இன்னும் ஒரு சான்ஸ் இருக்கு.. அங்க போய் பார்த்துக்கோங்க.. ஓபிஎஸ் தரப்புக்கு அறிவுறுத்திய ஐகோர்ட்!
சென்னை: ஓ.பன்னீர்செல்வம் தரப்பினர் அஇஅதிமுக கட்சியின் பெயர், கொடி, சின்னம், லெட்டர் பேட் ஆகியவற்றை பயன்படுத்துவதற்கு விதிக்கப்பட்ட தடைக்கு எதிராக தொடரப்பட்ட மேல்முறையீட்டு மனுவை தள்ளுபடி செய்து தீர்ப்பளித்த ஐகோர்ட் இரு நீதிபதிகள் அமர்வு, தனி நீதிபதியிடம் உள்ள பிரதான வழக்கில், இதுகுறித்து முறையிட்டுக் கொள்ள ஓபிஎஸ் தரப்புக்கு அறிவுறுத்தினர்.
முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அவரது அணியினர் அஇஅதிமுக கட்சியின் பெயர், கொடி, சின்னம், லெட்டர் பேட் ஆகியவற்றை பயன்படுத்துவதற்கு விதிக்கப்பட்ட தடையை நீக்க சென்னை உயர்நீதிமன்ற இரு நீதிபதிகள் கொண்ட அமர்வு மறுத்துவிட்டது.

அதிமுகவிலிருந்து நீக்கப்பட்ட ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அவரது ஆதரவாளர்கள் அதிமுக கட்சியின் பெயர், கொடி, சின்னம், லெட்டர் பேட் ஆகியவற்றை தொடர்ந்து பயன்படுத்தி வருவது தொண்டர்கள் மத்தியில் குழப்பத்தை ஏற்படுத்தி வருவதாகவும், அவற்றை பயன்படுத்துவதற்கு ஒபிஎஸ் அணியினருக்கு தடை விதிக்க கோரி அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி தரப்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.
இந்த வழக்கை விசாரித்த உயர் நீதிமன்ற தனி நீதிபதி, அதிமுக கட்சியின் பெயர், சின்னம், கொடி, லெட்டர் பேட் ஆகியவற்றை பயன்படுத்த ஓ.பன்னீர் செல்வம் தரப்புக்கு இடைக்காலத் தடை விதித்து உத்தரவிட்டார். இந்த உத்தரவை எதிர்த்து ஓ.பன்னீர் செல்வம் தரப்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது.
அந்த மனுவில், கட்சியில் இருந்து தன்னை நீக்கியதற்கு எதிரான பிரதான வழக்கு உயர் நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளதால், தனது நீக்கத்திற்கு இடைக்கால தடை விதிக்க முடியாது என்று தான் உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளதாகவும், அந்த உத்தரவை எதிர்த்த வழக்கு உச்ச நீதிமன்றத்தில் விரைவில் விசாரணைக்கு வர இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டது.
இந்த மனு நீதிபதிகள் மகாதேவன் மற்றும் முகமது சபீக் அமர்வில் விசாரிக்கப்பட்டது. ஓ.பி.எஸ் தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் அரவிந்த் பாண்டியன், தகுதி நீக்கம் செல்லும் என ஏற்கனவே இரண்டு நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவை அடிப்படையாக கொண்டு புதிய வழக்கில் தனி நீதிபதி இடைக்கால உத்தரவு பிறப்பிக்க முடியாது என்றும், தங்கள் தரப்பு வாதங்களை கேட்காமலேயே இடைக்கால தடை விதித்தது தவறு என்றும் வாதிட்டார்.
அதிமுக கொடி, சின்னம் உள்ளிட்டவற்றைப் பயன்படுத்த கூடாது என்ற ஐகோர்ட் தனி நீதிபதியின் இடைக்கால உத்தரவு என்பது வழக்கின் இறுதி தீர்ப்புக்கு சமமானது என்பதால் நீதிபதியின் உத்தரவை ரத்து செய்ய வேண்டும் எனவும் வாதிட்டார்.
ஓ.பி.எஸ் தரப்பில் ஆஜரான மற்றொரு மூத்த வழக்கறிஞர் அப்துல் சலீம், அதிமுகவில் மூன்று கொடிகள் உள்ள நிலையில், எந்தக் கொடியை பயன்படுத்த தடை கோருகிறார் என எடப்பாடி பழனிசாமி வழக்கில் சொல்லவில்லை எனவும், அண்ணா விரல் காட்டுவது தான் உண்மையான கொடி என்பதால் அதை ஓபிஎஸ் பயன்படுத்தி வருவதாகத் தெரிவித்தார்.
லட்சக்கணக்கான தொண்டர்களின் ஆதரவு ஓ.பி.எஸ்ஸுக்கு உள்ளதாகவும், அவர்கள் யாரும் கட்சியில் இருந்து நீக்கப்படாத நிலையில், அவர்களுக்கும் எப்படி தடை விதிக்க முடியும் எனவும் வாதிடப்பட்டது. மேலும் ஓபிஎஸ் ஆதரவாளர்களின் கைகளில் கட்சி சின்னமான இரட்டை இலையை பச்சை குத்தி உள்ள நிலையில், தனி நீதிபதி உத்தரவால் அதை எப்படி நீக்க முடியும் எனவும் கேள்வி எழுப்பினார்.
கட்சியில் இருந்து நீக்கப்பட்டது செல்லுமா செல்லாதா என்பது குறித்து பிரதான சிவில் வழக்கில் தான் முடிவெடுக்க முடியும் என்றும், எந்த காரணமும் குறிப்பிடாமல் பிறப்பிக்கப்பட்ட தடை உத்தரவு செல்லத்தக்கது அல்ல என்றும் ஓபிஎஸ் தரப்பில் வாதிடப்பட்டது.
எடப்பாடி பழனிசாமி தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் விஜய் நாராயண், தனி நீதிபதியிடம் உள்ள வழக்கில் பதில் மனு தாக்கல் செய்ய ஓ.பி.எஸ் தரப்பில் ஆர்வம் காட்டவில்லை என்பதை அறிந்த பிறகே இந்த இடைக்கால தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டதாகத் தெரிவித்தார். மேலும், கட்சியில் உறுப்பினராக இல்லாத போது அதன் பெயர், கொடி, சின்னம் ஆகியவற்றை பயன்படுத்த முடியாது எனவும் வாதிட்டார்.
அதிமுக கட்சியில் இருந்து நீக்கப்பட்ட ஓ.பி.எஸ், இன்னும் 'எக்ஸ்' சமூக வலைதளத்தில் தன்னை ஒருங்கிணைப்பாளர் என்றே குறிப்பிடுவதாகவும், ஒருங்கிணைப்பாளர் என்று கூறியே அறிக்கை வெளியிடுவதாகவும் எடப்பாடி பழனிசாமி தரப்பில் குற்றம் சாட்டப்பட்டது. அதிமுக பொதுச் செயலாளராக எடப்பாடி பழனிசாமியை தேர்தல் ஆணையம் அங்கீகரித்துள்ளதாகவும, ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் பதவிகளை கலைத்ததையும் தேர்தல் ஆணையம் அங்கீகரித்துள்ளதையும் சுட்டிக்காட்டினார்.
இரு தரப்பு வாதங்களும் முடிவடைந்திருந்த நிலையில், மனு மீதான தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் நீதிபதிகள் தள்ளி வைத்திருந்தனர். இந்த வழக்கில், இன்று தீர்ப்பளிக்கப்பட்டது. அதில், அதிமுகவின் கட்சி பெயர், கொடி, சின்னம், லெட்டர் பேட் உள்ளிட்டவற்றை ஓபிஎஸ் மற்றும் அவரது ஆதரவாளர்கள் பயன்படுத்த விதிக்கப்பட்ட இடைக்காலத் தடையை நீக்க நீதிபதிகள் மறுத்து விட்டனர்.
மேலும், ஓபிஎஸ்ஸின் மேல்முறையீட்டு மனுவை தள்ளுபடி செய்த நீதிபதிகள், தனி நீதிபதியிடம் உள்ள பிரதான வழக்கில், இதுகுறித்து முறையிட்டுக் கொள்ள ஓபிஎஸ் தரப்புக்கு அறிவுறுத்தினர்.












Click it and Unblock the Notifications