இளைஞர் சாவுக்கு காரணம் போலீசார்? பிரேத பரிசோதனையை முழுமையாக வீடியோ எடுக்க ஐகோர்ட் உத்தரவு!
சென்னை: விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்ட நிலையில், காவல் நிலையத்தில் மரணமடைந்த தூத்துக்குடியை சேர்ந்த பாலகிருஷ்ணன் உடலை கோவை அரசு மருத்துவமனையில் பிரேதப் பரிசோதனை செய்யவும், முழுமையாக வீடியோ பதிவு செய்யவும் சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
தூத்துக்குடி மாவட்டம் வல்லநாடு பகுதியைச் சேர்ந்த பாலகிருஷ்ணனின் சகோதரர் மாரியப்பன் தாக்கல் செய்த மனுவில், தன்னுடைய தம்பி பாலகிருஷ்ணன் மீது சில குற்ற வழக்குகள் உள்ளதாகவும், கடந்த டிசம்பர் மாதம் நண்பர்களுடன் ஈரோடு சென்றபோது அவரை, சென்னிமலை காவல் நிலைய போலீசார் அடித்ததில் இறந்துவிட்டதாக, தனது வழக்கறிஞர் தெரிவித்ததையடுத்து, பெருந்துறை அரசு மருத்துவமனைக்கு சென்று பார்த்தபோது பாலகிருஷ்ணனின் உடலில் லத்தியால் அடித்ததற்கான காயங்கள் இருந்ததாக தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக மருத்துவமனை நிர்வாகத்திடம் கேட்டபோது, எந்தவித தகவலும் தெரிவிக்கவில்லை, அவனது நண்பர்களிடம் விசாரித்தபோது, டாஸ்மாக் மதுபானம் அருந்திக்கொண்டு இருந்தபோது, ஈரோடு காவல் கண்காணிப்பாளர் மற்றும் பெருந்துறை டி.எஸ்.பி-யின் தனிப்படை காவல்துறையினர், பாருக்குள் நுழைந்து தன்னுடைய தம்பியை டெம்போவில் ஏற்றி ரகசியமான இடத்திற்கு அழைத்து சென்று தாக்கியதாகவும், கொடூரமான முறையில் தாக்கியதில், ஜனவரி 2ஆம் தேதி இறந்துவிட்டதாக தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக கடந்த 3ஆம் தேதி தமிழக டிஜிபி-க்கு அளித்த மனு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை எனவும், மனு மீது நடவடிக்கை எடுக்க உத்தரவிடக் கோரியும், பாருக்குள் வைக்கபட்டுள்ள சிசிடிவி கேமராக்களின் காட்சிகளை பாதுகாக்கவும், பிரேதப் பரிசோதனையை வேறு அரசு மருத்துவமனையில் நடத்தவும் அதனை வீடியோ பதிவு செய்யவும், நியாயமான விசாரணையை நடத்த உத்தரவிட வேண்டுமென மனுவில் கோரிக்கை வைக்கப்பட்டது.
இந்த வழக்கு நீதிபதி என்.ஆனந்த் வெங்கடேஷ் முன்பு விசாரணைக்கு வந்தபோது, மனுதாரர் தரப்பில், காவல்துறை பாலகிருஷ்ணனனை கைது செய்தது குறித்து, தங்களுக்கு தெரிவிக்கவில்லை என்றும், காவல்துறையின் செயலை மறைக்கும் நோக்கில் காவல்துறை மற்றும் மருத்துவர்கள் கூட்டாக சேர்ந்து செயல்படுகிறார்கள் என்பதாலும், ஆதாரங்களை அழிக்கும் நோக்கில் அவசர கதியில் பிரேதப் பரிசோதனை செய்ய முடிவெடுத்துள்ளதாக தெரிவித்தார்.
பின்னர் நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் பிறப்பித்த உத்தரவில், பாலகிருஷ்ணனின் உடலை உடனடியாக கோவை அரசு பொது மருத்துவமனைக்கு கொண்டு சென்று, அதன் முதல்வர் மற்றும் மாஜிஸ்திரேட் மேற்பார்வையில் பிரேதப் பரிசோதனை செய்ய வேண்டும் என உத்தரவிட்டுள்ளார். மேலும், பிரேதப் பரிசோதனை முழுவதையும் வீடியோ பதிவு செய்ய வேண்டும் எனவும், மரணம் தொடர்பான விசாரணயை முறையாக நடத்த வேண்டும் எனவும் உத்தரவிட்டு வழக்கை முடித்து வைத்தார்.












Click it and Unblock the Notifications