத்திய நீல நிற வேனை விஜயகாந்திற்கு எம்ஜிஆர் எப்போதோ பரிசளித்திருந்தார். அந்த வேனில் விஜயகாந்த் மாநாடு நடைபெற்ற மதுரை காந்தி காமராஜர் அரங்கத்திற்கு வந்தார். அலைகடலென திரண்டிருந்த மக்கள் கூட்டத்தில் நீல நிற வேனில் நீந்தியபடியே வந்தார் விஜயகாந்த்.
அவர் வந்ததும் கருப்பு எம்ஜிஆர் என கோஷம் முழங்கியது. விஜயகாந்த் வந்த வேனின் முன் பக்கம் மறைந்த எம்ஜிஆரின் புகைப்படம் வைக்கப்பட்டிருந்தது. வேனின் பின்புறத்தில் எம்ஜிஆர், தனது மனைவி ஜானகியுடன் இருக்கும் படமும் இருந்தது. அந்த படத்தில் எம்ஜிஆரின் மார்பு பகுதியில் விஜயகாந்தின் புகைப்படம் இருந்தது.
விஜயகாந்த் விழா மேடைக்கு வந்ததும் அங்கிருந்தவர்களை பார்த்து இரு கைகளை கூப்பி வணங்கினார். புறாக்கள் பறக்கவிடப்பட்டன. ஒரு பக்கம் தமிழகத்தின் அனைத்து முதல்வர்களின் படங்களும் இடம்பெற்றிருந்தன. அதில் காமராஜர், அண்ணா முதல் கருணாநிதி, ஜெயலலிதா வரை, இடம் பெற்றிருந்தது. இடைக்கால முதல்வராக இருந்த ஓபிஎஸ்ஸின் படமும் அங்கு இருந்தது.
எம்ஜிஆர் மற்றும் விஜயகாந்தின் சமூக சேவைகள் தொடர்பான புகைப்படங்களும் ஆங்காங்கே வைக்கப்பட்டிருந்தன. மகாத்மா காந்தி, காமராஜரின் படங்களும் இருந்தன. கடைசியாக காலை 9.30 மணிக்கு தேசிய முற்போக்கு திராவிடக் கழகம் என தனது கட்சி பெயரை விஜயகாந்த் அறிவித்தார்.
விஜயகாந்தின் முதல் மாநாட்டிற்கு 2 லட்சம் பேர் வருகை தந்தனர். 76 ஏக்கர் கிரவுண்டும் மக்கள் தலைகளால் நிரம்பி இருந்தது. ஏராளமான வாகனங்களில் மக்கள் வந்து கொண்டிருந்த நிலையில் போக்குவரத்து பாதிப்பால் அவர்களால் விழா நடந்த இடத்தை குறித்த நேரத்திற்கு வர முடியவில்லை. இப்படியெல்லாம் விஜயகாந்தின் முதல் மாநாடு நடந்தது.
இந்த மாநாட்டில் அவர் பேசுகையில், மதுரையை ஆளும் சிவபெருமான், மீனாட்சி, திருப்பரங்குன்றம் முருகன் மற்றும் எனது குலதெய்வத்தின் அருளாலும் உங்களின் ஆசியினாலும் கட்சியின் பெயரை தேசிய முற்போக்கு திராவிட கழகம் என வைத்துள்ளேன் என கூறி அந்த பெயருக்கான விளக்கத்தையும் அளித்தார்.
தேமுதிகவின் கொள்கைகளானவை அன்னை தமிழ்மொழி காப்போம் அனைத்து மொழியையும் கற்போம். அரசியலில் தூய்மை, நாணயம், மனிதநேயம் ஆகியவற்றை கடைப்பிடித்து வறுமைக் கோட்டிற்கு கீழ் மக்களே இல்லை என்ற நிலையை உருவாக்கிட பாடுபடுவதே எங்களின் லட்சியம்.
தமிழகத்தின் முன்னேற்றத்தையும், வளர்ச்சியையும் தடுத்து நிறுத்துகின்ற லஞ்ச லாவண்யத்தையும், ஊழலையும் அரசியலில் புரையோடிவிட்ட பித்தலாட்டம், அயோக்கியத்தனம், சுயநலம் ஆகியவற்றையும் முதலில் தடுத்து நிறுத்தியும், எதிர்காலத்தில் அவற்றை அறவே ஒழிப்பது.
இந்தியாவிலேயே தமிழகத்தை வேலைவாய்ப்புள்ள முதல் மாநிலமாக மாற்றுவது. ஆண்களுக்கு இணையாக பெண்களுக்கும் மதிப்பும், மரியாதையும் கொடுப்பதற்கு பாடுபடுவோம். அன்பு, அறம், ஆற்றல், என்பதை எங்கள் லட்சியக் கொள்கை முழக்கமாக எடுத்துக் கொண்டு தமிழகத்தை ஒளிமயமானதாக்குவோம். இவ்வாறு தங்கள் கட்சியின் கொள்கைகள் வெளியாகின.
அது போல் விஜய் கட்சியின் கொள்கைகள், கட்சியின் கொடியின் அர்த்தம் உள்ளிட்டவை குறித்து தவெக மாநாட்டில் விஜய் அறிவிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது. விஜயகாந்தின் மதுரை மாநாடு மற்ற கட்சியினரை உற்று நோக்கச் செய்தது. அது போல் செந்தூர பாண்டியின் தம்பியின் மாநாடு அனைவராலும் உற்று நோக்கப்படுமா என்பதை பொறுத்திருந்தான் பார்க்க வேண்டும்.












Click it and Unblock the Notifications