ஆம்ஸ்ட்ராங் உடல் அடக்கம்! நீதிபதியாக அல்ல சகோதரியாக சொல்கிறேன்..வேறு இடம் சொல்லுங்க! நீதிபதி கருத்து
சென்னை: சென்னையில் நேற்று முன் தினம் கொடூரமாக வெட்டிக் கொலை செய்யப்பட்ட பகுஜன் சமாஜ் கட்சியின் தமிழ்நாடு தலைவர் ஆம்ஸ்ட்ராங்கின் உடலுக்கு பொதுமக்கள், அரசியல் கட்சி தலைவர்கள் அஞ்சலி செலுத்தி வருகின்றனர். இந்நிலையில் அவரது உடலை கட்சி அலுவலகத்தில் அடக்கம் செய்ய அனுமதி கோரிய மனு மீதான விசாரணையின் போது, நீதிபதியாக அல்ல சகோதரியாக சொல்கிறேன், வேறு இடத்தை கூறுங்கள்' என நீதிபதி கூறியுள்ளார்.
சென்னையில் கொலை செய்யப்பட்ட பகுஜன் சமாஜ் கட்சியின் தமிழ்நாடு தலைவர் ஆம்ஸ்ட்ராங் கொலை குறித்து அடுத்தடுத்து பல்வேறு அதிர்ச்சிகரமான தகவல்கள் வெளியாகி வருகிறது.

நேற்று வீட்டு அருகே ஆம்ஸ்ட்ராங் நின்று கொண்டிருந்த போது ஆறு பேர் கொண்ட மர்ம கும்ப கும்பல் அவரை கொடூரமாக வெட்டி சாய்த்து விட்டு தப்பியது தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
இதை அடுத்து அவரது உடல் சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் உடற்கூறு ஆய்வுக்காக வைக்கப்பட்டது. இதனால் அங்கு வழக்கறிஞர்கள் ஆதரவாளர்கள் பொதுமக்கள் என ஏராளமானோர் கூடியதால் பரபரப்பான சூழல் நிலவியது. மேலும் ஆம்ஸ்ட்ராங் கொலை சம்பவத்தை கண்டித்து தமிழக அரசியல் கட்சித் தலைவர்கள் கண்டன அறிக்கைகள் வெளியிட்டனர்.
இது தொடர்பாக தனிப்படை அமைத்து போலீசார் விசாரணை நடத்தி வந்த நிலையில் கொலையாளிகளாக சரணடைந்தவர்களிடம் தனித்தனியாக விசாரணை நடத்த போலீசார் திட்டமிட்டுள்ளனர். கடந்த சில மாதங்களுக்கு முன்பு சென்னையில் கொலை செய்யப்பட்ட ஆற்காடு சுரேஷின் கொலைக்கு பழிக்கு பலியாக இந்த சம்பவம் அரங்கேறி இருப்பதாக கூறப்படுகிறது.
சரணடைந்த பொன்னை பாலு சுரேஷின் சகோதரர் என்பது தெரிய வந்திருக்கும் நிலையில் ஆற்காடு சுரேஷின் நினைவு நாள் அல்லது பிறந்த நாளில் ஆம்ஸ்ட்ராங்கை கொல்ல திட்டமிட்டதாகவும் தற்போது பிறந்த நாளிலேயே அவர் கொலை செய்யப்பட்டு இருப்பதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியிருக்கிறது. இந்நிலையில் ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் மேலும் 3 பேர் கைதாகியுள்ள நிலையில், கைது செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை 11ஆக அதிகரித்துள்ளது.
முன்னதாக கொலை செய்யப்பட்ட ஆம்ஸ்ட்ராங்கின் உடல் உடற் கூறு ஆய்வுக்குப் பின் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து அவரது உடல் பெரம்பூர் மாநகராட்சி பள்ளி வளாகத்தில் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது. அவரது உடலுக்கு இயக்குனர் வெற்றிமாறன் உள்ளிட்ட திரைப் பிரபலங்கள், அரசியல் கட்சி தலைவர்கள் அஞ்சலி செலுத்தி வருகின்றனர். இந்நிலையில் அவரது உடலை கட்சி அலுவலகத்தில் அடக்கம் செய்ய அனுமதி கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
இதுதொடா்பாக கோரிக்கை மனு ஆம்ஸ்ட்ராங்கின் மனைவியும் வழக்குரைஞருமான பொற்கொடி தரப்பில் சென்னை மாநகராட்சி ஆணையரிடம் அளிக்கப்பட்டது. ஆனால் மாநகராட்சி ஆணையா் எந்த பதிலும் அளிக்கவில்லை எனவும், தங்களது கோரிக்கை தொடா்பாக அவசரமாக விசாரித்து உரிய உத்தரவு பிறப்பிக்க வேண்டும் என பொற்கொடி தரப்பில் சென்னை உயா்நீதிமன்றத் தலைமை நீதிபதி(பொ) மகாதேவனிடம் முறையிடப்பட்டது.
இந்த மனுவை தனி நீதிபதி ஒருவா் விசாரிக்க பொறுப்பு தலைமை நீதிபதி உத்தரவிட்டாா். இதனையடுத்து இன்று காலை காணொலி மூலம் நீதிபதி வி.பவானி சுப்பராயன் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது ஆம்ஸ்ட்ராங்கின் உடல் நல்லடக்கம் செய்யப்படும் இடம் எங்கே ? என்பது தொடர்பாக காரசார விவாதம் நடந்தது. அப்போது, 15 அடி சாலையில் உள்ள இடத்தில் புதைக்க முடியாது.. அருகில் குடியிருப்பு இருப்பதால் கூட்ட நெரிசல் ஏற்பட்டு ஹர்தாஸ் சம்பவம் போல் வர வாய்ப்பு, சட்டம் ஒழுங்கு பிரச்சனை வர வாய்ப்பு உள்ளது எனவும், 40 அடி சாலையாக இருந்தால் மக்கள் வந்து செல்ல ஏதுவாக இருக்கும் பெரிய சாலை, பெரிய இடம் இருந்தால் கேட்டு சொல்லுங்கள். உத்தரவு பிறப்பிக்கிறேன் என கூறினார்.
அப்போது அரசு தரப்பில் மூன்று இடங்கள் தேர்வு செய்யப்பட்டிருக்கிறது, 2000 சதுர அடி தர தயாராக இருக்கிறோம் என அரசு தரப்பு வாதத்தை முன் வைத்தது. அப்போது, இது குறித்து ஆம்ஸ்ட்ராங் குடும்பத்தினரிடம் கருத்தை பெற்று தெரிவியுங்கள் என்றும், நீதிபதியாக அல்ல சகோதரியாக சொல்கிறேன், வேறு இடத்தை கூறுங்கள்.. ஆம்ஸ்ட்ராங்கின் மரணம் பெரிய இழப்பாக இருந்தாலும் சட்ட விதிகளை மீற முடியாது. 2,400 சதுர அடி நிலத்தை அரசு வழங்குகிறது அல்லவா? வேறு பெரிய இடம் இருந்தால் சொல்லுங்கள் உத்தரவிடுகிறேன்" என்று கூறி வழக்கின் விசாரணையை ஒத்திவைத்தார்.












Click it and Unblock the Notifications