லோக் சபா தேர்தலில் மீண்டும் தமிழிசை போட்டி! எந்த தொகுதியில் வேட்பாளராகிறார்? இது லிஸ்டுலயே இல்லையே
சென்னை: மக்களவைத் தேர்தலில் போட்டியிடுவதற்காக ஆளுநர் பதவியை இன்று ராஜினாமா செய்த தமிழிசை சவுந்திரராஜன் எந்த தொகுதியில் போட்டியிடுகிறார் தெரியுமா?
தெலுங்கானா ஆளுநராகவும் புதுவை துணை நிலை ஆளுநராகவும் இருந்த தமிழிசை சவுந்திரராஜன் இன்றைய தினம் தனது ஆளுநர் பதவியை ராஜினாமா செய்துள்ளார். அவர் மக்களவை தேர்தலில் போட்டியிட விருப்பம் தெரிவித்திருந்தார்.

இதையடுத்து பிரதமர் மோடியும், தமிழிசை மக்களவை தேர்தலில் போட்டியிட வேண்டும் என்பதற்காக அவரை ஆளுநர் பதவியிலிருந்து ராஜினாமா செய்யுமாறு கூறினார். அதன்படி தமிழிசையும் தனது பதவியை ராஜினாமா செய்து விட்டார்.
மக்களவைத் தேர்தல்: தமிழகத்தில் மக்களவைத் தேர்தல் வரும் ஏப்ரல் 19ஆம் தேதி நடைபெறுகிறது. இந்த தேர்தலில் தமிழகத்தில் இருந்து கணிசமான எம்பிக்களை நாடாளுமன்றத்திற்கு அனுப்ப பாஜக மாநில தலைமை முடிவு செய்துள்ளது. இதன்படி புதிய நீதி கட்சி, ஜான் பாண்டியனின் தமிழக மக்கள் முன்னேற்றக் கழகம் , ஜிகே வாசனின் தமிழ் மாநில காங்கிரஸ், டிடிவி தினகரனின் அமமுக, ஓபிஎஸ் அணி உள்ளிட்டவை கூட்டணிகளுடன் சரத்குமாரின் அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சி பாஜகவில் இணைந்துள்ள நிலையில் அக்கூட்டணிக்கு மேலும் வலுவை கொடுத்துள்ளது.
எந்த தொகுதி: இந்த நிலையில் தமிழிசை சவுந்திரராஜன் எந்த தொகுதியில் போட்டியிடுவார் என்ற கேள்வி எழுந்துள்ளது. அவரது 4 தொகுதிகளில் ஏதேனும் ஒரு தொகுதியை தேர்வு செய்வார் என எதிர்பார்க்கப்படுகிறது. முதலில் தூத்துக்குடி, 2ஆவது தென் சென்னை, 3 ஆவது கன்னியாகுமரி, 4ஆவது நெல்லை ஆகிய தொகுதிகளில் அவர் போட்டியிட வாய்ப்புள்ளது.
தூத்துக்குடியில் போட்டி: கடந்த 2019ஆம் ஆண்டு நடந்த தூத்துக்குடி மக்களவை தொகுதியில் திமுக வேட்பாளர் கனிமொழியை எதிர்த்து தமிழக பாஜக தலைவராக இருந்த தமிழிசை சவுந்திரராஜன் போட்டியிட்டார். இந்த தொகுதியில் கடும் போட்டி நிலவியது. இருவருமே பெண் வேட்பாளர்கள், அவர்கள் சார்ந்த கட்சிகளில் முக்கியத்துவம் வாய்ந்தவர்கள், அறிவாளிகள், செல்வாக்கு உடையவர்கள் உள்ளிட்ட பண்புகள் இருந்ததால் எதிர்பார்ப்பு எகிறியது.
தேர்தல் பிரச்சாரமும் அனல் பறந்தது. கருத்துக் கணிப்புகளில் கூட கனிமொழிதான் வெல்வார் என கணிப்புகள் வந்த போதிலும் தமிழிசை விடாமல் போட்டியிட்டு தனது பலத்தை விடாமல் இருந்தார். எனினும் தூத்துக்குடியில் திமுக வேட்பாளர் கனிமொழி 3,24,161 வாக்குகளை பெற்றார். அதிமுக கூட்டணியில் பாஜக சார்பில் களமிறங்கிய தமிழிசை சவுந்திரராஜன் 1,14,401 வாக்குகளை பெற்றார்.
கனிமொழி வெற்றி: கனிமொழி அந்த தேர்தலில் பெற்ற வாக்குகள் 57.43 சதவீதம் ஆகும். தமிழிசை 20.17 சதவீத வாக்குகளை பெற்றார். இந்த தேர்தலில் தூத்துக்குடியிலேயே கனிமொழியை மீண்டும் களமிறங்க திமுக திட்டமிட்டுள்ளது. அதே தொகுதியில் இந்த முறை போட்டியிட்டு விட்டதை பிடிக்க தமிழிசை தீவிரம் காட்டி வருகிறார்.
தூத்துக்குடி இல்லாவிட்டால் தென் சென்னை தொகுதியில் தமிழிசை போட்டியிடலாம் என தெரிகிறது. அந்த தொகுதியில் தற்போது எம்பியாக உள்ளவர் தமிழச்சி தங்கபாண்டியன், எனவே அவரை எதிர்த்து தமிழிசை போட்டியிடலாம். இருவருமே வலிமையான போட்டியாளர்கள்.
கன்னியாகுமரி: அடுத்ததாக கன்னியாகுமரி தொகுதிக்கும் தமிழிசை குறி வைக்கிறார். இது மிகவும் சர்பிரைஸாக இருக்கிறது. காரணம் அந்த தொகுதியின் முன்னாள் எம்பி வசந்தகுமார், தமிழிசையின் சித்தப்பா, தற்போதைய எம்பி விஜய் வசந்த், தமிழிசைக்கு தம்பி முறை வருகிறது. ஆனால் இந்த தொகுதியில் ஒரு சிக்கல் இருக்கிறது. கன்னியாகுமரி தொகுதியில் இந்த முறை பொன் ராதாகிருஷ்ணன் போட்டியிட முயற்சிக்கிறார்.
இது போதா குறைக்கு காங்கிரஸில் இருந்து விலகி வந்த விஜயதாரணியும் கன்னியாகுமரிக்கு குறி வைக்கிறார். காங்கிரஸில் கன்னியாகுமரி கேட்டு கிடைக்காததால்தான் விஜயதாரணி, பாஜகவுக்கு வந்திருக்கிறார். அப்படியிருக்கும் போது பாஜக தலைமை யாருக்கு சீட் கொடுக்கும் என்ற கேள்வி எழுந்துள்ளது.
நெல்லையா: கடைசியாக நெல்லை! நெல்லை தொகுதி எம்பி ஞான திரவியம். இந்த முறை நெல்லை தொகுதி அலெக்ஸ் அப்பாவுக்கோ அல்லு நெல்லை கிழக்கு மாவட்ட அவைத் தலைவர் கிரகாம்பெல்லுக்கோ திமுக ஒதுக்கும் என தெரிகிறது. இதனால் இங்கு தமிழிசை போட்டியிட பாஜக வாய்ப்பு கொடுத்தாலும் கொடுக்கும் என தெரிகிறது. எனவே 4 தொகுதிகளில் தமிழிசை எந்த தொகுதியில் போட்டியிடுகிறார் என்பது இன்னும் ஓரிரு தினங்களில் தெரிந்துவிடும்.












Click it and Unblock the Notifications