நிலம் அபகரிப்பு.. அதிமுக MP தம்பிதுரைக்கு எதிரான வழக்கு! மாவட்ட ஆட்சியருக்கு ஐகோர்ட் அதிரடி உத்தரவு!
சென்னை: அதிமுக எம்.பி தம்பிதுரைக்கு சொந்தமான கல்வி நிறுவனம் ஆக்கிரமித்துள்ள கிராம நிலத்தை மீட்க திருவள்ளூர் மாவட்ட ஆட்சியருக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
திருவள்ளூர் மாவட்டம், கோணாம்பேடு கிராம பொது நல சங்க தலைவர் ஜி.கருணாநிதி சார்பில், சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கறிஞர் எம்.புருஷோத்தமன் மனு ஒன்றை செய்திருந்தார். அவர் தாக்கல் செய்த மனுவில், திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள கோணாம்பேடு, நாராயணபுரம் போன்ற கிராமங்களில், அரசியல்வாதிகளும், அவர்களது குடும்பங்களை சேர்ந்தவர்களும், பள்ளி மற்றும் கல்லுாரிகளை கட்டி உள்ளனர்.

செயின்ட் பீட்டர்ஸ் உயர் கல்வி நிறுவனம், செயின்ட் ஜோசப் கல்வி அறக்கட்டளைக்கு சொந்தமான பள்ளிகள், பொறியியல் கல்லுாரிகள், நிகர்நிலை பல்கலை உள்ளன. அதிமுக, எம்.பி தம்பிதுரையின் குடும்ப உறுப்பினர்கள், செயின்ட் ஜோசப் கல்வி அறக்கட்டளையில் அறங்காவலர்களாக அங்கம் வகிக்கின்றனர்.
வருவாய் ஆவணங்களில், நீர் பிடிப்பு, கல்லாங்குத்து என வகைப்படுத்தப்பட்ட நிலங்களை ஆக்கிரமிப்பு செய்து, மாணவ மாணவியருக்கான கல்லுாரி விடுதிகள், பயிலகம், துணைமின் நிலையம், கல்லுாரி பஸ்களை நிறுத்த தனி சாலை போன்றவற்றை அமைத்து உள்ளனர். கடந்த 2001 ஆம் ஆண்டு முதல், பொது நிலங்களை ஆக்கிரமித்து வருகின்றனர். திருவள்ளூர் மாவட்ட கலெக்டர், கோட்டாட்சியர் உள்ளிட்டோர் நிலங்களை அளந்து, ஆக்கிரமிப்புகளை அகற்ற உத்தரவிட வேண்டும் என்க் கோரப்பட்டிருந்தது.
இந்த மனு, கடந்த பிப்ரவரி 10 ஆம் தேதி நீதிபதிகள் எஸ்.எம்.சுப்பிரமணியம், சி.குமரப்பன் முன் விசாரணைக்கு வந்தது. அப்போது, அரசு தரப்பில் தாக்கல் செய்த சர்வே அறிக்கைக்கு அதிருப்தி தெரிவித்த நீதிபதிகள், கிராமத்தில் ஆக்கிரமிக்கப்பட்டுள்ள நிலங்களை மீண்டும் அளவீடு செய்து, இரண்டு வாரங்களில் அறிக்கை அளிக்கும்படி, மாவட்ட ஆட்சியருக்கு உத்தரவிட்டு, விசாரணையை தள்ளிவைத்தனர்.
இந்த மனு இன்று விசாரணைக்கு வந்த போது, மாவட்ட ஆட்சியர் தரப்பில் விரிவான அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. மேலும், ஆக்கிரமிப்புகளை அகற்ற அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டு உள்ளது எனத் தெரிவிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து சம்பந்தப்பட்ட நிலங்களை 12 வாரங்களுக்குள் மீட்க வேண்டும் என திருவள்ளூர் மாவட்ட ஆட்சியருக்கு நீதிபதிகள் உத்தரவிட்டனர்.












Click it and Unblock the Notifications