நடிகர்கள் ஸ்ரீகாந்த், கிருஷ்ணா ஜாமீன் கேட்டு மனு.. தீர்ப்பை நாளைக்கு ஒத்தி வைத்தது சென்னை ஹைகோர்ட்
சென்னை: போதைப் பொருள் பயன்படுத்திய வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள நடிகர்கள் ஸ்ரீகாந்த், கிருஷ்ணா ஆகியோரின் ஜாமீன் மனு மீது இன்று சென்னை உயர்நீதிமன்றம் விசாரித்தது. விசாரணை முடிந்த நிலையில், இந்த வழக்கில் நாளை தீர்ப்பளிக்கப்படும் என தீர்ப்பை தள்ளிவைத்தார். ஏற்கெனவே இவர்களது ஜாமீன் மனு சிறப்பு நீதிமன்றத்தால் தள்ளுபடி செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.
முன்னதாக, இவர்கள் இருவரும் போதைப்பொருள் தடுப்பு வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்தில் ஜாமீன் கோரி மனு தாக்கல் செய்திருந்தனர். ஆனால், அந்த மனுக்கள் நீதிபதி ஹெர்மிஸ் அவர்களால் கடந்த ஜூலை 3 அன்று தள்ளுபடி செய்யப்பட்டன. அப்போது, காவல்துறை தரப்பில் ஆஜரான சிறப்பு அரசு வழக்கறிஞர் கே.ஜே.சரவணன், இருவருக்கும் ஜாமீன் வழங்கக் கூடாது என வாதிட்டார்.

இதனைத் தொடர்ந்து, ஸ்ரீகாந்த் மற்றும் கிருஷ்ணா ஆகியோர் சென்னை உயர் நீதிமன்றத்தில் ஜாமீன் கோரி மனு தாக்கல் செய்துள்ளனர். இந்த மனுக்கள் இன்று (திங்கள்கிழமை) நீதிபதி நிர்மல்குமார் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது.
ஸ்ரீகாந்த் தனது மனுவில், தன்னைத் தவறாகக் கைது செய்திருப்பதாகவும், போதைப்பொருள் கடத்தலுடன் தனக்குத் தொடர்பில்லை என்றும் குறிப்பிட்டுள்ளார். மேலும், தான் விசாரணைக்கு முழு ஒத்துழைப்பு தருவதாகவும் தெரிவித்துள்ளார். கிருஷ்ணா தரப்பில், மருத்துவப் பரிசோதனையில் அவர் போதைப்பொருள் பயன்படுத்தவில்லை என்பது உறுதியாகியுள்ளதாக வாதிடப்பட்டுள்ளது.
மதியம் 3 மணியளவில் இந்த மனு விசாரணைக்கு வந்தது. விசாரணை அனைத்தும் முடிந்த நிலையில், நடிகர்கள் ஸ்ரீகாந்த், கிருஷ்ணாவுக்கு ஜாமீன் வழங்குவது குறித்து நாளை தீர்ப்பளிக்கப்படும் என்று நீதிபதி நிர்மல் குமார் தள்ளி வைத்து உத்தரவிட்டார்.
கடந்த ஜூன் 24 அன்று கொகைன் போதைப்பொருள் பயன்படுத்தியதாக நடிகர் ஸ்ரீகாந்தை நுங்கம்பாக்கம் போலீசார் கைது செய்தனர். நீதிமன்ற உத்தரவின்படி, அவர் ஜூலை 7 ஆம் தேதி வரை நீதிமன்றக் காவலில் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
ஸ்ரீகாந்த்துடன் தொடர்புடைய இந்த வழக்கில் நடிகர் கிருஷ்ணாவும் சமீபத்தில் கைது செய்யப்பட்டார். இந்த வழக்கில் காவல்துறை இதுவரை 25 நபர்களைக் கைது செய்துள்ளது. இவர்களுக்கு மூளையாகச் செயல்படுபவர்கள் யார் என்பதைக் கண்டறியும் வகையில் விசாரணை தொடர்கிறது. நைஜீரிய நாட்டு நபர்களும் இந்த வழக்கில் தேடப்பட்டு வருகின்றனர்.
சிறப்பு நீதிமன்றத்தில் ஜாமீன் மறுக்கப்பட்டதைத் தொடர்ந்து, நடிகர்கள் ஸ்ரீகாந்த் மற்றும் கிருஷ்ணா ஆகியோர் தற்போது சென்னை உயர் நீதிமன்றத்தில் ஜாமீன் கோரி மனு தாக்கல் செய்துள்ளனர். தனது ஜாமீன் மனுவில் ஸ்ரீகாந்த், காவல்துறை சுமத்திய குற்றச்சாட்டுகள் பொய்யானவை என்றும், தன்னை உள்நோக்கத்துடன் வழக்கில் சேர்த்துள்ளனர் என்றும் குறிப்பிட்டுள்ளார். மேலும், தனது குழந்தைக்கு உடல்நிலை சரியில்லாததால் ஜாமீன் வழங்க வேண்டும் என்றும், விசாரணைக்கு முழு ஒத்துழைப்பு தருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
கிருஷ்ணா தரப்பில், மருத்துவப் பரிசோதனையில் அவர் போதைப்பொருள் பயன்படுத்தவில்லை என்பது உறுதியாகியுள்ளதாகவும், போதைப்பொருள் பயன்படுத்தியதற்கும், கைவசம் வைத்திருப்பதற்கும் வித்தியாசம் இருப்பதாகவும் வாதிடப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications