தேர்தல் ரிசல்ட் யாருக்கு சாதகம்? ஆளுங்கட்சி? எதிர்க்கட்சி? புதுக் கட்சி? தொகுதிகளில் என்ன நடக்கும்?

Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழ்நாட்டில் 2026 சட்டசபை தேர்தலுக்கான வாக்குப் பதிவு 234 தொகுதிகளிலும் ஏப்ரல் 23 ஆம் தேதி ஒரே கட்டமாக நடந்து முடிந்தது. இந்தத் தேர்தலில் 85.15 சதவிகித வாக்குகள் பதிவாகியுள்ளன. வாக்குப்பதிவு சதவீதம் அதிகரித்துள்ளது ஆளும் கட்சிக்கு சாதகமா? அல்லது எதிர்க்கட்சிக்கு சாதகமா? அல்லது இளம் வாக்காளர்களின் எழுச்சியால் புதிய கட்சிக்கு சாதகமா என அலசப்பட்டு வருகிறது.

பொதுவாக அதிகரிக்கும் வாக்குப்பதிவு ஆளுங்கட்சிக்கு பாதிப்பை ஏற்படுத்தும் என்று கணிக்கப்படுகிறது. ஆளும் அரசுக்கு எதிராக அதிருப்தி வாக்குகளை எதிர்க்கட்சிகள் பெறுவதே இதற்குக் காரணம். ஆனால், இந்த முறை வாக்குப்பதிவு சதவீதம் அதிகரித்திருந்தாலும், பதிவான வாக்குகளின் எண்ணிக்கையில் மிகப்பெரிய மாற்றம் நடக்கவில்லை.

Tamil Nadu Election 2026 polling election dmk

எஸ்ஐஆர் எனப்படும் வாக்காளர் பட்டியல் சிறப்புத் தீவிர திருத்தப் பணிகளால் இந்த வாக்குப் பதிவு சதவிதம் உயர்ந்து இருக்கலாம் எனக் கருதப்படுகிறது. ஏனெனில், தமிழ்நாட்டில் எஸ்ஐஆரின் பெயரால் 97.37 லட்சம் வாக்காளர்கள் நீக்கப்பட்டனர்.
இதில், 66.44 லட்சம் பேர் இடம்பெயர்ந்தவர்கள், 26.9 லட்சம் பேர் உயிரிழந்தவர்கள், 3.98 லட்சம் பேர் இரட்டைப் பதிவைக் கொண்டிருந்தவர்கள் எனத் தேர்தல் ஆணையம் தெரிவித்தது.

பிறகு, 18 வயது நிரம்பிய முதல் தலைமுறை வாக்காளர்கள் சுமார் 15 லட்சம் பேர் மற்றும் நீக்கப்பட்டவர்கள் உள்பட 27 லட்சம் பேர் இறுதி வாக்காளர் பட்டியலில் சேர்க்கப்பட்டனர். சிறப்புத் தீவிர திருத்தத்திற்கு முன்பு 6.41 கோடியாக இருந்த தமிழக வாக்காளர்களின் எண்ணிக்கை, எஸ்ஐஆர் நடவடிக்கைக்குப் பிறகு 5.73 கோடியாக குறைந்தது.

வழக்கமாக, ஒவ்வொரு தேர்தலின்போதும் 20 முதல் 30 லட்சம் வாக்காளர்கள் அதிகரிப்பார்கள். இது இயல்பானது. இந்த ஆண்டு சேர்க்கப்பட்ட புதிய இளைய வாக்காளர்கள் எண்ணிக்கை சுமார் 14 லட்சம், இவர்கள் அனைவரும் வாக்களிக்க ஆர்வம் காட்டியதும் வாக்குப்பதிவு சதவிகிதம் அதிகரிக்க காரணமாக இருந்திருக்கும் எனக் கருதப்படுகிறது. எஸ்ஐஆர் பணிகளால் ஏறக்குறைய 10 சதவீதத்திற்கும் அதிகமான வாக்காளர்கள் நீக்கப்பட்டிருப்பதால், இயல்பாகவே வாக்குப் பதிவு சதவீதம் உயர்ந்துள்ளது.

கடந்த 2021 சட்டப்பேரவைத் தேர்தலில் 4.63 கோடி வாக்குகள் பதிவான நிலையில், 2026 சட்டசபை தேர்தலில் 4.88 கோடி வாக்குகள் பதிவாகியுள்ளன. அதாவது, கடந்த தேர்தலைவிட சுமார் 25 லட்சம் வாக்குகள் அதிகம் பதிவாகியுள்ளன. இது ஒவ்வொரு தேர்தலுக்கும் அதிகரிக்கும் எண்ணிக்கைதானே தவிர ஆச்சர்யப்பட ஒன்றுமில்லை.

தமிழக சட்டசபை தேர்தல் வரலாற்றில் இதுவரையிலான தேர்தல்களில் வாக்குப்பதிவு

1951 சட்டசபை தேர்தல் - 54.75% - ராஜாஜி தலைமையிலான காங்கிரஸ் ஆட்சி
1957 சட்டசபை தேர்தல் - 46.56% காமராஜர் தலைமையிலான காங்கிரஸ் ஆட்சி அமைந்தது
1962 சட்டசபை தேர்தல் - 70.65% காமராஜர் ஆட்சி அமைந்தது
1967 சட்டசபை தேர்தல் - 76.57% ஆட்சி மாற்றம் ஏற்பட்டு முதன்முறையாக திமுக வென்றது
1971 சட்டசபை தேர்தல் - 72.10% திமுக ஆட்சி தொடர்ந்தது

1977 சட்டசபை தேர்தல் - 61.58% ஆட்சி மாற்றம் நடைபெற்று முதன்முறையாக அதிமுக வெற்றி பெற்றது
1980 சட்டசபை தேர்தல் - 65.42% அதிமுக ஆட்சி தொடர்ந்தது
1984 சட்டசபை தேர்தல் - 73.47% அதிமுக ஆட்சி தொடர்ந்தது
1989 சட்டசபை தேர்தல் - 69.69% ஆட்சி மாற்றம் நிகழ்ந்து திமுக வெற்றி பெற்றது
1991 சட்டசபை தேர்தல்- 63.84% ஆட்சி மாற்றம் நிகழ்ந்து அதிமுக வெற்றி பெற்றது முதன்முறையாக ஜெயலலிதா முதலமைச்சர் ஆனார்

1996 சட்டசபை தேர்தல் - 66.95% ஆட்சி மாற்றம் நிகழ்ந்து திமுக வெற்றி பெற்றது
2001 சட்டசபை தேர்தல் - 59.07% ஆட்சி மாற்றம் நிகழ்ந்து அதிமுக வெற்றி பெற்றது
2006 சட்டசபை தேர்தல் - 70.82% ஆட்சி மாற்றம் நிகழ்ந்து திமுக வெற்றி பெற்றது
2011 சட்டசபை தேர்தல் - 78.01% ஆட்சி மாற்றம் நிகழ்ந்து அதிமுக வெற்றி பெற்றது
2016 சட்டசபை தேர்தல் - 74.24% அதிமுக ஆட்சி தொடர்ந்தது
2021 சட்டசபை தேர்தல் - 72.73% ஆட்சி மாற்றம் நிகழ்ந்து திமுக வெற்றி பெற்றது
2026 சட்டசபை தேர்தல் - 85% ?

வாக்குப்பதிவும் ஆட்சி மாற்றமும்

பொதுவாக, வாக்குப்பதிவு அதிகரிக்கும்போது ஆட்சி மாற்றம் ஏற்படும் என்ற கருத்து உண்டு. ஆட்சி மீதான அதிருப்தி அலையால் அதிகமானோர் வாக்களிக்க உந்தப்படுவார்கள் என்பது கடந்த கால தேர்தல் முடிவுகள் உணர்த்தும் செய்தி. எனினும், வாக்குப்பதிவு குறைந்தபோது ஆட்சி மாற்றமும், வாக்குப்பதிவு உயர்ந்தபோது ஆட்சி தொடர்ந்ததும் கூட நடந்துள்ளது. கடந்த 2021 தேர்தலிலேயே வாக்குப்பதிவு குறைந்தபோதும், அதிமுக ஆட்சி அகற்றப்பட்டு திமுக ஆட்சிக்கு வந்தது.

எஸ்.ஐ.ஆர் முக்கிய காரணம்

கடந்த முறையை விட இந்த முறை வாக்குப்பதிவு அதிகரிப்புக்கு எஸ்.ஐ.ஆர் ஒரு முக்கியமான காரணம். இந்த முறை எஸ்.ஐ.ஆர் நடவடிக்கைகளுக்குப் பிறகு சுமார் 70 லட்சம் வாக்காளர்கள் நீக்கப்பட்டுவிட்டனர். இதனால் வாக்காளர்கள் எண்ணிக்கை 5.73 கோடியாக குறைந்தது.

கடந்த தேர்தலில் 4.63 கோடி வாக்காளர்கள் மொத்தமாக வாக்களித்திருந்தனர். இந்த தேர்தலில் அது 4.88 கோடியாக அதிகரித்துள்ளது. சுமார் 25 லட்சம் வாக்காளர்கள் அதிகமாக வாக்களித்துள்ளனர். வாக்கு சதவீதம் அதிகரிப்புக்கு எஸ்.ஐ.ஆர் பணிகளும் முக்கியமான காரணம் என்பதால், வாக்கு எண்ணிக்கை அதிகரிப்பால் ஆட்சி மாற்றம் நடக்கும் எனச் சொல்ல முடியாது என்கிறார்கள் அரசியல் நோக்கர்கள்.

தேர்தல்கள் - ஒப்பீடு

2006 ஆம் ஆண்டு தேர்தலில் 2001 சட்டசபை தேர்தலில் வாக்களித்தவர்களை விட 48 லட்சம் பேர் கூடுதலாக வாக்களித்தனர்.
2011 தேர்தலில் 2006- ஆம் ஆண்டை விட கூடுதலாக 40 லட்சம் வாக்களித்திருந்தனர்.
2016 தேர்தலில் 2011- ஆம் ஆண்டை விட கூடுதலாக 64 லட்சம் பேர் வாக்களித்தனர்.
2021 தேர்தலில் 2016- ஆம் ஆண்டை விட கூடுதலாக 26 லட்சம் பேர் வாக்களித்தனர்.
2026 சட்டசபை தேர்தலில் 2021- ஆம் ஆண்டை விட கூடுதலாக 25 லட்சம் பேர் மட்டுமே வாக்களித்துள்ளனர்.

எந்தக் கட்சிக்கும் சாதகமாக மிகப்பெரிய அலை நிகழவில்லை. நான்கு முனைப் போட்டி காரணமாக பல சட்டசபை தொகுதிகளில் மிகக் கடுமையான போட்டி இருக்கலாம். குறைந்த வாக்கு வித்தியாசத்திலேயே முதல் 3 இடங்களை வேட்பாளர்கள் பிடிக்கக்கூடும் எனக் கூறப்படுகிறது. வெற்றி தோல்வியை நிர்ணயிக்கும் வாக்குகளின் எண்ணிக்கை குறைவாக இருக்கும். அதேசமயம், இந்த வாக்குப்பதிவு எண்ணிக்கை எந்தக் கட்சிக்கு சாதகம் எனச் சொல்ல முடியாது என்கிறார்கள் அரசியல் பார்வையாளர்கள்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+